நாமக்கல்லில் நடைபெற்ற திமுக பொதுக்கூட்டத்தில் திமுகவை சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் ஆ. ராசா எம்.பி சுதந்திரப் போராட்ட தியாகி வ.உ.சி.யை பற்றி இழிவாகப் பேசியதைக் கண்டித்தும், ஆ. ராசா மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் வெள்ளாளர் முன்னேற்றச் சங்கம் மற்றும் வெள்ளாளர் முன்னேற்றக் கழகம் சார்பில் திருச்சி நீதிமன்றம் அருகில் உள்ள வ.உ.சி சிலை முன்பு நிறுவனத் தலைவர் ஆர்.வி. ஹரிஹரன் தலைமையில் பிப்ரவரி 10 ஆம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் ஆறுநாட்டு சோழிய வேளாளர் சங்கத்தின் தலைவர் சிவானி செல்வராஜ், அகில இந்திய வ.உ.சி பேரவை இளைஞர் அணி தலைவர் வையாபுரி, சோழிய வேளாளர் நலச்சங்கம் பாலு, நேருஜி, வெள்ளாளர் முன்னேற்றச் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் வக்கீல் டோமினிக் செல்வம், மாவட்டத் தலைவர் வக்கீல் குமரேசன், இளைஞரணி தலைவர் குளித்தலை உதயா, பொருளாளர் அழகு முருகன், காங்கிரஸ் வழக்கறிஞர் பிரிவு தலைவர் வக்கீல் செந்தில்நாதன், காந்தி மார்க்கெட் வியாபாரிகள் முன்னேற்றச் சங்கத் தலைவர் எம்.கே. கமலக்கண்ணன், தில்லை நகர் கிருஷாந்த் சுப்பிரமணியன், காரு காத்த சங்க தலைவர் பாலசுப்பிரமணியன், ஆண்டாள் தெரு ஸ்ரீதர், உறையூர் மோகன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில், ஆ. ராசாவை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டது. அப்போது ஆ. ராசாவின் உருவப்படத்தை எரித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து ஆ. ராசாவை கண்டித்து கோஷங்கள் எழுப்பியவாறு போராட்டக்காரர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பின்னர் போலீசார் போராட்டக்காரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதைத் தொடர்ந்து அவர்கள் கலைந்து சென்றனர். இந்த போராட்டத்தால் திருச்சி நீதிமன்றம் அருகில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் ஹரிஹரன் தலைமையில் 100க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.