திண்டுக்கல் மேற்கு மீனாட்சிநாயக்கன்பட்டியில் அரசு உயர்நிலைப்பள்ளி செயல்பட்டு வந்தது. இந்தப் பள்ளியில் ஆறாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்து வருகிறார்கள்.
பள்ளிக் கட்டடம் பழுதடைந்து இருந்ததால் நடப்பு கல்வி ஆண்டில் புதிய பள்ளிக் கட்டடம் கட்ட முடிவு செய்யப்பட்டது. அதன்படி எம்.வி.எம் கல்லூரி பின்புறம் உள்ள வசந்தம் நகரில் கட்டடம் கட்டப்பட்டது. தமிழ்நாடு முழுவதும் நேற்று ஆறாம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை பள்ளிகள் தொடங்கப்பட்ட நிலையில், மேற்கு மீனாட்சிநாயக்கன்பட்டியில் செயல்பட்டு வந்த பள்ளி நடப்பு கல்வி ஆண்டு முதல் வசந்தம் நகரில் செயல்படும் என அறிவிக்கப்பட்டது.
ஆனால் பள்ளிக்கு சென்று வர போதிய பேருந்து வசதி இல்லை. அதனால் திண்டுக்கல்லில் உள்ள மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தை மாணவர்கள் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இது பற்றி மாணவர்கள் கூறுகையில், “பல்வேறு கிராமங்களில் இருந்து வரும் தங்களுக்கு மேற்கு மீனாட்சிநாயக்கன்பட்டி பள்ளியே அருகில் உள்ளது. அதனால் அந்த பள்ளி கட்டடத்தை சீரமைத்து அதே இடத்தில் வகுப்புகள் நடத்த ஏற்பாடு செய்ய வேண்டும். இல்லை என்றால் நாங்கள் பள்ளிக்கு செல்லாமல் புறக்கணிப்பு செய்வோம்” என தெரிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து அதிகாரிகள் மாணவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு சமரசம் செய்து அனுப்பி வைத்தனர். ஏற்கனவே பள்ளிகள் தாமதமாக திறக்கப்பட்ட நிலையில் மாணவர்களின் நலன் கருதி அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர்கள் ஒருபுறம் கோரிக்கை வைத்து வருகின்றார்கள்.