Skip to main content

“ஆளுநரால் மாணவர்கள் வேலை வாய்ப்பை இழந்துள்ளனர்” - துரை. வைகோ 

Published on 09/06/2023 | Edited on 09/06/2023

 

“Students have lost job opportunities because of the governor” - Durai Vaiko

 

ஆறு மாத காலத்திற்குள் பட்ட/பட்டய படிப்பு முடித்த சான்றிதழை தாங்கள் பணிபுரியும் அலுவலகங்களில் சமர்ப்பிக்காவிட்டால் வேலை வாய்ப்பை இழக்க நேரிடும். எண்ணற்ற மாணவர்கள் ஆளுநரின் இந்த நடவடிக்கையால் கிடைத்த வேலை வாய்ப்பையும் இழந்துள்ளனர்” என மதிமுக முதன்மைச் செயலாளர் துரை. வைகோ தெரிவித்துள்ளார். 

 

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் தராமல் காலதாமதம் செய்து வரும் ஆளுநர்  ஆர்.என். ரவி தற்பொழுது மாணவர்கள் வாழ்விலும் விளையாடுகிறார். செல்லும் இடங்களில் எல்லாம் சனாதன இந்துத்துவா கருத்துகளையும்,  ஆளும் அரசை விமர்சித்தும்  எல்லை மீறுகிறார் ஆளுநர் என சமீபத்தில் கூட இயக்க தந்தை வைகோ விமர்சித்திருந்தார். பல்கலை பட்டமளிப்பு விழாவிற்கு தேதி வழங்க வேண்டுமென்றால் ஒன்றிய அமைச்சர் ஒருவர் கலந்துகொள்ள வேண்டும் என ஆளுநர் விரும்புவதாக உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். கலந்துரையாடல் நிகழ்வை ஏற்படுத்த வேண்டும் என நிர்ப்பந்திப்பதாகத் தகவல் வருகின்றது. ஆளுநருக்கு அரசியல் செய்வதற்கு மாணவர்களின் எதிர்காலமா கிடைத்தது. 

 

மாணவர் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் தேர்ச்சியும் இதர தரங்களும் தீர்மானிக்கப்பட்டு அவர்களுக்கான மதிப்பெண் சான்றிதழ்கள் மற்றும் தற்காலிக பட்ட/பட்டய சான்றிதழ்கள் பல்கலைக்கழகத்தால் வழங்கப்படுகிறது. மேற்படி மதிப்பெண் மற்றும் பட்ட/பட்டய சான்றிதழ்களை அங்கீகரித்து ஒப்பளிக்கும் உரிமை பல்கலைக்கழக வேந்தரான ஆளுநர்களுக்குத்தான் உண்டு. அந்த வகையில் ஆளுநர் ஒப்புதல் அளித்தால் மட்டுமே ஒரு மாணவருக்கு பட்ட/பட்டய சான்றிதழ்கள் வழங்க முடியும். மரபு வழியாக ஆளுநர் தலைமையில்தான் பட்டமளிப்பு விழா நடைபெறுகிறது. பட்டமளிப்பு விழா தேதி முடிவானவுடன் அந்த நாளிலோ அல்லது அதற்கு முந்தைய நாட்களிலோ ஒப்பளிப்பு கூட்டம் நடத்தப்பட்டு கையெழுத்து பெறப்படும். பாஜக ஆளுநர்கள் வரும் வரை இதில் எந்த பிரச்சனைகளும் வந்ததில்லை.

 

பட்டமளிப்பு விழாவில் பல்கலை வேந்தரான ஆளுநரோ, இணை வேந்தரான உயர்கல்வி அமைச்சரோ பேருரை ஆற்றுவதில்லை. ஆளுநர் அலுவலகத்தில் அனுமதி வாங்கி அழைக்கப்படும் சிறப்பு விருந்தினரே மாணவர்களிடம் உரை நிகழ்த்துவார். இங்குதான் ஆளுநர் ஆர்.என். ரவி ஒன்றிய அமைச்சர்களை அழைக்க வேண்டும்; சனாதன கொள்கைகளை பேசக்கூடிய வடக்கத்திய தலைவர்களை அழைக்க வேண்டும் என நிர்ப்பந்தப்படுத்துகிறார். அவர்கள் தரும் தேதியும் தமிழ்நாட்டின் உயர்கல்வி அமைச்சர் தேதியும் ஒத்துப்போக வேண்டும். அதனாலும் கால விரயம் ஏற்படுகிறது. பட்டமளிப்பு விழாவில் அந்த பகுதி இளைஞர்கள் ஒரே கூரையின் கீழ் கூடும் நிகழ்வு. அந்த நிகழ்வை தங்கள்  சனாதன மதவெறி கொள்கைகளை பரப்பும் களமாக ஆளுநர் ஆர்.என். ரவி நினைப்பதால்தான் இத்தகைய குளறுபடிகள் நிகழ்கின்றன.

