ஓவியம் என்பது எந்த காலகட்டத்திலும் மதிப்புமிக்க வரைகலை என்ற போதிலும் மாடர்ன் உலகத்தில் அவற்றின் பரிமாணங்கள் நாளுக்கு நாள் மாறிக்கொண்டே வருகிறது. அண்மைக்காலமாக இரத்தத்தைக் கொண்டு ஓவியங்கள் வரைவது என்பது ட்ரெண்டாகி வந்தது. குறிப்பிட்ட நபரின் விருப்பத்திற்கு இணங்க அவரது உடலில் இருந்து தேவையான அளவு ரத்தம் எடுக்கப்பட்டு அதனைக் கொண்டு அவர்களுக்கு பிடித்தமான நபரை ஓவியமாக வரைந்து அதனை பரிசு பொருளாகக் கொடுப்பது என்பது அண்மைக்காலமாக ட்ரெண்ட் ஆகி வருகிறது.
இந்நிலையில், உயிர் காக்கும் விலைமதிப்பற்ற ரத்தத்தை வைத்து ஓவியங்கள் வரைவது என்பது, கடுமையான தண்டனைக்குரியது என சுகாதாரத்துறை எச்சரித்துள்ளது. அண்மைக்காலமாகவே இதுதொடர்பான புகார்கள் தமிழக சுகாதாரத்துறைக்கு வந்தது. சில நபர்கள் இது தொடர்பாக 'ப்ளட் ஆர்ட்' என்ற தலைப்பில் நிறுவனங்களை ஆரம்பித்து நடத்தி வந்தது தெரியவந்தது. குறிப்பாக சென்னை தியாகராய நகரில் 'தி பிளட் ஆர்ட்' என்ற பெயரில் வரைகலைக்கூடம் செயல்பட்டு வந்தது.
தொடர் புகார்களை அடுத்து அந்த வரைகலைக் கூடத்திற்கு சென்ற தமிழக சுகாதாரத்துறை அதிகாரிகள் வாடிக்கையாளர்களிடம் இருந்து ரத்தத்தை எடுப்பதற்கு பயன்படுத்திய பொருட்களை பறிமுதல் செய்ததோடு அங்கிருந்து ரத்த ஓவியங்களையும் பறிமுதல் செய்தனர். இனிமேல் ரத்த ஓவியங்களை வரையக்கூடாது எனவும் எச்சரித்துவிட்டு சென்றனர்.
செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனிடம் இதுகுறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பிய நிலையில், பதிலளித்த அவர், '''பிளட் ஆர்ட்’ என்கிற ரத்த ஓவியம் வரைவதை இத்தோடு நிறுத்திக் கொள்ளுங்கள். பிளட் ஆர்ட் நிறுவனங்கள் மீது இன்று முதல் தமிழகத்தில் தடை விதிக்கப்படுகிறது. இதை யாராவது மீறி ரத்த ஓவியங்கள் வரைந்தாலும், அதற்கான கூடங்களைத் திறந்து வைத்திருந்தாலும் சட்டபூர்வ நடவடிக்கை எடுக்கப்படும். அவைகளுக்கு சீல் வைக்கப்படும்'' என எச்சரித்தார்.