ராணிப்பேட்டை மாவட்டத்திலேயே மிகப்பெரிய சந்தையாக விளங்கும் ராணிப்பேட்டை வாரச்சந்தையில் வாரந்தோறும் வெள்ளிக்கிழமை ஆட்டுச் சந்தை வியாபாரம் நடைபெறுவது வழக்கம். இந்தச் சந்தை மைதானத்தில் கடந்த ஓராண்டு காலமாக புணரமைப்பு மற்றும் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது. இதனால் சந்தையில் போதிய இடவசதி இல்லாததால் சந்தையின் உள் புறத்திலும் வெளிப்புறத்திலும் கூட்டம் அலைமோதுகிறது. நாள் முழுவதும் இந்த நிலை நீடிப்பதால் இந்தச் சாலையில் ஒவ்வொரு வாரமும் நாள் முழுவதும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
கடந்த இரண்டு மாதமாக ஒவ்வொரு வாரமும் நெரிசல் இருந்தாலும் மக்கள் சகித்துக்கொண்டனர். இந்த வாரம் மக்களிடம் இது கோபத்தை உருவாக்கியுள்ளது. காரணம், இந்த வாரம் திங்கள்கிழமை முதல் பள்ளி, கல்லூரிகள் தொடங்கப்பட்டுவிட்டது. மாணவ - மாணவிகள் பள்ளிக்கும், கல்லூரிக்கும் நேரத்தோடு செல்ல வேண்டிய நிலையில் இருக்கின்றனர். இந்நிலையில் வாரச் சந்தையால் போக்குவரத்து பாதிப்பால் மாணவ - மாணவிகள் அதில் சிக்கிக்கொண்டனர்.
இதன் காரணமாக பள்ளிக்குச் செல்லும் மாணவ மாணவிகள் வேலைக்கு செல்வோர் எனப் பலரும் போக்குவரத்து நெரிசலில் சிக்கி கடுமையாக அவதி அடைந்தனர். எனவே மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டு வாரச்சந்தை கட்டுமான பணிகளை விரைந்து முடிக்க வேண்டும், கட்டுமானம் முடியும் வரை காவல்துறை போக்குவரத்து பிரச்சனையைச் சரிசெய்ய வேண்டும் என வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.