Skip to main content

வேட்பாளர் பட்டியலுடன் கோபாலபுரம் இல்லத்தில் கலைஞர் படத்திற்கு ஸ்டாலின் மரியாதை!

Published on 12/03/2021 | Edited on 12/03/2021

 

 

வரும் சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் கூட்டணி கட்சிகளுக்கு 61 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், 173 தொகுதிகளில் திமுக போட்டியிட உள்ளது. அனைத்து கூட்டணிக் கட்சிகளுக்கும் எத்தனை தொகுதிகள் என அறிவித்த நிலையில், நேற்று முன்தினம் (10.03.2021) திமுக வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும் என்றும் ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.

 

பின்னர் நேற்று மாலை திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியடப்படும் என தகவல்கள் வெளியாகிய நிலையில், தற்போது இன்று (12.03.2021) காலை 10 மணிக்கு திமுக வேட்பாளர் பட்டியல் வெளியாகும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. பல்வேறு அறிவிப்புகளுக்குப் பின்னரும் வேட்பாளர் பட்டியல் வெளியாவது தாமதமாகி வரும் நிலையில், எப்போது வேட்பாளர் பட்டியல் வெளியாகும் என உட்சபட்ச எதிர்பார்ப்பில் உடன்பிறப்புகள் உள்ளனர். இந்நிலையில் வேட்பாளர் பட்டியலை கோபாலபுரத்தில் உள்ள முன்னாள் முதல்வரும், திமுக முன்னாள் தலைவருமான கலைஞரின் இல்லத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் கலைஞரின் படத்திற்கு முன் வைத்து மரியாதையை செலுத்தினார். அதன்பின்  அண்ணா,. கலைஞர் நினைவிடமுள்ள மெரினாவிற்குச் சென்று அங்கும் வேட்பாளர் பட்டியலை வைத்து திமுக தலைவர் மரியாதை செலுத்தினார்.  அதன்பிறகு திமுக வேட்பாளர் பட்டியல் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

இன்று காலை 11 மணிக்கு சட்டமன்றத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் துவங்க இருப்பது குறிப்பிடத்தக்கது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

‘கோவை ரைசிங்’ - திமுக தேர்தல் அறிக்கை வெளியீடு!

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
Coimbatore Rising DMK election report release

நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அந்த வகையில் திமுக, அதிமுக, நாம் தமிழர், பாஜக ஆகிய கட்சிகள் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றன.

இந்நிலையில் கோவை மக்களவைத் தொகுதிக்கான திமுக தேர்தல் அறிக்கையை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா மற்றும் திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார் ஆகியோர் வெளியிட்டனர். இந்த தேர்தல் அறிக்கையில், “கோவை மாவட்டத்தில் பன்னோக்கு சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைக்கப்படும். கோவையில் மெட்ரோ ரயில் திட்டம் விரைந்து மேற்கொள்ளப்படும். சென்னை, கோவை, தூத்துக்குடி இடையே பிரத்யேக சரக்கு வழித்தடம் அமைக்கப்படும். மேட்டுப்பாளையம் - சத்தியமங்கலம் - கோபிசெட்டிபாளையம் - ஈரோடு இடையே அகல ரயில் பாதை திட்டம் நிறைவேற்றப்படும். ரயில் பராமரிப்பு வசதிகள் கோவையில் உருவாக்கப்படும்.

கோவை விமான நிலைய விரிவாக்கப் பணிகள் விரைந்து முடிக்கப்படும். கோவையில் நகர போக்குவரத்து ஆணையம் அமைக்கப்படும். கோவையில் புதிய தொழில் ஹப் தொடங்கப்படும். கோவையில் உள்ள நியாயவிலைக் கடைகளில் தேங்காய் எண்ணெய் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். கோவையில் குறு தொழில் செய்யும் நிறுவனங்களுக்கு தொழில் பூங்கா அமைக்கப்படும். கோவையில் உள்ள நீர்நிலைகளில் நீர் மாசுவைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story

“என்ன தேர்தல் நடக்கிறது என்று கூட அவருக்கு தெரியவில்லை” - தி.மு.க வேட்பாளர் சி.என்.அண்ணாதுரை

