Striving to create an egalitarian society  Chief Minister's speech

சென்னைப் பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்தின் சார்பில் தூய்மைப் பணியாளர்களை தொழில் முனைவோர்களாக மாற்றும் உன்னத திட்டத்தின் கீழ் தூய்மைப் பணியாளர்களுக்கு முதற்கட்டமாக 100 நவீன கழிவுநீர் அகற்றும் வாகனங்கள் வழங்குவதற்கான விழா இன்று (6.12.2024) நடைபெற்றது. சென்னை ராஜரத்தினம் மைதானத்தில் நடைபெற்ற விழாவில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கலந்து கொண்டார். அப்போது அவர் கழிவுநீர் அகற்றும் வாகனங்களுக்கான சாவிகளை தூய்மைப் பணியாளர்களுக்கு வழங்கினார். மேலும் அவ்வாகனங்களின் சேவைகளை கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் கே.என். நேரு, எஸ். ரகுபதி, மா. சுப்பிரமணியன், பி.கே.சேகர்பாபு, மா.மதிவேந்தன், பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் ஆர். பிரியா, சட்டமன்ற உறுப்பினர்கள் கு. கு. செல்வப்பெருந்தகை,.இ. பரந்தாமன், துணை மேயர் மு.மகேஷ் குமார், தலைமைச் செயலாளர் நா.முருகானந்தம் என அரசு உயர் அலுவலர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

Advertisment

இந்நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பேசுகையில், “சென்னை பெருநகரில் இருக்கும், கழிவுநீர் கட்டமைப்பு பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ள 539 இயந்திரங்கள் பயன்பாட்டில் இருக்கிறது. புதிதாக 58 கழிவுநீர் பராமரிப்பு இயந்திரங்கள் 28 கோடியே 55 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கடந்த ஆகஸ்ட் 12 அன்று சென்னை குடிநீர் வாரியத்திற்கு வழங்கப்பட்டிருக்கிறது. இந்த இயந்திரங்களை இயக்கவும், கழிவுநீர் கட்டமைப்புகளை பராமரிக்கவும், 728 நிரந்தரப் பணியாளர்கள் மற்றும் ஆயிரத்து 489 ஒப்பந்த பணியாளர்கள் மூலமாக இந்தப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்தத் திட்டத்தின் மூலமாக, பணியாளர்களுக்கு மாதத்திற்கு குறைந்தபட்ச வருமானமாக தலா 50 ஆயிரம் என்று 7 ஆண்டுகளுக்கு உறுதி செய்யப்படும்.

Advertisment

இந்தப் பணிகளுக்காக 500 கோடியே 24 இலட்சம் ரூபாய் நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. இதன்மூலமாக இந்த குடும்பத்தினருக்கு நிரந்தர வருமானம் உறுதி செய்யப்பட்டு அவர்களின் வாழ்வாதாரத்தையும், மாண்பையும் மேம்படுத்த இந்த சிறப்புத் திட்டம் வழிவகுத்திருக்கிறது. இப்படி பட்டியலின, பழங்குடியின மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் செய்வதுடன், நம்முடைய கடமை முடிந்துவிட்டதாக என்று நான் கருதவில்லை. சமூகநீதி, சுயமரியாதை, சமத்துவம், சகோதரத்துவம், பெண்ணுரிமை, ஒடுக்கப்பட்டோர் உரிமை ஆகியவற்றை உள்ளடக்கிய திராவிடவியல் கோட்பாடுகளை சட்டரீதியாக மாற்றி கொள்கைகளை ஆட்சி நெறிமுறைகளாக ஆக்கவேண்டும் என்று நினைக்கிறோம். அதற்காக தொடர்ந்து உழைக்கிறோம்.

இந்தியாவிலேயே வேறு எந்த மாநிலமும் நிறைவேற்றாத, புதுமை திட்டங்களை நாம் நிறைவேற்றுகிறோம். சமூகநீதி வழியாக, சமத்துவ சமுதாயத்தை படைக்க பாடுபடுகிறோம். நம்முடைய இலட்சிய பயண வழியில் ஒரு சில தடைகள், இடர்பாடுகள் இருப்பதை நான் மறுக்கவில்லை. உடனே அதை மட்டும் சிலர் பெரிதுப்படுத்தி, அரசியலாக பார்க்க என்னென்ன பேசுகிறார்கள். ‘இதுதான் பெரியார் மண்ணா? இதுதான் அம்பேத்கர் மண்ணா?’ என்று கேள்வி கேட்கிறார்கள். ஒரு இடத்தில் நடந்த சம்பவத்தை முழுமையாக புரிந்துக்கொள்ளாமல், அதில் அரசின் செயல்பாடுகளை தெரிந்துக்கொள்ளாமல், தெரிந்திருந்தாலும், திட்டமிட்டு வதந்திகளை பரப்பி, திராவிட மாடல் அரசுக்கு அவப்பெயர் உண்டாக்கவேண்டும் என்று நினைக்கிறவர்களுக்கு நான் சொல்லிக்கொள்ள விரும்புவது; உங்கள் மதவெறி, சாதி வெறி எண்ணம் இந்த பெரியார் மண்ணில், அம்பேத்கர் கொள்கைகள் உரம் பெற்று இருக்கும் மண்ணில் ஒருபோதும் நிறைவேறாது.

Advertisment

 Striving to create an egalitarian society  Chief Minister's speech

இந்த ஸ்டாலின் இருக்கும் வரை உங்களால் அதை நிறைவேற்றவும் முடியாது. தந்தை பெரியாரும், புரட்சியாளர் அம்பேத்கருமே தாங்கள் வாழ்ந்த காலத்தில் இதுபோன்ற பல நெருக்கடிகளை எதிர்கொண்டு, எதிர்நீச்சல் போட்டுதான் இலட்சியப் பயணத்தை தொடர்ந்தார்கள். அவர்களின் கொள்கை வழி நடக்கும் நம்முடைய அரசும், சமூகத்தில் நிலவும் இடர்பாடுகளை நீக்கி, சமூகத்தை பிளவுபடுத்தும் சக்திகளை மக்களிடம் அம்பலப்படுத்தி, சமூகநீதிக் கொள்கையை நிலைநாட்டி, சமத்துவ சமுதாயத்தை உருவாக்கியே தீருவோம். இதுதான் தந்தை பெரியார் மீதும், புரட்சியாளர் அம்பேத்கர் மீதும் நாங்கள் எடுக்கும் உறுதிமொழி” எனப் பேசினார்.