Skip to main content

ஸ்டெர்லைட் ஆலை மூடல் ஆணை சட்டத்தின் முன் நிற்காது: சட்டப்பாதுகாப்பை உறுதி செய்க! - அன்புமணி இராமதாஸ்

Published on 29/05/2018 | Edited on 29/05/2018

ஸ்டெர்லைட் ஆலை மூடல் ஆணை சட்டத்தின் முன் நிற்காது: சட்டப்பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்று பா.ம.க. இளைஞரணித் தலைவர் அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

 

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 

 

தூத்துக்குடியில் செயல்பட்டு வந்த ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட தமிழக அரசு ஆணையிட்டுள்ளது.  நாசகார ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடிய அப்பாவி பொதுமக்கள் 14 பேரை காவல்துறையை ஏவி கொடூரமாக படுகொலை செய்ததால் ஏற்பட்ட அவப்பெயரைத் துடைத்துக் கொள்ளவே இப்படி ஓர் ஆணையை  அரசு பிறப்பித்திருக்கிறது. ஆனால், இது யாருக்கும் பயனளிக்காத, அப்பட்டமான ஏமாற்று வேலையாகும்.
 

தூத்துக்குடி சிப்காட் வளாகத்தில் செயல்பட்டு வந்த ஸ்டெர்லைட் ஆலைக்கு வழங்கப்பட்டிருந்த அனுமதியை புதுப்பிக்க கடந்த மாதம் தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் மறுத்து விட்டது. அதன் தொடர்ச்சியாக  ஸ்டெர்லைட் ஆலையை உடனடியாக மூடும்படி கடந்த மே 23-ஆம் தேதி தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் ஆணையிட்டது. அதன்படி ஆலை மூடப்பட்டிருந்த நிலையில், மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் பிறப்பித்த ஆணையை அடிப்படையாகக் கொண்டு, அந்த ஆலையை நிரந்தரமாக மூட அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Confirm legal protection! Anbumani Ramadoss


 

தமிழக அரசு பிறப்பித்துள்ள இந்த அரசாணை சட்டத்தின் முன் நிற்காது என்பது தான் உண்மையாகும். ஏனெனில் ஸ்டெர்லைட் ஆலையை மூட தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் சார்பில் முன்வைக்கப்பட்டக் காரணம் வலுவற்றதாகும். ஸ்டெர்லைட் ஆலையை தொடர்ந்து இயக்குவதற்கான அனுமதியை தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் மறுத்து விட்ட நிலையில், ஆலையை மீண்டும் இயக்குவதற்கான பணிகளில்  ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் ஈடுபட்டிருந்தாகவும், இதை கடந்த 18,19 ஆகிய தேதிகளில் ஆலையை ஆய்வு செய்த மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் கண்டுபிடித்ததாகவும் அதனடிப்படையில் ஆலையை மூட ஆணையிட்டதாகவும் மாசுக்கட்டுப்பாட்டு வாரிய ஆணையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதே குற்றச்சாற்றின் அடிப்படையில் தான் ஆலையை நிரந்தரமாக மூட தமிழ்நாடு அரசு அரசாணை பிறப்பித்துள்ளது. காய்கறி  வெட்டுவதற்காக கத்தி வாங்கிச் செல்பவரை கொலைச் சதியில் கைது செய்வதற்கு இணையான, யூகத்தின்  அடிப்படையிலான குற்றச்சாற்று இதுவாகும். இந்நடவடிக்கை ஸ்டெர்லைட் ஆலைக்கு சாதகமாகவே அமையும்.

 

