2023 - 24 ஆம் கல்வியாண்டுக்கான 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு மார்ச் 1 ஆம் தேதி (01.03.2024) தொடங்கி மார்ச் 22 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்தத் தேர்வை தமிழகம் முழுவதும் அமைக்கப்பட்டுள்ள 3 ஆயிரத்து 302 மையங்களில் 4.13 லட்சம் மாணவியர், 3.58 லட்சம் மாணவர்கள், ஒரு திருநங்கை என மொத்தம் 7.72 லட்சம் பேர் தேர்வெழுத உள்ளனர். இதில் 21 ஆயிரத்து 875 தனித்தேர்வர்கள், 125 சிறைவாசிகளும் அடங்குவர்.
மேலும் பொதுத் தேர்வுக்கான அறை கண்காணிப்பாளர் பணியில் சுமார் 47 ஆயிரம் பள்ளி ஆசிரியர்கள் ஈடுபட உள்ளனர். தேர்வில் முறைகேடுகளைத் தடுக்க 4 ஆயிரத்து 200 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன. அதோடு மாவட்ட ஆட்சியர்கள், முதன்மைக் கல்வி அலுவலர்கள் தலைமையிலும் சிறப்பு கண்காணிப்பு குழுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. போலீசாரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதும் மாணவ மாணவியர்களுக்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக முதல்வர் மு.க. ஸ்டாலின் எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வை நாளை எழுத உள்ள மாணவர்களுக்கும் மாணவியர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள். உங்களது கல்வி வாழ்க்கையின் அடுத்தகட்டமான +2 இறுதித் தேர்வை அச்சமற்று எதிர்கொள்ளுங்கள். தெளிவாக எழுதுங்கள். நீங்கள் எதிர்பார்க்கும் வெற்றி அமைய வாழ்த்துகிறேன். தேர்வு என்பது மற்றுமொரு கல்வியியல் நடைமுறைதானே தவிர, அதுவே உங்களது திறமையை எடைபோடுவதற்கான அளவுகோல் கிடையாது. எனவே எவ்விதப் பதற்றமும் வேண்டாம். பெற்றோர்களும் இதனை நன்கு உணர்ந்து தங்களது குழந்தைகள் மீதான தேவையற்ற அழுத்தங்களைத் தவிர்த்து, அவர்களது வெற்றிக்கு ஊக்கமளிக்க வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.