தமிழகத்தில் கரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. சென்னையில் கரோனா பாதிப்பு அதிகரிப்பால் காய்ச்சல் பரிசோதனை முகாம்களை அதிகப்படுத்தியுள்ளது சென்னை மாநகராட்சி. இந்நிலையில், நேற்று முன்தினம் (08.04.2021) தமிழக அரசு பல்வேறு புதிய கட்டுப்பாடுகளை அறிவித்திருந்தது. அந்தக் கட்டுப்பாடுகள் இன்று அமலுக்கு வந்தன.
இன்று சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் பாலவாக்கத்தில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுகையில், ''உடலில் சிறு மாற்றம் தெரிந்தாலும் அருகிலுள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் பரிசோதனை செய்துகொள்ளுங்கள். அதேபோல் காய்ச்சல் முகாம்களிலும் பரிசோதனை செய்துகொள்ளுங்கள். கிட்டத்தட்ட ஒரு வார்டுக்கு 6 சுகாதார நிலையங்கள் உள்ளன. மினி க்ளீனிக்குகளும் உள்ளன. மக்கள் தூரமாக எங்கும் செல்லாமல் வீட்டுக்கு அருகிலேயே உள்ள இவற்றைப் பயன்படுத்த வேண்டும். கரோனா அறிகுறிகள் இருந்தாலே அதற்கான சிகிச்சையை தொடங்கலாம்'' என்றார்.
இந்நிலையில், சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள மாநில கல்லூரி மாணவர் விடுதியை கரோனா வார்டாக மாற்றும் பணி தற்போது துவங்கியுள்ளது. இதனால் 250 கூடுதல் கரோனா படுக்கைகள் தயார் செய்யப்படும் என மாநகராட்சி ஊழியர்கள் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.