கடலூர் மாவட்டம், வடலூரைச் சேர்ந்த ஜான் (பெயர் மாற்றப்பட்டுள்ளது), வடலூர் அருகில் உள்ள கீழ் வடக்குத்து கிராமத்தைச் சேர்ந்த தீபன் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) ஆகிய இரு மாணவர்களும் நெய்வேலி வட்டம் 4ல் உள்ள ஒரு தனியார் மெட்ரிக் பள்ளியில் பிளஸ் 2 படித்து வருகிறார்கள். கடந்த 6ஆம் தேதி பள்ளியை விட்டு வெளியே வரும்போது மேற்குறிப்பிட்டுள்ள இரு மாணவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது.
இவர்களுக்கிடையே ஏற்பட்ட தகராறில் தீபனுக்கு ஆதரவாக நெய்வேலியைச் சேர்ந்த கல்லூரி படிக்கும் இளைஞர்கள் ரகுபதி, அருண் சித்தார்த், மதிவதனன், ஆனந்த், ஆகியோர் தீபனுடன் சேர்ந்து கொண்டு உருட்டுக்கட்டையால் ஜானை கடுமையாகத் தாக்கியுள்ளனர். இதில் படுகாயம் அடைந்த ஜானை மீட்டு அங்கிருந்தவர்கள், கடலூர் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்று சேர்த்துள்ளனர்.
இது சம்பந்தமாக ஜானின் தந்தை, நெய்வேலி டவுன்ஷிப் போலீசில் புகார் அளித்துள்ளார். அவரது புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் தீபன் மற்றும் அவரது நண்பர்கள் ஆகியோரை கைதுசெய்து சிறையில் அடைத்தனர். இந்த நிலையில், மேற்படி நால்வரும் ஜாமீன் கேட்டு நெய்வேலி நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளனர். இவர்களது மனுவை விசாரித்த நீதிபதி சுப்பையா, ‘வள்ளலார் வாழ்ந்த மண்ணில் இந்த மாணவர்களின் செயல் வருத்தத்தை தந்துள்ளது. மேற்படி நால்வரும் சனி மற்றும் ஞாயிறு கிழமைகளில் வடலூர் சத்திய ஞானசபையில் உள்ள அதிகாரி முன்பு ஆஜராக வேண்டும். அங்கு வள்ளலாரின் அருள் போதனைகளை கேட்க வேண்டும். அதன் பிறகு அங்கு வந்து தங்கியுள்ள முதியோர்களுக்கு சேவை செய்ய வேண்டும். இதற்கான சான்றிதழை சபையின் அதிகாரியிடமிருந்து பெற்று அதை வரும் ஏப்ரல் 1ம் தேதி இந்த நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும்’ என்று உத்தரவிட்டு ஜாமீன் வழங்கியுள்ளார். இந்த வித்தியாசமான ஜாமீன் உத்தரவு வள்ளலார் கொள்கைகளை பரப்பி வரும் சான்றோர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.