Skip to main content

12 ஆண்டுகளுக்குப் பிறகு நடந்த கோவில் திருவிழா; மாணவருக்கு நேர்ந்த சோகம்    

Published on 13/09/2023 | Edited on 13/09/2023

 

Student drowned in Karur

 

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே உள்ள தோகைமலை ஒன்றியம் நாகனூர் பஞ்சாயத்து மேட்டுப்பட்டியைச் சேர்ந்தவர்  முருகன். இவர் தோகைமலையில் ஸ்டுடியோ கடை வைத்துள்ளார். இவருக்கு மணிகண்டன்,  குழந்தைவேலு என இரண்டு மகன்கள். இதில் இளைய மகன் குழந்தைவேல் வயது 16. இவர் தோகைமலையில் உள்ள தனியார் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் டூ படித்து வருகிறார். இவர்களது ஊரில் நேற்று மதுரை வீரன் கோவில் திருவிழா 12 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெற்றது.

 

திருவிழாவை முன்னிட்டு நேற்று முன் தினம் குளித்தலை கடம்பன் துறை காவிரி ஆற்றிற்கு வந்து குளித்து புனித நீர் எடுத்துச் செல்வதற்காக மேட்டுப்பட்டியில் இருந்து 50க்கும் மேற்பட்டவர்கள், குளித்தலை கடம்பன் துறை காவிரி ஆற்றிற்கு வந்துள்ளனர். அவர்கள் அனைவரும் குளித்துக் கொண்டிருந்தபோது குழந்தைவேலு மட்டும் சற்று ஆழமான பகுதிக்குச் சென்று குளித்துள்ளார். அப்போது குழந்தைவேலு  புதை மணலில் சிக்கித் தனது சகோதரன் மணிகண்டன் கண்ணெதிரிலேயே தண்ணீரில் மூழ்கினார். சம்பவம் குறித்து முசிறி தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டு, சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர், காவல்துறையினர் மற்றும் உள்ளூர் மீனவர்கள் இணைந்து காவிரி ஆற்றில் தேடத் துவங்கினர். நேற்று முன்தினம் இரவு 7 மணி வரை பரிசல்கள் உதவியுடன் தீயணைப்புத் துறையினர் 10க்கும் மேற்பட்டவர்கள்  தேடினர். நீரில் மூழ்கிய குழந்தைவேலு  உடல் கிடைக்கவில்லை.    

 

2வது  நாளாக நேற்று தீயணைப்புத் துறையினர்  எந்திர படகு மூலம் 17 பேர் கொண்ட குழுவினர் தேடி வந்தனர். இந்நிலையில் நீரில் மூழ்கிய பிளஸ் டூ மாணவன் குழந்தைவேலுவின் உடல், சம்பவ இடத்திலிருந்து சுமார் 2 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள சாந்திவனம் அருகே காவிரி கரை ஓரத்தில் இருந்ததை உள்ளூர் மீனவர்கள் கண்டுபிடித்தனர். மீட்கப்பட்ட மாணவரின் உடல் குளித்தலை அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டது. இந்த சம்பவம் குறித்து குளித்தலை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.  

 

 

கடக்கும் முன் கவனிங்க...

கடக்கும் முன் கவனிங்க...

விரிவான அலசல் கட்டுரைகள்

சார்ந்த செய்திகள்

சார்ந்த செய்திகள்

Next Story

சக மாணவரின் கழுத்தை அறுத்தவர் கைது! ஓடும் பேருந்தில் கொடூரம்! 

Published on 27/11/2023 | Edited on 27/11/2023

 

karur district kulithalai engineering student arrested by police

 

கரூர் மாவட்டம், குளித்தலை அருகே ஒரு தனியார் இன்ஜினியரிங் கல்லூரி உள்ளது. இந்தக் கல்லூரியில், திருச்சி மாவட்டம், முசிறி பார்வதிபுரத்தைச் சேர்ந்த பெரியசாமி என்பவரின் மகன்  நித்தீஷ் குமார்(21), இ.சி.இ. மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். திருச்சி மாவட்டம், தொட்டியம் பகுதியைச் சேர்ந்த அண்ணாமலை எனும் மாணவர் அதே கல்லூரியில் எம்.பி.ஏ. முதலாம் ஆண்டு படித்து வருகிறார்.

 

இருவரும் கல்லூரி பேருந்தில் கல்லூரிக்கு சென்று வருவது வழக்கம். இருவருக்கும் கூடா நட்பு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் திடீரென நிதீஷ் குமார், அண்ணாமலையுடன் பேசுவதை தவிர்த்து வந்துள்ளார். இந்நிலையில் வெள்ளிக்கிழமை கல்லூரிக்கு சென்று வந்த இவர்களுக்குள் பிரச்சனை ஏற்பட்டதால், நிதீஷ் குமார் அண்ணாமலையுடன் பேசுவதை தவிர்த்து உள்ளார்.

