திருச்சி - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலை பிராட்டியூரில் தனியார் பொறியியல் கல்லூரி ஒன்று செயல்பட்டு வருகிறது. இதில் சுமார் 1500க்கு மேற்பட்ட மாணவர்கள் பொறியியல் கல்வி பயின்று வருகின்றனர். செமஸ்டர் தேர்வு தற்போது நடைபெற்று வருகிறது. இதில் முதலாண்டு மாணவர்கள் முதல் இறுதியாண்டு மாணவர்கள் வரை செமஸ்டர் தேர்வு எழுதி வருகின்றனர்.
இந்த நிலையில் தேர்வு கட்டணம், விடுதி கட்டணம், ஆண்டு கல்விக் கட்டணத்தை கட்டாத மாணவர்களுக்கு ஹால் டிக்கெட் தர மறுத்ததால் பாதிக்கப்பட்ட 300க்கும் மேற்பட்ட மாணவர்கள் தாங்கள் பயிலும் கல்லூரி வாசல் முன்பாக திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். மேலும் செமஸ்டர் தேர்வு எழுத அனுமதி மறுக்கும் கல்லூரி நிர்வாகத்தை கண்டித்து முழக்கம் எழுப்பினர். மாணவர்களின் போராட்டத்தால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறை உதவி ஆணையர் கென்னடி தலைமையிலான போலீசார் மாணவர்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தி கல்லூரிக்கு அனுப்பி வைத்தனர். மாணவர்களின் போராட்டத்தால் அங்கு சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. மாணவர்களின் போராட்டம் ஒருபுறம் இருந்தாலும் கல்லூரியின் நிலைமை மிகவும் மோசமாக உள்ளது எனக் குற்றம் சாட்டப்படுகிறது.
கல்லூரியில் போதிய அடிப்படை வசதிகள் இல்லை என்றும், குறைந்த அளவிலான ஆசிரியர்களே இருப்பதாகவும் அங்கு இருக்கிறவர்கள் தெரிவித்தனர். மேலும் வாசலில் சாக்கடைக்காக தோண்டிய பள்ளம் மூடப்படாமலேயே நீண்ட நாட்களாக இருப்பதாகவும் இதனால் மாணவர்கள் கல்லூரிக்கு உள்ளே செல்ல தினமும் சிரமப்பட்டு வருகின்றனர். மேலும் இது குறித்து மாணவர்கள் கூறுகையில், தேர்வு கட்டணம் செலுத்தியும் எங்களுக்கு ஹால் டிக்கெட் வழங்கவில்லை என்றும், அண்ணா பல்கலைக்கழகத்திற்கு கல்லூரி நிர்வாகத்தில் இருந்து பணம் செலுத்தாத காரணத்தினால் ஹால் டிக்கெட் வரவில்லை என்று மாணவர்கள் குற்றம்சாட்டினர். நாங்கள் எழுதும் தேர்வு வால்யூவேஷனுக்கு செல்லுமா என்பதே சந்தேகமாக உள்ளது. ஒவ்வொரு தேர்வுக்கு முன்பாகவும் மாணவர்களிடம், தேர்வு எழுதுகிறோம் என்று ஒப்புதல் கடிதம் எழுதி கையெழுத்து பெற்ற பின்னரே தேர்வுக்கு அனுமதிக்கின்றனர் என்றனர்.