திண்டுக்கல் மாவட்டம், கன்னிவாடி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற மாணவர்களுக்கான கலைத்திறன் விழாவில் கருப்பண்ணசாமி வேடம் அணிந்த மாணவன் நாகராஜனை பார்த்த பெண்கள் அருள் வந்து ஆடினார்கள்.
தமிழகம் முழுவதும் உள்ள அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் தனித்திறமையை மேம்படுத்தும் வகையில், தமிழக அரசு பள்ளிகள்தோறும் கலைத்திறன் போட்டிகளை நடத்த உத்தரவிட்டுள்ளது. அதன்படி திண்டுக்கல் மாவட்டம், ரெட்டியார்சத்திரம் ஒன்றியம், கன்னிவாடி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் வட்டார அளவில் மூன்று நாட்கள் கலைத்திறன் விழா நடைபெற்றது. விழாவிற்கு பள்ளி தலைமையாசிரியர் கிருஷ்ணன் மற்றும் பெண்கள் பள்ளி தலைமையாசிரியை மகேஷ்வரி தலைமை தாங்கினார்கள்.
செவ்வாய், வியாழன், வெள்ளி ஆகிய மூன்று நாட்கள் கலைத்திறன் போட்டிகள் நடைபெற்றது. கன்னிவாடி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி சார்பாக 23 மாணவர்கள் கலந்து கொண்டு தங்களுடைய தனித்திறமைகளை வெளிப்படுத்தினார்கள். இதில் 10ம் வகுப்பு படிக்கும் மாணவன் நாகராஜன், கருப்பண்ணசாமி வேடம் அணிந்து அருள் வந்து ஆடியது அங்கிருந்தவர்களை கவர்ந்தது.
அப்போது பார்வையாளர்கள் வரிசையில் இருந்த பெண்கள் பலரும் அருள்வந்து ஆடினர். கருப்பண்ணசாமி வேடம் அணிந்து வைந்த மாணவனுக்கு பயிற்சி அளித்த தமிழ் ஆசிரியை ராஜேஸ்வரி மற்றும் ஆசிரியர் வெங்கடேசனை ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் பாராட்டினார்கள். மாணவன் நாகராஜன் கருப்பணசாமி வேடம் அணிந்து ஆடியதை பார்த்த பெண்களுக்கு அருள்வந்த வீடியோ வைரலாக இணையத்தில் பரவி வருகிறது.
இந்நிழ்ச்சியில் ரெட்டியார்சத்திரம் வட்டார பள்ளி தலைமையாசிரியர்கள் ஷாஜகான், சௌந்தரராஜன், ராகவன் மற்றும் ஆசிரியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.