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
DMK candidate CN Annadurai crictized edappadi pazhaniswamy for lok sabha election

மக்களவைத் தேர்தல், முதற்கட்டமாக தமிழகத்தில் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெறவிருக்கிறது. ஏப்ரல் 19ஆம் தேதி அன்று தொடங்கப்படும் இந்தத் தேர்தல் நாடு முழுவதும் ஜூன் 1ஆம் தேதி வரை நடைபெற்று, அதில் பதியப்படும் வாக்கு எண்ணிக்கை ஜூன் 4ஆம் தேதி நடைபெற்று அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கின்றன. இந்தத் தேர்தலை எதிர்கொள்ள தமிழகத்தைப் பொறுத்தவரை திமுக, அதிமுக, காங்கிரஸ், பா.ஜ.க உள்ளிட்ட கட்சிகள் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றன. அந்த வகையில், திருவண்ணாமலை மக்களவைத் தொகுதியில் திமுக சார்பில் சி.என்.அண்ணாதுரை வேட்பாளராக நியமிக்கப்பட்டிருக்கிறார். நக்கீரன் சார்பாக அவரைப் பேட்டி கண்டோம். நம்முடைய கேள்விகளுக்கு சி.என்.அண்ணாதுரை அளித்த பேட்டி பின்வருமாறு...

2014 ஆம் ஆண்டு தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்தீர்கள். அதனைத் தொடர்ந்து மீண்டும் 2019 ஆம் ஆண்டு தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றிருந்தீர்கள். அப்போது கொடுத்த தேர்தல் வாக்குறுதிகள் என்ன? இதுவரை தொகுதிக்கு செய்தது என்ன?

“ஒரு நாடாளுமன்ற உறுப்பினராக என்னென்ன வாக்குறுதிகளை கொடுத்தேனோ அதை ஒரு ஆளுங்கட்சி எம்.பி செய்வதை விட அதிகமாக நான் செய்திருக்கிறேன். 300க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு உபகரணங்களை வழங்கி இருக்கிறோம். அதேபோல், கொரோனா காலத்தில் ஏழை எளிய மாணவர்கள் ஆன்லைன் வகுப்பில் கலந்து கொள்ள முடியாத ஒரு சூழ்நிலை ஏற்பட்டது. அதை சரிப்படுத்தும் விதமாக பி.எஸ்.என்.எல் டவர் இரண்டு கட்டமாக அமைக்கப்பட்டுள்ளது. விரைவில் அந்த டவர்கள் எல்லாம் பயன்பாட்டுக்கு வரும். அதிகபட்சமான கிராம சாலைகள், மூன்று ரயில் நிலையங்கள் அமைக்கப்பட்டிருக்கிறது. இதே போல் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தியுள்ளோம்”

இந்த 2024 மக்களவைத் தேர்தலில் என்ன வாக்குறுதி கொடுத்திருக்கிறீர்கள்?

“எதிர்க்கட்சி வரிசையில் நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கும் போது மோடி அரசிடம் பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்தோம். ஆனால், பாஜக தமிழ்நாட்டைத் திட்டமிட்டு புறக்கணித்தார்கள். அதையும் தாண்டி, போராடி சில திட்டங்களை அதிகாரிகளின் துணையுடன் செய்திருக்கிறோம். அந்த வகையில் தொகுதி மக்களுக்காவும், தொகுதி பிரச்சினைக்காகவும் நாடாளுமன்றத்தில் 507 கேள்விகள் கேட்டிருக்கிறேன். தமிழ்நாட்டில் இருந்து அதிகமாக கேள்வி எழுப்பியதில் இது இரண்டாவது இடம் பிடித்திருக்கிறது

மோடி அரசாங்கத்துக்கோ, மோடி அமைச்சரவையில் இருக்கும் அமைச்சர்களுக்கோ தமிழ்நாட்டிற்கு செய்ய வேண்டும் என்று ஒரு துளி கூட அக்கறை இல்லை. திட்டமிட்டு அவர்கள் புறக்கணித்தார்கள். எதிர்க்கட்சி வரிசையில் இருக்கும் போது இவ்வளவு திட்டங்கள் கொண்டு வந்திருக்குறோம் என்றால்  ஆளுங்கட்சி வரிசையில் அனைத்து ஒன்றிய அரசு திட்டங்களையும் கண்டிப்பாக இந்த திருவண்ணாமலை நாடாளுமன்ற தொகுதி கொண்டு வந்து இந்த பகுதி வளர்ச்சிக்கும் மக்களுடைய வளர்ச்சிக்கும் கண்டிப்பாக நான் துணையாக இருப்பேன்”.

