Skip to main content

“மாணவ மாணவியரை வெற்றியாளர்களாக மாற்ற வேண்டும்” -  மாவட்ட ஆட்சியர்

Published on 06/09/2021 | Edited on 06/09/2021

 

"Students must be turned into winners" - District Collector

 

விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் மோகன், மக்கள் பணியில் மிகுந்த அக்கறையுடன் பரபரப்பாகச் செயல்பட்டு வருபவர். ஆசிரியர் தினத்தையொட்டி அரசு பள்ளிக்கல்வித்துறை சார்பில் விழுப்புரம் மாவட்டத்தில் 9 ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருது அறிவிக்கப்பட்டது. அந்தவிருது வழங்கும் நிகழ்ச்சி விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சி, மாவட்ட ஆட்சியர் மோகன் தலைமையில் நடைபெற்றது. 

 

இந்தவிழாவில் விருது பெற்ற ஆசிரியர்கள்; கெட்டார் பள்ளித் தலைமை ஆசிரியர் பெருமாள், கண்டாச்சிபுரம் கணினி பயிற்சியாளர் குரு, மழவந்தாங்கல் நடராஜன், அனந்தபுரம் முருகன், திருவெண்ணைநல்லூர் சிவபாலன், வாணியம் பாளையம் சரசு, ஆனங்கூர் மாலினி தேவி, கிளியனூர் ரேகா, செஞ்சி அப்ரோஸ்கான் ஆகிய ஆசிரியர்களுக்கு ஆட்சியர் மோகன் விருது வழங்கினார்.

 

இவ்விழாவில் பேசிய ஆட்சியர் மோகன், “அரசு வழிகாட்டுதலின்படி பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. திறக்கப்பட்ட பள்ளிகளில் நான் சென்று கள ஆய்வு மேற்கொண்டபோது மாணவ - மாணவிகளிடம், ‘நீண்ட நாட்களுக்குப் பிறகு பள்ளிக்கு வருவதை எப்படி உணர்கிறீர்கள்’ என்று கேட்டேன். அவர்களோ, ‘ஆசிரியர்களை, எங்களுடன் படிக்கும் சக நண்பர்களை நேரில் சந்திப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது’ எனக் கூறினார்கள். 

 

ஆசிரியர்கள் மீது மாணவர்கள் வைத்துள்ள மரியாதை  நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. கல்வியில் பின் தங்கிய மாவட்டம் என்ற அடைமொழியை ஆசிரியப் பெருமக்கள் நீக்க வேண்டும். அதற்காக நாம் அனைவரும் ஒருங்கிணைந்து பாடுபட வேண்டும். கல்வியில் புதிய வழிமுறைகளைப் பயன்படுத்தி மாணவர்களின் அறிவுத் திறமையை மேம்படுத்த வேண்டும். அவர்களை பல்வேறு சாதனைகள் படைக்கும் வெற்றியாளர்களாக உருவாக்கி சமூகத்திற்கு வழங்க வேண்டும். அதற்காக அனைவரும் ஒன்றிணைந்து பாடுபடுவோம்” என்று கூறினார். 

 

இதையடுத்து விருதுபெற்ற 9 ஆசிரியர்களுக்கு ரூ.10 ஆயிரம் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. பள்ளிக்கல்வித் துறை சார்பாக கரோனா நிவாரண நிதியாக தமிழக முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு 2,05,200 ரூபாய்க்கான காசோலையை மாவட்ட  முதன்மை கல்வி அலுவலர் கிருஷ்ணப்பிரியா ஆட்சியரிடம் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகுமார், மாவட்ட வருவாய் அலுவலர் ராஜசேகரன், ஊரக வளர்ச்சி திட்ட இயக்குநர் சங்கர், துணை ஆட்சியர் ரூபினா உட்பட பல்வேறுத் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர். எளிமையாக நடைபெற்ற இந்த நிகழ்ச்சி மிகவும் நெகிழ்ச்சியாக அமைந்திருந்தது என விருது பெற்ற ஆசிரியர்களும் அவர்களது குடும்பத்தினர்களும் தெரிவித்தனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

‘பகல் 12 முதல் 3 வரை வெளியே வர வேண்டாம்’ - மதுரை மக்களுக்கு அறிவுறுத்தல்

Published on 15/04/2024 | Edited on 15/04/2024
Advice to Madurai people Don't come out between 12 noon and 3 am

தமிழகத்தில் கோடை வெயில் தற்போது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக அனைத்து தரப்பு மக்களும் கடும் பாதிப்படைந்து வருகின்றனர். அந்த வகையில், தமிழ்நாட்டில் 8 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட் மற்றும் அதற்கும் மேல் வெயில் கொளுத்தி வருகிறது. 

இந்த நிலையில், மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா மதுரை மாவட்ட மக்களுக்கு அறிவுரை கூறியுள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது, “வெயில் அதிகரிப்பு காரணமாக மதுரையில் பகல் 12 மணி முதல் 3 மணி வரை மக்கள் வெளியே வர வேண்டாம். வெயில் தாக்கம் மற்றும் அனல்காற்று அதிகமாக வீசுவதால் மக்கள் முன்னெச்சரிக்கயாக இருக்க வேண்டும்.

அதாவது, வெயிலில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வாகனங்களில் குழந்தைகள் கால்நடைகளை அனுமதிக்கக் கூடாது. தாகம் எடுக்காவிட்டாலும் போதுமான தண்ணீர் குடிக்க வேண்டும். பழச்சாறுகள் அருந்த வேண்டும். அவசர கால தேவைகளுக்கு 1077 மற்றும் 1070 ஆகிய இலவச அழைப்பு எண்களை தொடர்பு கொள்ளலாம்” எனத் தெரிவித்தார். 

Next Story

விக்கிரவாண்டி திமுக எம்.எல்.ஏ புகழேந்தி காலமானார்!

Published on 06/04/2024 | Edited on 06/04/2024
Vikravandi DMK MLA Pugalenthi passed away!

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி தொகுதியில் தி.மு.க சார்பில் எம்.எல்.ஏ வாக பொறுப்பு வகித்து வந்தவர் புகழேந்தி (71). இந்த நிலையில், விழுப்புரம் தொகுதி விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளர் துரை. ரவிக்குமார், கடலூர் காங்கிரஸ் வேட்பாளர் விஷ்ணு பிரசாத் ஆகியோரை ஆதரித்து விழுப்புரம் விக்கிரவாண்டி வி.சாலையில் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக தமிழக முதலமைச்சரும், தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலின் நேற்று (05-04-24) இரவு வந்திருந்தார். 

இந்த பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக நேற்று முன் தினம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பிய விக்கிரவாண்டி தொகுதி தி.மு.க எம்.எல்.ஏ புகழேந்தி வந்திருந்தார். அப்போது, புகழேந்திக்கு திடீரென மயக்கம் ஏற்பட்டதால் அவர் உடனடியாக, விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர அளிக்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில், இன்று (06-04-24) காலை, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தி.மு.க எம்.எல்.ஏ புகழேந்தி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். விக்கிரவாண்டி திமுக எம்.எல்.ஏவான புகழேந்தி, விழுப்புரம் தெற்கு மாவட்ட திமுக செயலாளராக இருந்தவர். புகழேந்தி மறைந்த செய்தியை அறிந்து மருத்துவமனை முன்பு திமுக தொண்டர்கள் பெரும் திரளாக கூடியுள்ளனர். மேலும், அமைச்சர் பொன்முடி மருத்துவமனைக்கு வந்து, மறைந்த புகழேந்திக்கு அஞ்சலி செலுத்தினார்.