ஓர் ஆலையை மூடுவது எளிதான ஒன்றல்ல. ஆலையை மூடி பிறப்பிக்கப்படும் அரசாணை என்பது  Speaking order-க்கு இணையாக விரிவான காரணங்களை பட்டியலிட்டிருக்க வேண்டும். ஒரு பத்தியில் அரசாணை  பிறப்பிப்பது எந்த வகையிலும் பயனளிக்காது. ஸ்டெர்லைட் ஆலை தொடங்க 1994-ஆம் ஆண்டு அனுமதி வழங்கப்பட்ட நாளில் இருந்து இன்று வரை, மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தால் விதிக்கப்பட்ட எந்த நிபந்தனையையும் ஸ்டெர்லைட் ஆலை மதிக்கவில்லை.  இதைக் காரணம் காட்டியே ஆலையை மூடியிருக்கலாம். கடந்த 2013-ஆம் ஆண்டு ஆலைக்கான அனுமதி புதுப்பிக்கப்பட்ட நாள் முதல் இன்று வரையிலான ஐந்தாண்டுகளில் சுற்றுச்சூழலுக்கும், மனித குலத்திற்கும் பேரழிவை ஏற்படுத்தக்கூடிய ஏராளமான விபத்துகள் ஸ்டெர்லைட் ஆலையில் நிகழ்ந்துள்ளன. அத்தகைய விபத்துகளில் ஏராளமானோர் உயிரிழந்துள்ளனர். ஆலையிலிருந்து வெளியேறும் நச்சுக்காற்றை சுவாசிப்பதால் ஆயிரக்கணக்கானோர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவற்றையெல்லாம் ஆதாரங்களுடன் பட்டியலிட்டு, ஆலைக்கு எதிராக பொதுமக்கள் நடத்தி வரும் போராட்டங்களையும் பதிவு செய்து அதனடிப்படையில் ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதாக Speaking order பிறப்பித்து இருந்தால் அது மிகவும் வலிமையானதாக இருந்திருக்கும். அதை எதிர்த்து எந்த நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தாலும் ஸ்டெர்லைட் ஆலையால் வெற்றி பெற முடியாது.

Confirm legal protection! Anbumani Ramadoss


 

ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்கு ஆயிரமாயிரம் காரணங்கள் உள்ளன. நீதிமன்றங்களையும், அரசையும், அந்நிறுவனம் ஏமாற்றியுள்ளது. ஸ்டெர்லைட் ஆலையின் உற்பத்தித் திறன் கடந்த 2006-ஆம் ஆண்டில் தினமும் 900 டன் என்ற அளவிலிருந்து 1200 டன் ஆக அதிகரிக்கப்பட்டது. இதற்கு தேவையான சுற்றுச் சூழல் பாதுகாப்பு கட்டமைப்பை உருவாக்க ஆலை வளாகத்தில் 172.17 ஹெக்டேர் நிலம் தேவை. ஆலையிடம் 102 ஹெக்டேர் மட்டுமே நிலம் இருந்த நிலையில், போதுமான நிலம் இருப்பதாகக் கூறி தமிழக அரசை  ஏமாற்றியது. சுற்றுச்சூழல் பாதிப்பை தவிர்க்க 43 ஹெக்டேருக்கு பசுமைவெளி உருவாக்கப்பட வேண்டும் என்பது விதி. ஆனால், அந்த விதியை ஆலை மதிக்கவில்லை. 1200 டன் தாமிரம் உற்பத்தி செய்யப்படும் ஆலையில் புகைபோக்கி 123 மீட்டர் உயரத்தில் அமைக்கப்பட வேண்டும். ஆனால், ஸ்டெர்லைட் ஆலையின் புகைப் போக்கி வெறும் 60 மீட்டர் உயரத்தில் மட்டுமே அமைக்கப்பட்டுள்ளது. ஸ்டெர்லைட் ஆலையால்  குடிநீர் மாசுபட்டிருப்பதை மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் உறுதி செய்துள்ளது. அதுமட்டுமின்றி, ஸ்டெர்லைட் ஆலையிலிருந்து வெளியாகும் மாசுக்களால் மக்களின் உடல்நிலையில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து 6 மாதங்களுக்கு ஒருமுறை மருத்துவ ஆய்வு மேற்கொள்ளப்பட வேண்டும் என்ற உச்சநீதிமன்றத் தீர்ப்பை ஸ்டெர்லைட் இன்று வரை மதிக்கவில்லை. இவ்வாறு ஸ்டெர்லைட்டுக்கு எதிராக பல அம்சங்கள் உள்ளன.
 

