Skip to main content

தமிழக முதல்வருக்குச் சபாநாயகர் அப்பாவு கடிதம்!

Published on 27/05/2024 | Edited on 27/05/2024
Speaker's father's letter to Tamil Nadu Chief Minister

தமிழகத்தில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாகக் கோடை வெயில் வாட்டி வதைத்து வந்தது. இத்தகைய சூழலில் கடந்த ஒரு சில வாரங்களாகக் கோடை மழை பொழிந்து வருகிறது. அதே சமயம் தமிழகத்தின் பல இடங்களில் கனமழையும் பொழிந்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக திருநெல்வேலி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் மழையின் காரணமாக, இராதாபுரம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட கும்பிகுளம், கோட்டை கருங்குளம், பெருங்குடி ஆகிய‌ கிராமங்களில் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கியது.

இதனைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு சபாநாயகர் அப்பாவு நேரில் சென்று பார்வையிட்டார். அப்போது பயிர் சேதம் குறித்தும், விவசாயிகளுக்கு நிவாரண உதவிகள் வழங்குவதற்கு விரைவான நடவடிக்கை எடுக்குமாறும் அதிகாரிகளை கேட்டுக்கொண்டார். இந்நிலையில் திருநெல்வேலி மாவட்டத்தில் ஏக்கருக்கு 25 ஆயிரம் ரூபாய் செலவு செய்து அறுவடைக்கு தயாராக இருந்த நெல்மணிகள் கடந்த 10 நாட்களாக பெய்த தொடர் மழையால் முற்றிலுமாக முளைத்துவிட்டது. எனவே இத்தகைய சூழலைப் பேரிடராக கருதி, பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க கோருதல் தொடர்பாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு சபாநாயகர் அப்பாவு கடிதம் எழுதியுள்ளார். 

Speaker's father's letter to Tamil Nadu Chief Minister

அதில், “திருநெல்வேலி மாவட்டத்தில் பல பகுதிகளில் நெற்பயிர்கள் விளைந்து அறுவடையும் முடிந்துவிட்டது. சில பகுதிகளில் நீண்டகால பயிர்கள் விளைந்து, அறுவடைக்கு தயாராக இருந்த நேரத்தில், தொடர் மழையின் காரணமாக நெல்மணிகள் தண்ணீரில் மூழ்கி, முழுவதுமாக முளைத்துவிட்டது. இதனால், நெற்பயிர்களும், வைக்கோலும்கூட பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

திருநெல்வேலி மாவட்டம், இராதாபுரம் சட்டமன்றத் தொகுதியில் கடந்த ஒரு வாரமாக பலத்த மழை பெய்து வருகிறது. இதன்காரணமாக, வேளாண் பயிர்கள் மழை நீரினில் மூழ்கி முற்றிலுமாக சேதமடைந்துள்ளது. பணகுடிக்கு அருகிலுள்ள பெரிய புதுகுளம், புஞ்சை குட்டிகுளம் பாசனப் பகுதிகளில், விவசாயிகள் நெல் பயிர் சாகுபடி செய்த, நெல்மணிகள் விளைந்து, அறுவடைக்கு தயார் நிலையில் இருந்து வந்த நிலையில், கடந்த 10 நாட்களாக பெய்த கனமழையால், நெல்மணிகள் முளைத்து, முற்றிலும் சேதமடைந்துள்ளது. அதேபோல், இராதாபுரம் தாலுகா, கும்பிகுளம், பெருங்குடி. திசையன்விளை தாலுகா, கோட்டை கருங்குளம் பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக நெல்மணிகள் கடுமையாக சேதமடைந்துள்ளது. 

Speaker's father's letter to Tamil Nadu Chief Minister

இதேபோல், திருநெல்வேலி மாவட்டம் முழுவதும் பல இடங்களில் நெல்மணிகள் தண்ணீரில் மூழ்கி, சேதமடைந்துள்ளது. ஆகவே, திருநெல்வேலி மாவட்ட நிர்வாகம், மாவட்ட முழுவதும் ஏற்பட்டுள்ள நெல்மணிகளின் சேதத்தை ஆய்வு செய்து, இதனைப் பேரிடராக கருதி, அரசு உரிய அறிக்கை பெற்று, பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகள் அனைவருக்கும் உடனடியாக முழுமையான நிவாரணம் கிடைத்திட ஆவன செய்யுமாறு தங்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார். 

சார்ந்த செய்திகள்