வங்கக் கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறியுள்ளது. இதற்கு மிக்ஜாம் எனப் பெயரிடப்பட்டுள்ளது. புயல் காரணமாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் நேற்று முன்தின இரவிலிருந்து பலத்த சூறைக் காற்றுடன் கனமழை பொழிந்தது. சென்னையில் தொடர் மழை காரணமாக பல்வேறு இடங்களில் மழைநீர் தேங்கி உள்ளது.
நேற்று முற்பகல் சென்னையில் இருந்து 90 கிலோ மீட்டர் தூரத்தில் நிலை கொண்டிருந்த புயல் ஆனது தீவிரப் புயலாக வலுப்பெற்றதாக அறிவிக்கப்பட்டிருந்தது. அதனைத் தொடர்ந்து நேற்று பிற்பகல் 2:30 மணி அளவில் சென்னைக்கு 100 கிலோ மீட்டர் தொலைவில் நிலை கொண்டிருந்த புயல், தற்போது சென்னையை விட்டு விலகி 170 கிலோமீட்டர் தொலைவிற்கு சென்றது. சென்னையில் இருந்து வடகிழக்கில் 170 கிலோ மீட்டர் தொலைவில் நிலை கொண்டுள்ள இப்புயல் இன்று முற்பகல் ஆந்திரா அருகே கரையை கடக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் இருந்து புயல் விலக்கிச் சென்றதால் சென்னையில் வெகுவாக மழை வாய்ப்பு குறையும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதிகாலை 2.30 மணி நிலவரப்படி ஆறு மணி நேரமாக 7 கிலோமீட்டர் வேகத்தில் புயல் வடக்கு நோக்கி நகர்ந்து வருவதாக கணிப்புகள் தெரிவித்துள்ளன. புயல் காரணமாக சென்னையின் பல்வேறு பகுதிகளில் மின்சாரம் தடைப்பட்டுள்ள நிலையில், சென்னையின் அனைத்து பகுதிகளிலும் அடுத்த சில மணி நேரங்களில் மின்சாரம் படிப்படியாக வழங்கப்படும் என மின்சார வாரியம் தெரிவித்துள்ளது.