தமிழகம், மகாராஷ்டிரா, கேரளா, ஆந்திரா, கர்நாடகா, டெல்லி, மத்திய பிரதேசம், ராஜஸ்தான், குஜராத், சத்தீஷ்கர் உள்ளிட்ட மாநிலங்களில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் அந்தந்த மாநில, யூனியன் பிரதேச அரசுகள் கரோனா தடுப்பு நடவடிக்கைகளையும், கரோனா தடுப்பூசிப் போடும் பணிகளையும் முடுக்கிவிட்டுள்ளன. குறிப்பாக, பெரும்பாலான மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கும், பல்வேறு கட்டுப்பாடுகளும் அமல்படுத்தப்பட்டுள்ளன.
மேலும், மத்திய சுகாதாரத்துறை அமைச்சகமும், மத்திய உள்துறை அமைச்சகமும் அவ்வப்போது, மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுக்கு அறிவுறுத்தல்களை வழங்கி வருகிறது. அதேபோல், கடந்த சில தினங்களுக்கு முன்பு மாநில முதல்வர்கள், ஆளுநர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை நடத்தியிருந்தார்.
இந்த நிலையில், தமிழகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால், கோவிட் கேர் மையங்கள் மீண்டும் செயல்பட தொடங்கியுள்ளன. அதேபோல் வீடு வீடாக சென்று காய்ச்சல் பரிசோதனை செய்யும் முறையும் மீண்டும் நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் படுக்கைகள் அதிகரிக்கப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. மற்றொரு புறம் கரோனா தடுப்பூசிப் போடும் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.
இதனிடையே, கரோனா பரவலைத் தடுக்கும் வகையில் தமிழகத்தில் பல்வேறு கட்டுப்பாடுகளை தமிழக அரசு அமல்படுத்தியுள்ளது. மேலும், இந்த கட்டுப்பாடுகள் பலனளிக்கவில்லை என்றால் இரவு நேர ஊரடங்கை அமல்படுத்த நேரிடும் என்று அரசு எச்சரித்துள்ளது.
வெளிநாடுகள், வெளிமாநிலங்களில் இருந்து தமிழகம் வருபவர்களுக்கு இ- பாஸ் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் தமிழகத்தையொட்டியுள்ள மாநில எல்லை பகுதிகளில் வாகன சோதனையைத் தீவிரப்படுத்தியுள்ளனர் அதிகாரிகள். அதன் தொடர்ச்சியாக, கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் ஜூஜூவாடியில் சோதனைச் சாவடி அமைத்து அதிகாரிகள் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். கர்நாடக மாநிலத்தில் இருந்து வரும் வாகனங்கள் இ- பாஸ் இருந்தால் மட்டுமே தமிழக எல்லைக்குள் அனுமதிக்கப்படுகின்றனர். வெளிமாநிலங்களில் இருந்து இ- பாஸ் இல்லாமல் வரும் வாகனங்கள் திருப்ப அனுப்பப்பட்டு வருகின்றன.
அதேபோல், கன்னியாகுமரி, கோயம்புத்தூர் மாவட்டங்களை ஒட்டிய கேரள மாநில எல்லை பகுதிகளிலும், ஆந்திர மாநிலத்தை ஒட்டிய எல்லை பகுதிகளிலும் அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
பொதுமக்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும்; சமூக இடைவெளியைப் பின்பற்ற வேண்டும்; சோப்பு (அல்லது) கிருமிநாசினியைக் கொண்டு அடிக்கடி கைகளை கழுவ வேண்டும். தகுதி வாய்ந்தவர்கள் கரோனா தடுப்பூசியைப் போட்டுக் கொள்ள வேண்டும் போன்ற அறிவுறுத்தல்களை மத்திய மற்றும் மாநில அரசுகள் தொடர்ந்து வழங்கி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.