Skip to main content

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட மீனவர்களை மீட்க கோரி போராட்டம்

Published on 30/11/2022 | Edited on 30/11/2022

 

struggle for rescue of fishermen arrested by Sri Lanka Navy

 

தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்வது தொடர்கதையாக மாறியுள்ளது.  இதுவரை சுமார் 800-க்கும் மேற்பட்ட மீனவர்களை சுட்டுக் கொன்ற இலங்கை கடற்படை ஆயிரக்கணக்கான மீனவர்களை கைது செய்து தாக்கியதில் பலர் காயமடைந்தும் நூற்றுக்கணக்கான படகுகளை இழந்தும் நிர்கதியாய் நிற்கிறார்கள். 

 

இந்த நிலையில் இலங்கை கடற்படை தற்போது 5 படகுகளில் சென்ற 24 மீனவர்களையும் படகுகளையும் சிறைப்படுத்தி வைத்துள்ளது மேலும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டினம் மீன்பிடி தளத்திலிருந்து கடந்த 28ம் தேதி 92 விசைப்படகுகளில் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர். இதில் 5 படகுகளில் சென்ற 24 மீனவர்களையும், படகுகளையும் சுற்றி வளைத்த இலங்கை கடற்படையினர் இலங்கைக்கு கொண்டு சென்றுள்ளனர். இந்த தகவல் பரவியதும் மீனவர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. 

 

struggle for rescue of fishermen arrested by Sri Lanka Navy

 

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களையும் படகுகளையும் மத்திய அரசு மீட்க நடவடிக்கை எடுக்கக் கோரி மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளார்.

 

இந்நிலையில், இலங்கை கடற்படையின் தொடர் அட்டூழியத்தால் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களையும், படகுகளையும் மீட்க வேண்டும். தொடர்ந்து மீனவர்கள் தாக்கப்படுவதையும் சிறைபிடிப்பதையும் தடுக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஜெகதாப்பட்டனம் மீனவர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதுடன் கிழக்கு கடற்கரை சாலையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மேலும், உடனே மீனவர்களையும் படகுகளையும் விடுவிக்கவில்லை என்றால் 13 மாவட்ட மீனவர்களையும் இணைத்து பெரிய போராட்டங்கள் நடத்தப்படும் என்றனர். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட மீனவ பெண்கள் சாலையில் கதறி அழுது உருண்டு வந்த காட்சி அனைவரையும் கண்கலங்க வைத்தது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“மீனவர்களின் பிரச்சினையில் தீர்க்கமான நடவடிக்கை எடுக்க வேண்டும்” - முதல்வர் மு.க. ஸ்டாலின்

Published on 22/03/2024 | Edited on 22/03/2024
Decisive action should be taken on the problem of fishermen CM MK Stalin

தமிழ்நாட்டைச் சேர்ந்த 32 மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி நேற்று (21.03.2024) இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் இலங்கை அரசால் சிறைபிடிக்கப்பட்டுள்ள அனைத்து மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவித்திட வேண்டும். மேலும் அவர்களுக்குத் தேவையான சட்ட உதவிகளைச் செய்திடவும் வலியுறுத்தி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு இன்று (22.03.2024) கடிதம் எழுதியுள்ளார்.

இது குறித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில், “இலங்கைக் கடற்படையினரால் இந்திய மீனவர்கள் அண்மைக் காலமாக தொடர்ந்து கைது செய்யப்படுவது ஆழ்ந்த வேதனையை அளிக்கிறது. கடந்த சில வாரங்களாக பல்வேறு சம்பவங்களில் இந்திய மீனவர்கள் தொடர்ந்து கைது செய்யப்படுவது. அவர்களது குடும்பத்தினரிடையேயும், மீனவ சமூகத்தினரிடையேயும் பெருத்த மன உளைச்சலையும் நிச்சயமற்ற சூழலையும் ஏற்படுத்தியுள்ளது. 21.03.2024 அன்று (நேற்று) தமிழ்நாட்டைச் சேர்ந்த 32 மீனவர்கள் கைது செய்யப்பட்டு, அவர்களது 5 விசைப்படகுகள் இலங்கைக் கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டுள்ளன.

கடந்த இரண்டு வாரங்களில் மட்டும் 76 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் பாதிக்கப்பட்ட மீனவர்களின் பாதுகாப்பு மற்றும் வாழ்வாதாரத்தைக் கருத்தில் கொண்டு, இப்பிரச்சினையில் தாமதம் ஏதுமின்றி தீர்வு காண, தீர்க்கமான நடவடிக்கை எடுக்க வலியுறுத்திகிறேன். இலங்கை நீதிமன்றங்களில் தண்டனை பெற்று, இலங்கை சிறைகளில் வாடும் மீனவர்களுக்கு தேவையான சட்ட உதவிகளை வழங்கிடவும் கேட்டுக் கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார். 

Next Story

நீதிமன்றம் போட்ட போடு - பதவி விலகும் ஆளுநர்?

Published on 22/03/2024 | Edited on 22/03/2024
the governor to resign?