 

ஆனால், இப்போது அபத்தமான காரணத்தைக் கூறி ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டிருக்கிறது. இதை எதிர்த்து தமிழ்நாடு மாசுக்காட்டுப்பாட்டு வாரிய மேல்முறையீட்டு தீர்ப்பாயம், தேசிய பசுமைத் தீர்ப்பாயம், உச்சநீதிமன்றம் ஆகியவற்றில் ஸ்டெர்லைட் ஆலை வழக்குத் தொடரலாம். அவ்வாறு வழக்குத் தொடர்ந்தால்  ஆலையை மூடுவதற்கான தமிழக அரசின் ஆணை ரத்து செய்யப்படலாம். இப்படி நடக்க வேண்டும் என்பதற்காகத் தான் வலிமையற்ற, அபத்தமானக் காரணங்களைக் கூறி ஓர் அரசாணையை தமிழக அரசு பிறப்பித்திருக்கிறது. ‘‘நான் அடிப்பது போல அடிக்கிறேன்... நீ அழுவதைப் போல அழு’’ என்று தமிழக அரசும், ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகமும் சொல்லிவைத்துக் கொண்டு நாடகமாடுவதாகவேத் தோன்றுகிறது.

 

இந்த நாடகத்தின் முடிவில் பாதிக்கப்படப் போவதும், துரோகத்திற்கு ஆளாகப் போவதும் தமிழக மக்கள் தான். அப்படி ஒரு துரோகம் அரங்கேற்றப்படக் கூடாது. அதை உறுதி செய்ய வேண்டுமானால் ஸ்டெர்லைட் ஆலையால் கடந்த 22 ஆண்டுகளில் ஏற்பட்ட விபத்துகள், உயிரிழப்புகள் ஆகியவற்றை ஆவணப்படுத்தி அவற்றில் அடிப்படையில் ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதாகக் கொள்கை முடிவு எடுத்து, அம்முடிவுக்கு அமைச்சரவையின் ஒப்புதலைப் பெற வேண்டும். இது தான் ஸ்டெர்லைட் ஆலையை மூடும் நிரந்தரமாக மூடும் முடிவுக்கு சட்டப்பாதுகாப்பை வழங்கும். எனவே, மேற்கண்ட வழிமுறையில் ஸ்டெர்லைட் ஆலைக்கு ஆலைக்கு எதிராக நடவடிக்கை எடுத்து அது நிரந்தரமாக மூடப்படுவதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும்.
 

சுற்றுச்சூழலுக்கும், மக்கள் நலனுக்கும் தீங்கு என்பது ஸ்டெர்லைட் ஆலையுடன் முடிவடைந்து விடுவதல்ல. தூத்துக்குடி சிப்காட் வளாகம், கடலூர், இராணிப்பேட்டை உள்ளிட்ட சிப்காட் வளாகங்களில் சுற்றுச்சூழலை மாசுபடுத்தி, மக்களின் உயிரைப் பறிக்கும் தொழிற்சாலைகள் ஏராளமாக உள்ளன. அவற்றால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து உலக சுகாதார நிறுவனம், இந்திய மருத்துவ ஆராய்ச்சிக்குழு, அறிவியல் மற்றும் சுற்றுச்சூழலுக்கான மையம், தேசிய சுற்றுச்சூழல் பொறியியல் ஆராய்ச்சி நிறுவனம் (நீரி) ஆகிய நிறுவனங்களைக் கொண்டு ஆய்வு நடத்தி, பாதிப்பை ஏற்படுத்தும் ஆலைகளை மூட தமிழக அரசு ஆணையிட வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
 

சார்ந்த செய்திகள்

 

Next Story

“மின் உற்பத்தியை நிறுத்திவிட்டார்கள்” - அன்புமணி ராமதாஸ் பேச்சு!

Published on 19/07/2024 | Edited on 19/07/2024
They have stopped power generation Anbumani Ramadoss speech

தமிழகத்தில் மின் கட்டணத்தை உயர்த்தி தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அறிவிப்பு வெளியிட்டிருந்தது. இந்த அறிவிப்பின்படி ஜூலை ஒன்றாம் தேதி முதல் மின் கட்டணம் உயர்த்தப்பட்டதாக அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இது குறித்து பல்வேறு அரசியல் கட்சியினரும் தங்களது கண்டனங்களை தெரிவித்திருந்ததனர்.  இந்நிலையில் மின்கட்டன உயர்வை திரும்ப பெற கோரி பாமக சார்பில் சென்னை எழும்பூரில் உள்ள ராஜரத்தினம் மைதானம் அருகில் இன்று (19.07.2024) ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் மின் கட்டண உயர்வால் பொதுமக்கள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளதாக  கண்டன முழக்கங்களை எழுப்பி வருகின்றனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பேசுகையில், “அரசு துறையில் மின் உற்பத்தியை நிறுத்திவிட்டார்கள். ஏனென்றால் 20 ஆயிரம் மெகாவாட் மின் தேவை உச்சத்தில் இருக்கும் போது அரசு சார்பில் செல்லக்கூடிய மின்சாரம் 5 ஆயிரத்து 500 மெகாவாட் தான். 20 ஆயிரம் மெகாவாட் மின் தேவையில் வெறும் 5 ஆயிரத்து 500 மெகாவாட் தான் தமிழக அரசு உற்பத்தி செய்கிறது.