 

சனி, ஞாயிறு விடுமுறை என்பதால் அண்ணாமலை முசிறி பார்வதிபுரத்தில் உள்ள நிதிஷ்குமார் வீட்டிற்கு சென்று பலமுறை சமாதானத்தில் ஈடுபட்டுள்ளார். இதற்கு நிதிஷ்குமார் சமாதானத்தை ஏற்க மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இன்று கல்லூரி என்பதால் வழக்கம்போல கல்லூரி பேருந்தில் கல்லூரிக்கு சென்று கொண்டிருந்தபோது, சத்தியமங்கலம் அருகே பேருந்து வந்தபோது திடீரென அண்ணாமலை தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து தினேஷ் குமாரின் கழுத்தை அறுத்துள்ளார்.
இதனை பார்த்த சக மாணவ மாணவிகள் அலறி அடித்து சத்தம் போட்டனர். இதனை அடுத்து கல்லூரி பேருந்து நிறுத்தப்பட்டது.

 

சம்பவ இடத்திற்கு சென்ற குளித்தலை போலீசார் நித்தீஷ் குமாரை மீட்டு குளித்தலை அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்து,  முதல் உதவி சிகிச்சை அளித்த பின்னர், மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இன்ஜினியர் மாணவர் அண்ணாமலையை கைது செய்த குளித்தலை போலீசார் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இருவருக்கும் கூடா நட்பு இருந்த விவகாரத்தால் இந்த சம்பவம் நடந்ததா? அல்லது வேறு ஏதும் காரணமா? என்பது குறித்து குளித்தலை போலீசார் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

 

 

விரிவான அலசல் கட்டுரைகள்

Next Story

30 போலீசாருடன் எஸ்.பி. நடத்திய வேட்டை; கரூரில் பரபரப்பு! 

Published on 27/11/2023 | Edited on 27/11/2023

 

SP With 30 police in gutka operation

 

கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பசுபதிபாளையம், சின்ன ஆண்டாங்கோவில் உள்ளிட்ட இடங்களில் மளிகை கடைகள் மற்றும் தேநீர் கடைகளில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் பான் மசாலா பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரபாகர் திடீர் ஆய்வில் ஈடுபட்டார். இந்த ஆய்வின்போது மாவட்ட எஸ்.பி பிரபாகரன் நேரடியாக மளிகைக் கடைகள் மற்றும் தேநீர் கடைகளுக்குள் சென்று சல்லடை போட்டு, தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் பான் மசாலா பொருட்களை விற்பனை செய்த கடைகளைக் கண்டறிந்து, அவற்றைப் பறிமுதல் செய்தார். 

 

தடை செய்யப்பட்ட பொருட்களை விற்பனை செய்த கடைகளுக்கு உணவு பாதுகாப்புத் துறை அதிகாரி மூலம் பூட்டு போட்டு மாவட்ட எஸ்.பி பிரபாகர் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டார். சின்ன ஆண்டாங்கோவில் பகுதியில் அமைந்துள்ள மளிகைக் கடை ஒன்றில் நடந்த சோதனையில் ஒரே ஒரு பாக்கெட் மட்டும் கிடைத்த நிலையில், அந்த கடையின் உரிமையாளர் அபிலாசன் என்பவரை எஸ்.பி உத்தரவின் பேரில், கரூர் நகர போலீசார் விசாரணைக்கு அழைத்துச் சென்றனர்.

 

SP With 30 police in gutka operation

 

மாவட்டம் முழுவதும் 8 தாலுகாக்களில் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை விற்பனை செய்யும் கடைகளை ஆய்வு செய்ய 8 கண்காணிப்பு குழுக்களை அமைத்துள்ளதாகவும், அந்த குழு தொடர் ஆய்வில் ஈடுபட்டு தடை செய்யப்பட்ட பொருட்களை விற்பனை செய்யும் நபர்கள் மீது தொடர் கண்காணிப்பில் ஈடுபட உள்ளதாகவும் ஆய்வின் போது எஸ்.பி பிரபாகர் தெரிவித்தார். இந்த அதிரடி ஆய்வின்போது காவல் ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள், இரண்டு அதிவிரைவு படை போலீசார் உட்பட சுமார் 30-க்கும் மேற்பட்ட போலீசார் உடன் இருந்தனர். மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் இந்த அதிரடி ஆய்வின் காரணமாக கரூர் மாநகராட்சி பகுதியில் பரபரப்பான சூழல் நிலவியது. 

 

 

விரிவான அலசல் கட்டுரைகள்