கள் இறக்கும் உரிமைப் போராட்டம் விரிவுபடுத்தப்படும் என்று தமிழ்நாடு விவசாயச் சங்கங்களின் கூட்டமைப்பின் தலைவர் நல்லுசாமி கூறியுள்ளார்.
தமிழ்நாடு விவசாயச் சங்கங்களின் கூட்டமைப்பின் தலைவர் நல்லுசாமி இன்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். கடந்த ஆட்சிக் காலத்தில் இருந்ததை விட இந்த ஆட்சியில் அளவுக்கு அதிகமான அளவில் மணல் அள்ளப்படுகிறது. எனவே அரசு அதனை கட்டுப்படுத்தி வரைமுறைப்படுத்த வேண்டும். எம்.சாண்டு, பி.சாண்டு விற்பனையை அதிகரித்து மணல் பயன்பாட்டை குறைக்க வேண்டும்.
கள் இறக்குவதற்கு 33 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டுள்ளதால், வருகின்ற ஜனவரி 23 ஆம் தேதி கள் இறக்கும் உரிமை மீட்பு போராட்டம் தமிழ்நாடு முழுவதும் விரிவுபடுத்தப்படும். தமிழக முதல்வர் அரசியலமைப்பு சட்டத்தை பின்பற்றி கள் மீதான தடையை நீக்குவார் என்ற நம்பிக்கை உள்ளது.
குஜராத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அளவுக்கு அதிகமான தேவையற்ற இலவசங்களை அந்த மாநிலத்தில் அறிவித்துள்ள ஆம் ஆத்மி கட்சிக்கு தன்னுடைய கண்டனத்தை பதிவு செய்வதோடு, பாராளுமன்றத்தில் இலவசத்திற்கு எதிரான சட்டம் இயற்றப்பட வேண்டும். அரசு ஊழியர்களுக்கு எப்படி சம்பள கமிஷன் பரிந்துரையின் அடிப்படையில் சம்பளம் நிர்ணயிக்கப்படுகிறதோ, அதேபோல் விவசாய கமிஷன் பரிந்துரையின் அடிப்படையில் விவசாயிகளை பாதுகாக்க வேண்டும்.
பழவகைகளை பயன்படுத்தி பிராந்தி, விஸ்கி, ஓட்கா உள்ளிட்ட மதுபானங்களை தயாரிக்க வேண்டும். கரும்பின் கழிவு பொருளான மொலாசிஸ் கொண்டு மது தயாரிப்பது பலருடைய உடல்நலத்திற்கு தீங்கு விளைவிக்க கூடியதாக உள்ளது. விவசாய பயிர் காப்பீடு என்பது தனி நபர் காப்பீடு போல இருந்தால் தான், விவசாயிகள் காப்பாற்றப்படுவார்கள். மேலும் காலநிலையை ஒட்டிய காப்பீட்டை மத்திய மாநில அரசுகள் ஏற்க முன்வர வேண்டும். அதில் அரசின் பங்களிப்பை தந்து ஊக்கப்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்தனர். இந்த செய்தியாளர் சந்திப்பில் வாழை விவசாயிகள் சங்கத்தலைவர் கணபதி, காவிரி பாசன விவசாயிகள் சங்க செயல்தலைவர் ராஜாராம் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.