
திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் , இன்று (14-01-2019) கொடநாடு கொலை - கொள்ளை விவகாரம் தொடர்பாக உரிய விசாரணை நடத்திட வேண்டி தமிழக ஆளுநரைச் சந்தித்து நேரில் வலியுறுத்தினார். பின்னர், ஸ்டாலின் செய்தியாளர்களிடத்தில் பேசியபோது,
’’தெகல்கா பத்திரிகையினுடைய முன்னாள் ஆசிரியர் மேத்யூ அவர்கள் இரண்டு நாட்களுக்கு முன்பு டெல்லியில், வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கின்றார். அந்த வீடியோவில் வெளிவந்த செய்திகளைப் பற்றியெல்லாம் உங்களுக்கு மிகத் தெளிவாக தெரிந்திருக்கும். எனவே, அது சம்பந்தமாக தமிழக ஆளுநர் அவர்களை திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் நாங்கள் சந்தித்து ஒரு மனு ஒன்றை அவரிடத்தில் வழங்கியிருக்கின்றோம். அந்த மனுவில் கூறப்பட்டிருக்கக்கூடிய சில முக்கியமான வேண்டுகோளை உங்களிடத்தில் நான் எடுத்துவைக்க விரும்புகின்றேன்.
ஒரு நேர்மையான ஐ.ஜி தலைமையில் சிறப்பு புலனாய்வுக் குழு அமைக்க வேண்டும். பாரபட்சமற்ற சுதந்திரமான விசாரணை நடைபெற வேண்டும் என்று சொன்னால், முதலமைச்சர் பதவியில் இருக்கக்கூடிய எடப்பாடி பழனிசாமியை உடனடியாக அந்தப் பதவியில் இருந்து நீக்கி வைக்க வேண்டும்.
அதுமட்டுமல்ல, முதலமைச்சர் மீதே கொலை குற்றச்சாட்டு சுமத்தப்பட்டிருக்கின்றது. ஆகவே, இந்தத் தகவலை உடனடியாக ஆளுநர் குடியரசுத் தலைவருக்கு தெரிவிக்க வேண்டும் என்றும் எடுத்துச் சொல்லியிருக்கின்றோம். இந்த கொடநாடு பங்களா என்பது ஏதோ தனியார் இடமாக இருந்திடவில்லை. முதலமைச்சராக இருந்து மறைந்த அம்மையார் ஜெயலலிதா அவர்களுடைய முகாம் அலுவலகமாக இருந்து செயல்பட்டிருக்கிறது என்பது இந்த நாட்டிற்கு நன்றாகத் தெரியும். அங்கே, அரசு சம்பந்தப்பட்ட கோப்புகள் கூட இருந்திருக்கின்றது. ஆகவே, நடைபெற்றிருக்கக்கூடிய கொலை – கொள்ளையில் முதலமைச்சராக இருக்கக்கூடிய எடப்பாடி பழனிசாமியினுடைய பெயரை குற்றவாளிகளே சம்பந்தப்படுத்தி அவர் தான் காரணம் என்று தெளிவாகச் சொல்லியிருக்கின்றார்கள்.
எனவே, சம்பந்தப்பட்டிருக்கக் கூடியவரை அழைத்து விசாரணை நடத்தாமல் யார் குற்றம் சொல்லியிருக்கின்றார்களோ, அவர்களை சென்னையில் இருந்து நேற்று இரவு காவலர்கள் தனிப்படைச் சென்று இரண்டு பேரை கைது செய்து கொண்டுவந்து விசாரித்துக் கொண்டிருப்பதாக செய்திகள் வந்திருக்கின்றன. கனகராஜ் மரணம் ஒரு விபத்துதான் என்று இந்த வழக்கை ஏற்கனவே, விசாரித்த எஸ்.பி முரளி ரம்யாவை, முதல்வர் தான் அழுத்தம் கொடுத்து இன்றைக்கு இது சம்பந்தமாக பேட்டியளிக்க வைத்திருக்கின்றார்கள். ஆகவே, இந்தக் கொலை வழக்கில் எஞ்சியிருக்கக்கூடிய தடயங்களை அழிப்பதில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஈடுபட்டிருக்கின்றார்.
அதற்கு, காவல்துறையை அவர் பயன்படுத்திக் கொண்டிருக்கின்றார். கொடநாடு கொலை – கொள்ளைகளுக்குப் பிறகு அடுத்தடுத்து கனகராஜ், தினேஷ்குமார் போன்றவர்களுடைய மரணங்கள், முக்கியமான குற்றவாளியான சயன் போன்றவருடைய விபத்துகள் எல்லாம் இயற்கையான விபத்துகளா? என்கின்ற அந்தக் கேள்வியும் எழுந்திருக்கின்றது.
