கன்னியாகுமரி ,நெல்லை, தென்காசி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் பெய்த அதிக கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ள பாதிப்புகள் படிப்படியாக சீரடைய தொடங்கி வருகிறது. இந்த நிலையில் தமிழக ஆளுநர் நடத்திய வெள்ள பாதிப்பு தொடர்பான ஆலோசனை கூட்டத்தில் தமிழக அரசு சார்பில் யாரும் பங்கேற்கவில்லை என குற்றச்சாட்டை தமிழக ஆளுநர் மாளிகை முன் வைத்துள்ளது.
இதுகுறித்து தமிழக ஆளுநர் மாளிகை எக்ஸ் வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், 'தென் மாவட்டங்களில் ஏற்பட்ட மழை வெள்ள பாதிப்புகள் குறித்து தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தலைமையில் கிண்டியில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதில் மத்திய அரசின் உயர் அதிகாரிகள், ராணுவம், கடற்படை, பேரிடர் மீட்பு படை, விமானப்படை, ரயில்வே துறை உயர் அதிகாரிகள், வானிலை ஆய்வு மைய தென் மண்டல தலைவர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.
கூட்டத்தில் பங்கேற்க அழைப்பு விடுத்தும் மாநில அரசும் அதன் பிரதிநிதிகள் யாரும் பங்கேற்கவில்லை. மழை பாதிப்பால் தூத்துக்குடி, நெல்லை ஆகிய மாவட்டங்களில் நிலைமை மோசமாக உள்ளது, மாநில அரசு அழைத்தவுடன் மீட்பு நடவடிக்கைகளை செய்ய மத்திய அரசு துறையில் தயாராக உள்ளதாக அத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர், கூட்டத்தில் பங்கேற்ற சில மத்திய அமைப்புகள் பாதிக்கப்பட்ட பகுதிகளில் முன்னுரிமை அடிப்படையில் மீட்புகளை மேற்கொள்வது தொடர்பாக தெளிவற்ற நிலை இருப்பதாக கவலை தெரிவித்தனர் என்றும் ஆளுநர் மாளிகை சுட்டிக்காட்டி உள்ளது.