/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/th_2828.jpg)
அரியலூர் ரயில் நிலையம் அருகே வசித்து வருவார் நடராஜன், உமா, தம்பதி. இவர்களுக்கு நிஷாந்தினி, நிவாஸ், என இரு பிள்ளைகள். நடராஜன் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். இவரது மகள் நிஷாந்தினி(18), அரியலூரில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் படித்து வந்துள்ளார். சமீபத்தில் நடைபெற்ற பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வில் 539 மதிப்பெண்கள் எடுத்து தேர்ச்சி பெற்றுள்ளார்.
இவர் மருத்தும் படிக்க விருப்பப்பட்டு, கடந்த இரண்டு மாதமாக திருச்சியில் உள்ள ஒரு தனியார் நீட் பயற்சி மையத்தில் நீட் தேர்வுக்காக படித்து வந்துள்ளார். நாளை இந்தியா முழுவதும் நீட் தேர்வு நடைபெற உள்ளது. இதற்காக நேற்று இரவு நிஷாந்தினி தங்கள் வீட்டில் இருந்த ஒரு தனி அறையில் அமர்ந்து நீண்ட நேரம் படித்து வந்துள்ளார். அவரது தாயும், சகோதரரும் மற்றொரு அறையில் படுத்து உறங்கியுள்ளனர்.
இந்நிலையில், இன்று அதிகாலை நான்கு மணி அளவில் உமா தற்செயலாக எழுந்து பார்த்தபோது நிஷாந்தினி அறையில் லைட் எரிந்து கொண்டிருந்தது. அதன் காரணமாக அவர், அந்த அறைக்கு சென்று பார்த்த போது நிஷாந்தினி தூக்கில் தொங்கியப்படி இருந்துள்ளார். இதனைக் கண்ட அவரது தாய், அலறி துடித்து அழுதுள்ளார். இவரின் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினரும் உமா வீட்டிற்கு வந்தனர். அதனைத் தொடர்ந்து அரியலூர் நகர காவல்நிலையத்திற்கு அவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.
அதனைத் தொடர்ந்து உடனடியாக சம்பவம் நடந்த வீட்டிற்கு அரியலூர் டி.எஸ்.பி வெங்கடேசன், இன்ஸ்பெக்டர் கோபி, சப் இன்ஸ்பெக்டர் பாலாஜி மற்றும் போலீசார் விரைந்து வந்தனர். உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அரியலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதனைத் தொடர்ந்து நிஷாந்தினி தாயார் உமாவிடம் போலீசார் விசாரணை செய்தனர்.
அப்போது அவர், நிஷாந்தினி டாக்டருக்கு படிக்க வேண்டும் என்று கடும் முயற்சி எடுத்து படித்து வந்தார். குடும்பத்தில் யாரும் அவரை கட்டாயப்படுத்தவில்லை. மிகவும் துணிச்சலான பெண் ஏன் இப்படிப்பட்ட ஒரு முடிவை எடுத்தார் என்பது எங்களுக்கு புரியவில்லை” என்று கதறி அழுதார். நிஷாந்தினி அறையில் அவர் எழுதிய ஒரு கடிதம் கிடைத்துள்ளது.
அதில், ‘நீட் தேர்வில் தேர்ச்சி பெற்று டாக்டர் படிக்க வேண்டும் என்பது எனது நீண்ட நாளைய கனவு. தேர்வு நெருங்க நெருங்க எனக்குள் ஒரு பயம் ஏற்பட்டது. தேர்வில் தோற்றுவிடுவோமோ என்ற மன உளைச்சல் ஏற்பட்டது. தோல்வியை தாங்க முடியுமோ முடியாதோ என்ற குழப்பத்தின் காரணமாக நான் தற்கொலை செய்து கொள்ள முடிவெடுத்தேன்’ என்று அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/member_avatars/sites/default/files/pictures/2018-02/sp.sekar_.jpg)