Skip to main content

ம.க.ஸ்டாலின்  நடத்திய மது ஒழிப்பு போராட்டம்!

Published on 02/03/2019 | Edited on 02/03/2019

 

கும்பகோணத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்தக்கோரி பாமகவில் இருந்து நீக்கப்பட்ட ம.க.ஸ்டாலின் தலைமையில், ம.க.ராஜா நினைவு அறக்கட்டளை சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

 

இந்த ஆர்ப்பாட்டத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்தக்கோரியும்,  மதுவினால் மக்களுக்கு ஏற்படும் தீமைகள் குறித்தும் கோஷங்கள் எழுப்பினர். மேலும் தமிழகம் முழுவதுமாக மதுக்கடைகளை அகற்ற வேண்டும் என்றும் ஒரு கையில் மதுபாட்டிலும் மறுகையில் விழிப்புணர்வு பதாகைகளையும் ஏந்தியவாறு மதுவிற்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.

 

mk

 

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு காவல்துறையின் அனுமதி கிடைக்காததால் நீதிமன்றத்தின் மூலமே அனுமதி பெற்றிருந்தனர். இருந்த போதிலும் பிரச்சினை எதுவும் வந்துவிடக்கூடாது என்பதால் ஆர்ப்பாட்டம் நடக்கும் பகுதியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மகேஸ்வரன் தலைமையில் ஏராளமான போலீசார்  குவித்திருந்தனர்.

 

ஏன் இந்த ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டது. திடீர் என மது ஒழிப்பு போராட்டத்தை ம.க.ஸ்டாலின் கையில் எடுக்க காரணம் என்ன என காவல்துறை வட்டாரத்தில் விசாரித்தபோது,    " ம.க. ஸ்டாலின் ஆடுதுறை பகுதியை சேர்ந்தவர். அவர் மீது சில கொலை வழக்குகளும் உள்ளது. பாட்டாளி மக்கள் கட்சியில் மாவட்டத் தலைவராகவும், பிறகு மாநில இணைச் செயலாளராகவும், இருந்தார். ஸ்டாலினுக்கும் அதே பகுதியை சேர்ந்த லாலி மணிகண்டன் கோஷ்டியினருக்கும் மோதல் ஏற்பட்டு இருபக்கமும் தலைகள் உருண்டன.  

 

m

 

இந்த நிலையில் கட்சியில் இருந்து இவரது நடவடிக்கையை தீவிரமாக கண்காணித்து கட்டம் கட்டி வைத்திருந்தனர்.   இந்த சூழலில் மது ஒழிப்பு  ஆர்ப்பாட்டம் செய்ய பாமக தலைமையிடம் அனுமதி கேட்டார். ஆனால் தீர ஆராய்ந்த பாமக தலைமை அனுமதியை மறுத்துவிட்டது.  அனுமதி மறுக்கப்பட காரணம் இவருடைய இடதுகரமான மணஞ்சேரியை சேர்ந்த ஒருவர் தலைமையில் பல்வேறு இடங்களில் காரைக்காலில் இருந்து மதுபாட்டில்கள் கடத்தி வரப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது.  இதற்கு இடையூறாக லாலி மணிகண்டன் தரப்பும் ஒருபுறம் வியாபாரம் செய்து வருகிறது. வியாபாரத்தில் உள்ள போட்டிக்காக லாலி மணிகண்டனின் விற்பனையை தடை செய்யவே மது ஒழிப்பு நாடகம் நடத்துகிறார் என பாமக மாவட்ட நிர்வாகிகள் மூலமும், காவல்துறை மூலமும் தெரிந்துகொண்டனர்.  இதனால் ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதிகொடுக்க மறுத்தனர்.

 

m

 

கட்சியின் கட்டுப்பாட்டை மீறி ஆர்ப்பாட்டம் செய்வதாக அறிவித்து, ஏற்பாடு செய்தார் ஸ்டாலின்.  இதனை தெரிந்துகொண்ட டாக்டர் ராமதாஸ், ம.க.ஸ்டாலினை கட்சியில் இருந்து நீக்கினார். அதை தொடர்ந்து காவல்துறையும் அனுமதியை மறுத்துவிட்டது. அதன் பிறகு நீதிமன்றத்தின் மூலம் அனுமதி பெற்று  இளைஞர்கள் சிலரை கூட்டி வந்து ஆர்ப்பாட்டம் செய்திருக்கிறார். இது அவருக்கு பாதுகாப்பு என நினைக்கிறார்.

 இதுவே அவருக்கு தலைவலியை உருவாக்கப்போகிறது." என்றார்கள்.

 

s

 

இந்த திடீர் ஆர்ப்பாட்டம்  பாமக கட்சித் தலைமைக்கு எரிச்சலை கொடுத்திருக்கிறது.  இந்நிலையில் திருமங்கலக்குடி பகுதியில் இருந்து ஆர்ப்பாட்டத்திற்கு வந்திருந்த  ம.க. ஸ்டாலின் ஆதரவாளர்களோ, "அண்ணனுக்கு தஞ்சை மாவட்டத்தில் இன்னும் எவ்வளவு செல்வாக்கு இருக்கிறது என்பதை கட்சிக்கு உணர்த்தவே இந்த ஆர்ப்பாட்டத்தை நடத்தி அசத்தினோம். இதை பாட்டாளி மக்கள் கட்சியின் தலைமை நன்கு உணர்ந்து மீண்டும் கட்சியில் இணைத்து அவருக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். இல்லை என்றால் அவர்கள்  எங்கு போட்டியிட்டாலும் வெற்றிபெற விட மாட்டோம்." என்கிறார்கள்.


    

சார்ந்த செய்திகள்