காரைக்காலுக்கு சுற்றுலா சென்ற கல்லூரி மாணவிகளில் ஒருவர் கடலில் குளித்தபோது நீரில் மூழ்கி உயிரிழந்தார். அவரைக் காப்பாற்றச் சென்ற இரு மாணவர்களும் காணாமல் போனதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கும்பகோணம் அரசு கலைக் கல்லூரி மாணவ - மாணவிகள் காரைக்கால் கடற்கரை பகுதிக்குச் சுற்றுலா சென்றிருந்தனர். அப்போது மாணவிகள் இருவர் தடையை மீறி கடலில் இறங்கிக் குளித்ததாகக் கூறப்படுகிறது. திடீரென தண்ணீரில் மூழ்கிய அந்த மாணவிகளை மீட்க மாணவர்கள் இருவர் கடலில் இறங்கினர். ஆனால் மாணவியை மீட்கக் கடலில் இறங்கிய இரண்டு பேரும் காணாமல் போயினர்.
இதுகுறித்து கடலோர காவல் படைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், போலீசார் மற்றும் அதிகாரிகள் காணாமல் போன மாணவர்களைத் தேடி வருகின்றனர். தடையை மீறி கடலில் இறங்கிய மற்றொரு மாணவி மீட்கப்பட்டு காரைக்கால் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளார். கல்லூரி மாணவி தடையை மீறி கடலில் இறங்கிக் குளிக்க நேர்ந்தபோது ஏற்பட்ட உயிரிழப்பு சம்பவமும், தொடர்ந்து தேடச் சென்ற மாணவர்கள் காணாமல் போன சம்பவமும் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.