சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மாணவர்கள் கடந்த 42 நாட்களாக தமிழகத்தின் மற்ற அரசு மருத்துவக் கல்லூரியில் வசூலிக்கும் கல்விக் கட்டணத்தைப் போலவே சிதம்பரம் ராஜா முத்தையா அரசு மருத்துவக் கல்லூரியிலும் கட்டணம் வசூலிக்க வேண்டும் என ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வடிவத்தில் அறவழியில் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
இவர்களின் போராட்டம் நோயாளிகளுக்கும், பொதுமக்களுக்கும் எந்த இடையூறும் இல்லாமல் கல்லூரி நேரம் முடிந்தும் உணவு இடைவேளை நேரத்திலும் 42 நாட்களாக தொடர்ந்து வருகிறது. இவர்களின் போராட்டத்தை தமிழக அரசும், பல்கலைக்கழக நிர்வாகமும் ஒரு பொருட்டாக எடுத்துக்கொள்ளவில்லை.
இதனால் விரக்தி அடைந்த மாணவர்கள் மற்றும் மருத்துவர்கள் 500க்கும் மேற்பட்டவர்கள் புதன் கிழமை அவசர சிகிச்சை தவிர மற்ற அனைத்து பணிகளையும் தவிர்த்து பல்கலைக்கழக மருத்துவக் கல்லூரியில் ஒன்றுகூடி காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதனால் மருத்துவக் கல்லூரிக்கு இன்று சிகிச்சைக்கு வந்த புறநோயாளிகள், உள்நோயாளிகள் என அனைவரும் பாதிக்கப்பட்டனர்.
தமிழக அரசு மாணவர் நலனில் செவிசாய்க்காமல் இருக்குமேயானால் வரும் வெள்ளிக்கிழமை முதல் அவசர சிகிச்சை பிரிவு உள்ளிட்ட எந்தப் பணிக்கும் பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் மருத்துவர்கள் செல்லாமல் பணியைப் புறக்கணித்து காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாகவும் அறிவித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து வியாழக்கிழமை வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களுக்கு பல்கலைக்கழக நிர்வாகம், காலவரையற்ற விடுமுறை அளித்து விடுதி மற்றும் கல்லூரி வளாகத்தில் இருந்து வெளியேற உத்தரவிட்டது.
இதனைத் தொடர்ந்து விடுதியில் இருந்த மாணவிகளை வலுக்கட்டாயமாக வெளியேற்றியுள்ளனர். பின்னர் அனைத்து மாணவர்களும், மாணவி விடுதி தாமரை இல்லத்தின் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர் இதனால் கல்லூரி வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.