Skip to main content

முன்னாள் பெண் மேயருக்கு ஸ்டாலின் இறுதி அஞ்சலி! (படங்கள்)

Published on 24/07/2019 | Edited on 24/07/2019

 

நெல்லையில் நேற்று கொலை செய்யப்பட்ட நெல்லை மாநகராட்சி திமுக முன்னாள் மேயர், அவரது கணவர் உடலுக்கு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

தி.மு.க. முன்னாள் மாநகராட்சி மேயர் உமாமகேஸ்வரி, அவரது கணவர் முருகசங்கரன், மற்றும் அவர்கள் வீட்டு பணிப் பெண் மாரி ஆகிய 3 பேரும் நேற்று மாலை பாளையங்கோட்டை ரெட்டியார்பட்டி ரோஸ்நகர் பகுதயில் உள்ள அவர்களது வீட்டில் இருந்த போது மர்ம நபர்கள் 3 பேரையும் கத்தியால் குத்தி கொலை செய்துவிட்டு தப்பியோடிவிட்டனர். இதனையடுத்து இவர்களது உடல் போலீசாரால் கைப்பற்றப்பட்டு பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு, இன்று காலை 3 பேரின் உடலும் உடற்கூறு பரிசோதனை செய்யப்பட்டு உமாமகேஸ்வரி, அவரது கணவர் உடல்  ரோஸ்நகரில் உள்ள அவரது மகள் இல்லத்திற்கும், பணிப் பெண் மாரியின் உடல் ஆசிரியர் காலனிக்கும் கொண்டு செல்லப்பட்டது.. பின்னர் முன்னாள் மேயர் உமாமகேஸ்வரி, அவரது கணவர் உடலுக்கு தி.மு.க.வினர், அனைத்து கட்சியினர் உறவினர்கள் , பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர்.

பின்னர் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களது இல்லதிற்கு நேரில் வந்து இருவரது உடலுக்கும் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

தொடர்ந்து அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்.

உமாமகேஸ்வரி 1996ல் நான் சென்னை மேயராக இருந்த போது அவர் நெல்லை மாநகராட்சியில் முதல் பெண் மேயராக பதவியேற்று மக்களுக்கு பல சிறப்பான பணிகளை செய்தவர். அரசியலுக்கு அப்பாற்பட்டு பல்வேறு சேவை செய்தவர், கலைஞர் பாராட்டும் வகையில் ஒரு முறை நடைபெற்ற முப்பெரும் விழாவில் பாவேந்தர் விருது வழங்கி பாரட்டப் பெற்றவர். நினைத்து பார்க்க முடியாத சூழலில் நேற்று மூவர் படுகொலை செய்யப்பட்டு இருக்கின்றனர். இந்த ஆட்சியில் தொடர்ந்து இது போன்று சம்பவங்கள் நாள்தோறும் நடந்து வருகிறது, இதற்கு முடிவே இல்லாமல் போய் கொண்டு இருக்கிறது. படுகொலை செய்தவர்களுக்கு உரிய தண்டனை வழங்க வேண்டும் அவர்களது குடும்பத்துக்கு திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் எனது ஆறுதலை தெரிவித்துக் கொள்கிறேன் எனக்கூறினார்.

 

 

 

சார்ந்த செய்திகள்