தென்காசி மாவட்டம் செங்கோட்டையில் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் தலைமை ஆசிரியரை கண்டித்து பள்ளி வளாகத்திற்கு வெளியில் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கடந்த ஒன்பதாம் தேதி செங்கோட்டை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் வாசனை திரவிய பாட்டில் விழுந்து உடைந்தது. இதனால் 14 மாணவிகள் மயக்கம் அடைந்தனர். சில மாணவிகளுக்கு மூச்சுத் திணறலும் ஏற்பட்டது. மாணவிகள் அனைவரும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்றனர். இந்நிலையில் இன்று காலை பள்ளிக்கு வந்த மாணவிகள் 200க்கும் மேற்பட்டோர் பெற்றோர்களின் ஆதரவுடன் பள்ளி அமைந்துள்ள சாலைப் பகுதியில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
2 மணி நேரமாக இந்த போராட்டம் நடைபெற்றது. பாட்டில் விழுந்து உடைந்த உடன் ஆசிரியரிடம் சொன்னதாகவும் ஆனால் ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர் என யாருமே எந்த விதமான நடவடிக்கை எடுக்கவில்லை. ஆனால் மாணவிகள் மீது பழி சுமத்துகின்றனர் என்று மாணவிகள் தெரிவித்தனர். உடனடியாக அங்கு வந்த காவல்துறையினர் மாணவிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் போராட்டம் தொடர்ந்து நடைபெற்றதால் கோட்டாட்சியர் லாவண்யா நேரில் சென்று மாணவிகளிடம் விசாரணை நடத்தினார்.
விசாரணைக்கு பின் மாணவிகள் வைத்த கோரிக்கையின் அடிப்படையில் தலைமை ஆசிரியர் உறுதியாக மாற்றப்படுவார் என தெரிவித்தார். அதைத் தொடர்ந்து மாணவிகள் போராட்டத்தை முடித்துக் கொண்டு பள்ளிக்குச் சென்றனர். தொடர்ந்து கோட்டாட்சியர் லாவண்யா சம்பந்தப்பட்ட பள்ளி ஆசிரியர்களுடன் விசாரணையில் ஈடுபட்டுள்ளார்.