ஆகவே, கொலை குற்றச்சாட்டிற்கு உள்ளாகி இருக்கக்கூடிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் இன்னும் பதவியில் நீடிப்பது என்பது தமிழகத்திற்கு ஒரு மிகப்பெரிய அவமானம். எனவே, அவர் உடனடியாக பதவி விலகி பாரபட்சமற்ற விசாரணை நடத்துவதற்கு ஒத்துழைப்பு தரவேண்டும் என்று நாங்கள் கேட்டிருக்கின்றோம். இவைகளையெல்லாம், ஆளுநர் அவர்கள் கூர்ந்து கேட்டார். அதை முழுமையாக படித்திருக்கின்றார். நான் என்ன நடவடிக்கை எடுக்க முடியுமோ அந்த நடவடிக்கையை நிச்சயமாக எடுப்பேன் என்ற உறுதியை எங்களிடத்தில் அவர் தந்திருக்கின்றார்.
செய்தியாளர்: இந்த வீடியோ வெளியான அடுத்த நாளே முதலமைச்சர் ஒரு விளக்கம் கொடுத்திருக்கின்றார். அரசியல் காரணமாக இந்தக் குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகின்றது. இதன் பின்புலம் என்ன யார் இருக்கின்றார்கள் என்று கூடியவிரைவில் கண்டறியப்படும் என்று சொல்லியிருக்கின்றார். இது குறித்து உங்களின் பதில்?
ஸ்டாலின்: பின்புலத்தில் யாரும் இருக்க வேண்டிய அவசியம் இல்லை. இதன் பின்புலத்தில் எடப்பாடி பழனிசாமி தான் இருக்கின்றார். அதுதான் எங்களுக்குத் தெரிந்த உண்மை. எனவே, நாங்கள் பின்னால் இருந்து எதுவும் சொல்ல விரும்பவில்லை, வெளிப்படையாக அறிக்கை வெளியிட்டிருக்கின்றேன். வெளிப்படையாக உங்களைப் போன்ற ஊடகத் தோழர்களையெல்லாம் நேற்றைய தினம் அண்ணா அறிவாலயத்திற்கு அழைத்து பேட்டி கொடுத்திருக்கின்றேன். பின்னால், இருந்து இதை யாரும் இயக்கிக் கொண்டிருப்பதாக நான் கருதவில்லை. இந்தப் பின்னணியே எடப்பாடி பழனிசாமி தான்.
செய்தியாளர்: வழக்கைப் பொறுத்தவரைக்கும் 22 முறை நீதிமன்ற விசாரணைக்கு வந்திருக்கின்றது, சயன் மற்றும் மனோஜ் நீதிமன்ற விசாரணைக்கு வந்திருக்கும் போதே என்னுடைய பெயரை சொல்லியிருக்கலாம். ஆனால் இப்போது சொல்வது யாருடைய தூண்டுதல் என்று கேட்டிருக்கிறாரே?
ஸ்டாலின்: குற்றவாளிகளாக இருந்து கைது செய்யப்பட்டு தற்போது ஜாமீனில் இருக்கும் அந்த இருவருமே நேற்றைக்கு முன்தினம் தெளிவாக பேட்டி கொடுத்திருக்கின்றார்களே.
செய்தியாளர்: ஆளுநர் குடியரசுத் தலைவரிடத்தில் இதுகுறித்து தெரிவித்து முறையான நடவடிக்கை எடுக்காவிட்டால் தி.மு.க.,வின் அடுத்தகட்ட நவடிக்கை என்னவாக இருக்கும்?
ஸ்டாலின்: பொறுத்திருந்து பார்ப்போம். ஆளுநர் அவர்கள் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி தந்திருக்கின்றார். நடவடிக்கை எடுக்கவில்லை என்று சொன்னால் தேவைப்பட்டால் குடியரசுத் தலைவர் அவர்களை எங்களுடைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் நேரில் சந்தித்து விளக்கிச் சொல்வார்கள். சட்டப்படி நடவடிக்கை எடுப்பதற்கும் தி.மு.க தயாராக இருக்கின்றது.
செய்தியாளர்: நாடாளுமன்றத் தேர்தல் வரவிருக்கும் சூழ்நிலையில், அ.தி.மு.க அரசை பி.ஜே.பி அரசு கூட்டணி வைப்பதற்காக மிரட்டும் தொணியில் செயல்படுவதாக எடுத்துக் கொள்ளலாமா?
ஸ்டாலின்: உங்களுடைய யூகமான கேள்விகளுக்கெல்லாம் என்னால் பதில் சொல்ல முடியாது. இது ஒரு மிகப்பெரிய கொலை வழக்கு. இந்த கொலைக்குக் காரணமான குற்றவாளியைத் தான் கண்டுபிடிக்க வேண்டும்.
செய்தியாளர்: இந்த வழக்கில் நீதிமன்றத்தை நாடுவீர்களா? ஏனென்றால் பல வழக்குகளில், நீதிமன்றம் மூலமாக விசாரணையை மாற்றியுள்ளீர்களே?
ஸ்டாலின்: : ஏற்கனவே, பலபேர் இதுகுறித்து நீதிமன்றத்திற்குச் சென்றிருப்பதாக செய்திகள் வந்திருக்கின்றன. நாங்கள் முறையாக கவர்னரிடத்தில் சொல்லியிருக்கின்றோம். அடுத்தது ஜனாதிபதியிடம் சொல்லப்போகின்றோம். அதற்கடுத்து நிச்சயமாக சட்டப்படி நடவடிக்கை எடுப்பது பற்றி தி.மு.கழகம் முடிவு செய்யும்.