சென்னை கிண்டியில் கலைஞர் நூற்றாண்டு அரசு மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனையின் புற்றுநோயியல் துறையின் தலைமை மருத்துவராக பாலாஜி பணியாற்றி வருகிறார். இவரை இளைஞர் ஒருவர் நேற்று (13.11.2024) கத்தியால் குத்திய சம்பவம் தமிழகத்தில் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. அதே சமயம் மருத்துவர் பாலாஜியைத் தாக்கிய இளைஞர் விக்னேஷ்வரனை போலீசார் கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர். இதற்கிடையில், மருத்துவர் தாக்கப்பட்ட சம்பவத்தைக் கண்டித்தும், பல்வேறு கோரிக்கைகளை அரசிடம் முன்வைத்தும் தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்கம் நேற்று போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்தில் ஈடுபட்ட மருத்துவர்கள் சங்கத்துடன், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று பேச்சுவார்த்தை நடத்தினார்.
இருப்பினும் மாநிலம் முழுவதும் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் அரசு மருத்துவர்கள் இன்று வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், புற நோயாளிகள் சிகிச்சைப் பிரிவுகளின் சேவைகள் பாதிக்கப்பட்டன. அவசர சிகிச்சைப் பிரிவு மட்டும் வழக்கம் போல் செயல்பட்டன. இதனையடுத்து வேலைநிறுத்தப் போராட்டத்தைத் திரும்பப் பெறுவதாக அரசு மருத்துவர்கள் சங்கம் அறிவித்தது. இதற்கிடையே மருத்துவமனைகளில் பாதுகாப்பைப் பலப்படுத்துவது தொடர்பான ஆய்வுக் கூட்டம் தமிழக டிஜிபி சங்கர் ஜிவால் அதிரடி தலைமையில் நடைபெற்றது.
இந்நிலையில் டிஜிபி சங்கர் ஜிவால், காவல் துறை உயர் அதிகாரிகளுக்கு அதிரடி உத்தரவு ஒன்றைப் பிறப்பித்துள்ளார். அதில், “தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் இரவு நேரப் பாதுகாப்பை அதிகரிக்க வேண்டும். மருத்துவமனைகளில் தாக்குதல் சம்பவம் ஏதேனும் நடந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். கூடுதல் ரோந்து காவலர்கள் கூடுதலாக நியமிக்கப்பட்டு ரோந்து வாகனங்களைப் பயன்படுத்தி மருத்துவமனைகளைக் கண்காணிக்க வேண்டும். ஏதேனும் அசம்பாவித சம்பவங்கள் நடந்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். பாதுகாப்பு விவகாரம் தொடர்பாக மருத்துவமனை முதல்வர்கள், பொறுப்பாளர்கள் தொடர்பில் இருக்க வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.