மீதம் உள்ள 14 ஆயிரத்து 500 மெகாவாட் மின்சாரத்தை மத்திய அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் இருந்து வாங்கப்படுகிறது. அதிலும் குறிப்பாக அதிகப்படியான மின்சாரம் தனியாரிடம் இருந்து வாங்கப்படுகின்றன. கிட்டத்தட்ட 12 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் தனியாரிடம் இருந்து வாங்கப்படுகிறது. தனியாரிடம் இருந்து மின்சாரத்தை பெறுவதற்கான காரணம் என்னவென்றால் காசு, பணம், துட்டு, மணி, மணி. அரசுத்துறையில் ஒரு யூனிட் மின்சாரம் தயாரிக்க வேண்டும் என்றால் சராசரியாக 3.40 ரூபாய் தேவைப்படும். ஆனால் உச்சப்பட்ச மின் தேவை உள்ள நேரத்தில் ஒரு யூனிட் மின்சாரம் 12 ரூபாய்க்கு தனியாரிடம் இருந்து வாங்கப்படுகிறது” எனத் தெரிவித்தார். 

Next Story

கர்நாடக வேலைவாய்ப்பில் 100 சதவீதம் கன்னடருக்கே; தமிழக அரசு சட்டமியற்ற தயங்குவது ஏன்? - அன்புமணி

Published on 17/07/2024 | Edited on 17/07/2024
Ramadoss question  govt reluctant to legislate to give priority to Tamils ​​in TN employment

கர்நாடகத்தில் தனியார் வேலைவாய்ப்பில் 100% கன்னடருக்கே ஒதுக்கீடு செய்யும் சட்ட முன்வரைவுக்கு அம்மாநில அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. ஆனால் தமிழகத்தில் சட்டமியற்ற திமுக அரசு தயங்குவது ஏன்? என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கர்நாடகத்தில் தனியார் நிறுவனங்களில் உள்ள சி மற்றும் டி பிரிவு பணியிடங்கள் அனைத்தையும் முழுக்க முழுக்க கன்னடர்களைக் கொண்டு தான் நிரப்ப வேண்டும் என்ற சட்ட முன்வரைவுக்கு அம்மாநில அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்த முன்வரைவு நாளை அம்மாநில சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்படவுள்ள நிலையில், தமிழ்நாட்டில் இத்தகைய சட்டத்தை கொண்டுவருவாதக் கூறி வெற்றி பெற்ற திமுக அரசு, அதை நிறைவேற்ற இதுவரை நடவடிக்கை எடுக்காதது கண்டிக்கத்தக்கது.

கர்நாடகத் தலைநகர் பெங்களூருவில் முதலமைச்சர் சித்தராமையா தலைமையில் நேற்று நடைபெற்ற மாநில அமைச்சரவைக் கூட்டத்தில்,‘‘கர்நாடக மாநில தொழிற்சாலைகள், ஆலைகள் மற்றும் பிற அமைப்புகளில் உள்ளூர் மக்களுக்கு வேலை வழங்குவதற்கான சட்ட முன்வரைவு’’க்கு ஒருமனதாக ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இந்த சட்ட முன்வரைவு நிறைவேற்றப்பட்டால், கர்நாடகத்தில் செயல்பட்டு வரும் தனியார் தொழில் மற்றும் வணிக நிறுவனங்களில் உள்ள மேலாண்மை பணிகளில் 50 விழுக்காடும், மேலாண்மை அல்லாத பணிகளில் 75 விழுக்காடும், சி மற்றும் டி பிரிவு பணிகளில் 100 விழுக்காடும் கர்நாடக மக்களுக்கே வழங்கப்பட வேண்டும். இந்த சட்டம் பிற மாநிலத்தவருக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்றாலும் கூட, கர்நாடக மக்களின் வேலை உரிமையை பாதுகாக்கும் என்ற வகையில் வரவேற்கத்தக்கது.