திமுக தேர்தல் அறிக்கையும், காங்கிரஸ் தேர்தல் அறிக்கையும் ஒரே மாதிரியாக இருக்கிறதே?

“இந்த இரண்டு கட்சிகளும் ஒத்த கருத்து உடையது தானே. தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இதுவரை தமிழ்நாட்டு வளர்ச்சிக்காக பாடுபட்டார். ஆனால் இந்த தேர்தலுக்குப் பிறகு, இந்தியாவுடைய வளர்ச்சிக்கு ராகுல் காந்தியோடு துணையாக இருந்து செயல்படுவார்”.

காங்கிரஸ் அறிவித்த மகாலட்சுமி திட்டத்தின் மூலம் ஏழைப் பெண்களுக்கு ஒரு லட்சம் கொடுப்பது எப்படி சாத்தியம் என்று எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்து வருகிறார்களே?

“எத்தனையோ கார்ப்பரேட் நிறுவனங்களுக்கும், அம்பானிக்கும், அதானிக்கும் பல லட்சம் கோடி தள்ளுபடி செய்யும் போது, ஏழை மக்களுக்கு கொடுக்கும்போது மட்டும் அது சாத்தியமாகாதா?. இந்த திட்டம் கண்டிப்பாக சாத்தியப்படும். அதனால், தேர்தல் அறிக்கையில் கொடுத்திருக்கிறோம்”.

இந்தியா கூட்டணி வாரிசு கூட்டணி என்றும் ஊழல் குற்றம் இல்லை என்றும் விமர்சனம் செய்து வருகிறார்களே?

“உலக வரலாற்றிலேயே பா.ஜ.க ஆட்சியில் நடந்த மாதிரி ஊழல் எங்கும் இருந்ததில்லை. அவர்கள் அறிவித்த தேர்தல் பத்திரம் திட்டம் கூட ஊழல் செய்வதற்காக கொண்டு வந்தார்கள்”.

திமுக கூட்டணியில் இருக்கும் வேட்பாளர்கள் தான் பொருளாதார பின்னடைவு உள்ள வேட்பாளர்கள். ஆனால், அதிமுக வேட்பாளர்கள் எளிமையான வேட்பாளர்கள் தான் என்று எடப்பாடி பழனிசாமி கூறுகிறாரே?

“போன வாரம் அவர் பிரச்சாரம் செய்யும் போது வருகின்ற சட்டமன்ற தேர்தலில் எங்களுக்கு வாக்களிக்க வேண்டும் என்று பேசி வருகிறார். நாடாளுமன்றத் தேர்தலை சட்டமன்றத் தேர்தல் என்று சொல்கிறார். என்ன தேர்தல் நடக்கிறது என்று கூட அவருக்கு தெரியவில்லை. அவருக்கு என்ன தெரியும்?. கடந்த தேர்தலில் நான் வேட்பாளராக நிற்கும் போது என்ன சொத்து மதிப்பு இருந்தது, இப்பொழுது என்ன சொத்து மதிப்பு இருக்கிறது என்பதை நீங்களே பாருங்கள். ஏற்கெனவே இருந்த சொத்தை எல்லாம் மக்களுக்காக செலவு செய்திருக்கிறோம். ஏனென்றால், மோடி அரசு நாடாளுமன்ற உறுப்பினர் நிதியை எல்லாம் கொரோனாவை காரணம் காட்டி இரண்டு வருடம் நிறுத்திவிட்டார்கள். அந்த சமயத்தில் கூட மக்களுக்கான உதவி செய்திருக்கிறோம். நாங்களும் விவசாய குடும்பத்தை சேர்ந்தவர்கள் தான்” எனக் கூறினார்.