உரிய மனுவின்றி தன்னிடம் தங்களுக்கான கோரிக்கையைத் தெரிவிக்க வரும் மக்களுக்கு தானே மனு எழுதிக் கொடுக்கிற பேரவைத் தலைவர் சபாநாயகர் அப்பாவுவின் செயல்பாடுகள் விழிகளை விரியவைத்திருக்கின்றன.
ஆனாலும் ஒரு சாரார் இது பெரிய விஷயமல்ல. இயல்பிலேயே ஆரம்ப பள்ளி ஆசிரியராக இருந்து மாணவர்களுக்கு பக்குவமாக பாடம் நடத்துவது அவரோடு ஒன்றிப் போனது. அதனால் தான் வாய்மொழி வேண்டாம். மனுவாக எழுதிக் கொடுத்தால் பல மட்டங்களுக்கும் அனுப்பலாம் என்ற அடிப்படையில் அவரே மக்களுக்கான மனுவை எழுதியும், கற்றும் தருகிறார் என்கிறார்கள்.
நெல்லை மாவட்டத்தின் ராதாபுரம் தொகுதியின் எம்.எல்.ஏ.வும் பேரவையின் சபாநாயகரான அப்பாவுவின் இல்லம் பணகுடி அருகே லெப்பைக் குடியிருப்பு எனும் கிராமத்தில் உள்ளது. அவரது இல்லத்திலிருக்கும் அவரது அலுவலகத்திற்கு அன்றாடம் கோரிக்கைகளுடன் தொகுதியின் பாமர மக்கள் முதல் பல்வேறு மக்கள் வருகின்றனர். இதில் பல பேர்களின் மனுக்களைத் தொடர்புடைய அதிகாரிகளுக்கு அனுப்பி உரிய நடவடிக்கை எடுக்க மேற்கொள்கிறார். பரிந்துரைக் கடிதம் தேவைப்படும் மக்களுக்குத் தேவையான கடிதம் கொடுத்து அவர்களின் கோரிக்கைகளையும் நிறைவேற்றி வருகிறார்.
இவர்களில் எழுதப்படிக்கத் தெரியாமல் வரும் பாமர மக்களின் கோரிக்கைகளைக் கேட்டறிந்து சம்பந்தப்பட்ட துறைக்கு அப்பாவுவே மனுவாக எழுதிக் கொடுக்கிறார். அவரின் இந்த அணுகுமுறை அவரைப் பார்க்க வருபவர்களை வியப்படைய வைத்திருக்கிறது.
கோரிக்கைகளை மக்கள் தெரிவிக்கும் போது அதனை எழுத்துப் பூர்வமாக மனுவாக எழுதிக் கொடுத்தால் தான் உரிய அதிகாரிகளின் கவனத்திற்கு நடவடிக்கையின் பொருட்டு கொண்டு செல்ல வாய்ப்பாகும். எங்கள் தொகுதியின் படிக்கத் தெரியாதவர்கள் கோரிக்கைகள், உதவி என்று என்னிடம் வரும் போது அவர்களுக்கு நானே மனு எழுதிக் கொடுத்து உதவுகிறேன். அது என் கடமை என்கிறார் சபாநாயகர் அப்பாவு.
இன்றளவும் தொடர்கிறது அவரது ஆசிரியப் பணி...