கர்நாடகத்தில் மட்டுமின்றி, இந்தியாவின் பெரும்பான்மையான மாநிலங்களில் இத்தகைய சட்டங்கள் நடைமுறையில் உள்ளன. குஜராத், மராட்டியம் ஆகிய மாநிலங்களில் 80% பணிகளும், ஆந்திரம், ஹரியானா மற்றும் ராஜஸ்தானில் 75% பணிகளும், மத்திய பிரதேசத்தில் 70% பணிகளும் உள்ளூர் மக்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. தெலுங்கானத்திலும் இத்தகைய சட்டம் நடைமுறையில் இருக்கிறது. ஆந்திரத்தில் இத்தகைய சட்டம் இயற்றப்பட்டதன் காரணமாக கும்மிடிப்பூண்டியில் இருந்து கூப்பிடும தொலைவில் உள்ள ஸ்ரீசிட்டி தொழில்பேட்டையில் தமிழர்களுக்கு அமைப்பு சார்ந்த வேலைவாய்ப்புகள் மறுக்கப்படுகின்றன. கர்நாடகத்திலும் இத்தகைய சட்டம் கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்பட்டால், கர்நாடகத்திலும் தமிழர்களுக்கு வேலைவாய்ப்பு மறுக்கப்படும். இதனால், அங்குள்ள மென்பொருள் நிறுவனங்களில் தமிழர்களுக்கு இதுவரை கிடைத்து வந்த வேலைவாய்ப்புகள் இனி பறிக்கப்பட்டுவிடும்.

இந்த நிலையை மாற்றி, தமிழக இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உறுதி செய்ய வேண்டும் என்றால், தமிழகத்தில் உள்ள தொழிற்சாலைகள் மற்றும் தொழில் நிறுவனங்களில் குறைந்தது 80% வேலைவாய்ப்புகள் தமிழக இளைஞர்கள் மற்றும் இளம்பெண்களுக்கு வழங்கப்பட வேண்டும் என்று பல ஆண்டுகளாக பாட்டாளி மக்கள் கட்சி வலியுறுத்தி வருகிறது. ஆனால், தமிழர்கள் நலன்களைக் காப்பதாகக் கூறி ஆட்சிக்கு வரும் கட்சிகள். இத்தகைய சட்டத்தை இன்று வரை நிறைவேற்றவில்லை.

2021ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலின் போது, தமிழகத்தில் உள்ள தொழில் நிறுவனங்களில் 75% வேலை வாய்ப்புகள் தமிழர்களுக்கே வழங்க, சட்டம் கொண்டு வரப்படும் என்று திமுக வாக்குறுதி அளித்திருந்தது. ஆனால், அதன்பின் 3 ஆண்டுகள் நிறைவடைந்து விட்ட நிலையில், வாக்குறுதியை நிறைவேற்ற திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. அதற்கான காரணம் என்ன? என்பது தெரியவில்லை.

தமிழ்நாட்டில் உள்ள தனியார் நிறுவன வேலைவாய்ப்புகளை தமிழர்களுக்கு மட்டுமே வழங்க வேண்டும் என்ற சட்டம் இயற்றுவதில் எந்த சிக்கலும் இல்லை; தடையும் இல்லை. எனவே, இனியும் தயங்காமல்  தமிழகத்தில் உள்ள தொழிற்சாலைகள் மற்றும் தொழில் நிறுவனங்களில் மாதம் ரூ.40,000 வரை ஊதியம் கொண்ட பணிகளில் 80 விழுக்காட்டை தமிழக இளைஞர்கள், இளம் பெண்களுக்கு வழங்குவதை கட்டாயமாக்கி சட்டம் இயற்ற வேண்டும். துணை மானியக் கோரிக்கைகளை தாக்கல் செய்வதற்காக வரும் அக்டோபர் மாவட்டம் கூடவிருக்கும் சட்டப்பேரவை கூட்டத்தொடரிலேயே தனியார் நிறுவன வேலைகளில் தமிழர்களுக்கு 80% இட ஒதுக்கீடு வழங்கும் சட்டத்தை நிறைவேற்ற வேண்டும்.” என்று வலியுறுத்துள்ளார்.