நேற்று உச்சநீதிமன்றம் தமிழக ஆளுநருக்கு கடும் கண்டனம் தெரிவித்திருந்த நிலையில், திடீர் முடிவு ஒன்றை ஆளுநர் எடுக்க இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

சொத்துக் குவிப்பு வழக்கில் நீதிமன்றத்தில் தண்டனை பெற்றிருந்த முன்னாள் அமைச்சர் பொன்முடி, தண்டனையை எதிர்த்து செய்த மேல்முறையீட்டு வழக்கில் அவரது தண்டனையை உச்சநீதிமன்றம் நிறுத்தி வைத்திருந்தது. இதன் காரணமாக மீண்டும் பொன்முடி அமைச்சர் பதவி ஏற்பதாகத் தகவல் வெளியாகி இருந்தது. ஆனால் பொன்முடி பதவி ஏற்பதாக இருந்த 14 ஆம் தேதி ஆளுநர் திடீரென டெல்லி புறப்பட்டார்.

இதனால் பதவியேற்பு காலதாமதம் ஆகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கடந்த 17 ஆம் தேதி தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு ஆளுநர் எழுதிய கடிதத்தில், “பொன்முடி வழக்கில் உச்சநீதிமன்றம் தண்டனையைத்தான் நிறுத்தி வைத்துள்ளது. அவரை குற்றவாளி இல்லை என்று தீர்ப்பளிக்கவில்லை. திருக்கோவிலூர் தொகுதிக்கு சட்டமன்ற உறுப்பினர் இல்லாமல் இருக்கக் கூடாது என்பதற்காக இந்த தீர்ப்பை வழங்கியிருக்கலாம்” எனத் தெரிவித்திருந்தார். இச்சம்பவம் தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

பொன்முடி அமைச்சராக மீண்டும் பதவிப் பிரமாணம் செய்து வைக்க ஆளுநர் ரவி மறுத்ததால், அவருக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு தொடர்ந்தது. அந்த மனுவில், ‘அரசியல் சாசனத்தில் 164(1) பிரிவை ஆளுநர் ஆர்.என். ரவி அப்பட்டமாக மீறுகிறார். தமிழ்நாட்டின் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு இணையாக ஆட்சி நடத்த ஆளுநர் ஆர்.என். ரவி முயற்சிக்கிறார். எனவே, பொன்முடிக்கு அமைச்சராகப் பதவிப் பிரமாணம் செய்து வைக்க ஆளுநருக்கு உத்தரவிட வேண்டும்’ என்று கூறப்பட்டிருந்தது.

ஆளுநருக்கு எதிரான இந்த மனு உச்சநீதிமன்ற நீதிபதி டி.ஒய். சந்திர சூட் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. ‘பொன்முடியை அமைச்சராக்க முடியாது என ஆளுநர் கூறுவது அரசியல் சாசனத்துக்கு எதிரானது. பத்து மசோதாக்களை சட்டமன்றம் மீண்டும் நிறைவேற்றி அனுப்பிய பிறகும் அதற்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்கவில்லை’ உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளை தமிழக அரசு நீதிமன்றத்தில் வாதங்களாக வைத்தது.

அதனைத் தொடர்ந்து, 'தான் என்ன செய்கிறோம் என்று ஆளுநருக்கு தெரியாதா?' என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி காட்டமாகத் தெரிவித்ததோடு, தண்டனையை உச்சநீதிமன்றம் நிறுத்தி வைத்த பிறகும் பொன்முடிக்கு பதவிப் பிரமாணம் செய்து வைக்க ஆளுநர் மறுப்பது ஏன்? இது நீதிமன்ற அவமதிப்பாகும். உச்சநீதிமன்றத்துடன் ஆளுநர் விளையாட வேண்டாம். ஆளுநருக்கு பதவியேற்பை நிறுத்தி வைக்க அதிகாரம் இல்லை. ஆளுநர் மறுத்தால் நீதிமன்றம் உத்தரவிடும்' எனக் காட்டமாகத் தெரிவித்திருந்தார்.

மேலும், ஆளுநர் மீது நடவடிக்கை எடுக்க நேரிடும் என ஒன்றிய அரசின் அட்டர்னி ஜெனரலுக்கு உச்சநீதிமன்றம் தனது கண்டிப்பை தெரிவித்தது. 'உங்கள் ஆளுநர் என்ன செய்து கொண்டிருக்கிறார்' என்று ஒன்றிய அரசு தரப்பு வழக்கறிஞரிடமும் உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளதோடு, இந்த விவகாரத்தில் நாளைக்குள் ஆளுநர் முடிவெடுக்க வேண்டும் என கெடு விதித்தது உச்சநீதிமன்றம்.

இது பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தமிழக ஆளுநர் பதவி விலகுவது குறித்து ஆலோசனை நடத்தி வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஏற்கனவே திமுக அரசுக்கும் ஆளுநருக்கும் ஏழாம் பொருத்தமாக சென்று கொண்டிருந்தது. சட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காதது, ஆளுநர் உரை, திருக்குறள், சனாதனம் எனப் பல்வேறு சர்ச்சைகளில் ஆளுநர் சிக்கி வந்த நிலையில், ஆளுநர் பதவியை ராஜினாமா செய்ய இருப்பதாக வெளியான தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.