தமிழகத்தில் அடுத்த வாரம் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக அரசியல் கட்சியினர் பரபரப்பாக வேலை செய்து வருகிறார்கள். திமுக தரப்பில் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் தீவிர பிரச்சாரம் செய்து வருகிறார்கள். அதிமுக தரப்பில் எடப்பாடி பழனிசாமி மற்றும் பன்னீர்செல்வம் ஆகியோர் பல்வேறு இடங்களில் பொதுக்கூட்டங்களில் பங்கேற்று பிரச்சாரம் செய்து வருகிறார்கள். இதற்கிடையே தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் திமுக மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தொடர்ந்து காணொளிக் காட்சி வாயிலாக பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.
தூத்துக்குடி மாவட்ட கட்சியினரிடம் நேற்று பிரச்சாரம் செய்த முதல்வர் முக.ஸ்டாலின் இன்று திருப்பூர் மாநகரப் பகுதி நிர்வாகிகளிடம் காணொளி வாயிலாக பிரச்சாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது, " தமிழகத்தில் கடந்த 10 ஆண்டுகளாக அதிமுக ஆட்சியில் எந்த ஒரு முன்னேற்றமும் ஏற்படவில்லை, இது உங்கள் அனைவருக்கும் தெரியும். முன்னேற்றம் இல்லை என்றாலும் பரவாயில்லை, மற்ற மாநிலங்களை விட பின்னோக்கி தமிழகத்தை கொண்டுவந்து சேர்ந்துள்ளனர். ஊழல் செய்வதையே முழுநேர வேலையாக அவர்கள் வைத்துள்ளனர். அதிமுகவை பார்த்தால் இங்கு நல்ல மீன்கள் விற்கப்படும் என்ற நடிகர் வடிவேலு காமெடி தான் நினைவுக்கு வருகிறது. அதுபோல அண்ணாவை இழந்து, திராவிடத்தை இழந்து, முன்னேற்றத்தை இழந்து, கழகத்தை பாஜக-விடம் அடகு வைத்து, தொண்டர்களின் கோபத்துக்கு ஆளாகி, வெற்றுப்பலகையாக அதிமுக நிற்கிறது" என்றார்.