 

பல்கலைக்கழகங்கள் தரும் தற்காலிக பட்ட/பட்டய சான்றிதழ்கள் ஆறு மாதம் மட்டுமே செல்லுபடியாகும். எனவே பட்டமளிப்பு விழா நடத்த ஏற்படும் காலதாமதத்தால் 9.29 லட்சம் மாணவர்களின் எதிர்காலம் கடினமாகும். இது குறித்து நான் ஏப்ரல் 1 ஆம் தேதி செய்தியாளர்களுக்கு விரிவாகப் பேட்டி அளித்திருந்தேன். அதை மீண்டும் நினைவு கூறுகிறேன், ஆளுநரின் இந்த நடவடிக்கையால் கல்லூரி வளாக நேர்முகத் தேர்வில் வேலை வாய்ப்பை பெற்ற மாணவர்கள் ஆறு மாத காலத்திற்குள் பட்ட/பட்டய படிப்பு முடித்த சான்றிதழை தாங்கள் பணிபுரியும் அலுவலகங்களில் சமர்ப்பிக்காவிட்டால் வேலை வாய்ப்பை இழக்க நேரிடும், எண்ணற்ற மாணவர்கள் ஆளுநரின் இந்த நடவடிக்கையால் கிடைத்த வேலை வாய்ப்பையும் இழந்துள்ளனர். மாணவர்களின் எதிர்காலத்தில் அரசியல் செய்யும் ஆளுநர் ஆர்.என். ரவி அவர்களுக்கு மறுமலர்ச்சி திமுக சார்பில் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.  

 

 

கடக்கும் முன் கவனிங்க...

கடக்கும் முன் கவனிங்க...

விரிவான அலசல் கட்டுரைகள்

சார்ந்த செய்திகள்

சார்ந்த செய்திகள்

Next Story

நாகாலாந்து, அஸ்ஸாம் நிகழ்ச்சியில் தமிழ்நாட்டைப் பற்றிப் பேசிய ஆளுநர்

Published on 02/12/2023 | Edited on 02/12/2023

 

நாகாலாந்து தினம் மற்றும் அஸ்ஸாம் மாநிலம் உருவான தினத்தை முன்னிட்டு, நேற்று தமிழ்நாடு ஆளுநர் மாளிகையான ராஜ் பவனில் கொண்டாடப்பட்டது. இதில், நாகாலாந்து மற்றும் அஸ்ஸாம் மக்களின் பாரம்பரிய நடனமான நாகா வாரியர்ஸ் நடனம் மற்றும் பிஹு நடன நிகழ்ச்சி நடைபெற்றது. 

 

இந்த விழாவில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி கலந்துகொண்டு பேசியதாவது; “தமிழ்நாடு அதிலும் குறிப்பாக சென்னை, வடகிழக்கு மாநிலங்களைச் சேர்ந்த மக்களுக்கு ஒரு பாதுகாப்பான இடமாக இருக்கிறது. வடகிழக்கு மாநிலத்தவர்களை நான் சந்திக்கும்போதெல்லாம் அவர்கள் பெண் குழந்தைகள் சென்னையில் படிக்கிறார்கள் என சொல்லும்போது அவர்கள் சிறிதும் கவலை இன்றி இருப்பதை அவர்கள் பேச்சில் என்னால் உணர முடிகிறது” என்று பேசினார். 

 

 

விரிவான அலசல் கட்டுரைகள்

Next Story

முன்னாள் அமைச்சர் கே.சி. வீரமணி மீது வழக்கு - ஒப்புதல் தர ஆளுநர் மறுப்பு

Published on 01/12/2023 | Edited on 01/12/2023

 

Former Minister K.C. Case against Veeramani' - Governor's refusal to approve

 

தமிழக அரசு சார்பில் அனுப்பப்பட்டுள்ள மசோதாக்களைக் கிடப்பில் வைத்திருக்கும் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவியின் செயல்பாட்டிற்கு எதிராகவும், கிடப்பில் வைத்திருக்கும் மசோதாக்களுக்கும், அரசால் அனுப்பப்பட்ட கோப்புகளுக்கும் ஒப்புதல் அளிக்க ஆளுநருக்கு உடனே உத்தரவிடக் கோரியும் உச்சநீதிமன்றத்தில் கடந்த 31 ஆம் தேதி அவசர வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

 

இந்நிலையில் நீண்ட நாட்கள் சிறையில் உள்ள கைதிகளை முன் விடுதலை செய்யும் விவகாரத்தில் 71 பேரில் 31 பேரை விடுதலை செய்ய ஆளுநர் ஆர்.என். ரவி ஒப்புதல் அளித்துள்ளார். 39 பேர் மீது பரிசீலனையில் உள்ளது. ஒருவரை விடுதலை செய்வதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார்.

 

டி.என்.பி.எஸ்.சி. தலைவர் மற்றும் உறுப்பினர்கள் நியமனம் தொடர்பாகத் தமிழ்நாடு அரசு அனுப்பிய கோப்புகளையும் ஆளுநர் ஆர்.என். ரவி திருப்பி அனுப்பியுள்ளார். அதேபோன்று அதிமுக முன்னாள் அமைச்சர் கே.சி. வீரமணி மீது ஊழல் வழக்குப் பதிவு செய்ய அனுமதி கோரி தமிழ்நாடு அரசு கோப்புகளை அனுப்பி இருந்த நிலையில், அவர் மீது வழக்குப் பதிவு செய்ய ஆளுநர் ரவி மறுப்பு தெரிவித்துள்ளார். வழக்குப் பதிவு செய்ய ஆவணங்கள் குறைவாக உள்ளதாகக் கூறி ஆளுநர் திருப்பி அனுப்பி உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. 

 

 

விரிவான அலசல் கட்டுரைகள்