Skip to main content

பள்ளியில் அட்டூழியம் செய்யும் தலைமையாசிரியரின் கணவர்; கொதித்தெழுந்த பெற்றோர்கள்

 

students parents have accused the headmaster husband of interfering in school affairs

 

ஈரோடு பழையபாளையத்தில் மாநகராட்சி தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை 106 மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த பள்ளியின் தலைமை ஆசிரியராக அமுதா என்பவர் இருந்து வருகிறார். மேலும் ஒரு உதவி தலைமை ஆசிரியர் மற்றும் கூடுதலாக ஒரு ஆசிரியர் என மூன்று பேர் பணியாற்றி வருகின்றனர்.

 

இந்நிலையில் தலைமை ஆசிரியை அமுதா பள்ளிக்கு தாமதமாக வருவதாக குற்றச்சாட்டு எழுந்தது. மேலும் மாணவ மாணவிகளுக்கு முறையாக கல்வியை கற்பிக்கவில்லை எனவும் குற்றச்சாட்டு எழுந்தது. தலைமையாசிரியை அமுதாவின் கணவர் பாபு என்பவர் பள்ளிக்கு அடிக்கடி வருவதும், பள்ளி விவகாரத்தில் தலையிடுவதாகவும் பெற்றோர்கள் புகார் தெரிவித்திருந்தனர். இந்நிலையில் இன்று பள்ளியில் பெற்றோர்களுக்கான கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அப்போது பெற்றோர்கள் அமர்வதற்காக வகுப்பு அறையில் இருந்து பெஞ்சுகள் எடுக்கப்பட்டது. இதை தலைமை ஆசிரியையின் கணவர் கண்டித்து பெற்றோர்களை மிரட்டியதாக கூறப்படுகிறது.

 

இதனால் ஆத்திரமடைந்த பெற்றோர்கள் திடீரென பள்ளி வளாகத்தில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பான சூழ்நிலை நிலவியது. இதுகுறித்து சூரம்பட்டி போலீசருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மேலும் வட்டாரக் கல்வி அலுவலர் ஜோதி சந்திரா, வார்டு கவுன்சிலர் ஜெகதீசன் ஆகியோர் பள்ளிக்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்ட பெற்றோர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது பெற்றோர்கள் கூறும்போது, தலைமை ஆசிரியை அடிக்கடி பள்ளிக்கு தாமதமாக வருகிறார். மாணவர்களுக்கு முறையாக கல்வி கற்பிக்கவில்லை. தலைமையாசிரியரின் கணவர் பள்ளி உள்விவகாரத்தில் தலையிடுகிறார். எங்களையும் மிரட்டுகிறார். எனவே உடனடியாக இந்த பள்ளியில் இருந்து தலைமையாசிரியையை மாற்ற வேண்டும். இல்லையென்றால் எங்களது குழந்தைகளுக்கு மாற்றுச் சான்றிதழ் (டிசி) கொடுத்துவிடுங்கள். நாங்கள் வேறு பள்ளியில் சேர்த்துக் கொள்கிறோம் என்றனர். தொடர்ந்து பெற்றோரிடம் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருக்கின்றனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பான சூழ்நிலை நிலவி வருகிறது.

 

 

இதை படிக்காம போயிடாதீங்க !