திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள, வேடசந்தூர் அருகே இருக்கும் இராமநாதபுரத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் சுமார் ஆயிரத்திற்கு மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்து வருகிறார்கள். தலைமை ஆசிரியராக ரவிச்சந்திரன் இருந்து வருகிறார்.
இந்த நிலையில் தான், மாணவர்களுக்குத் தமிழக அரசு சார்பில் இலவச சைக்கிள் கொடுக்கும் விழா நடைபெற்றது. இந்த விழாவில் கலந்து கொண்ட சில மாணவர்களில் சிலர் ஆர்வ மிகுதியால் சைக்கிளில் இருந்த பெல்லை அடித்துள்ளனர். அப்போது சைக்கிள் பெல்லை அடித்த பொன்னிவளவன் என்ற பிளஸ் 2 மாணவனை தலைமை ஆசிரியர் ரவிச்சந்திரன் தாக்கினார்.
இதனால் மாணவனின் வலது பக்க காது கேட்கவில்லை என்று கூறி பொன்னிவளவன் வேடசந்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்ந்தார். அங்கே மாணவனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தலைமை ஆசிரியர் தாக்கியதாகக் கூறி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்ந்த சம்பவம் மாணவர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.