புதுக்கோட்டை நகரில் பழைய மருத்துவமனைக்கு அருகே பல வருடங்களாக செயல்படாத சிக்னல் அருகே நகராட்சி சார்பில் ஞாயிற்றுக் கிழமை மதியம் திடீரென பெரிய திண்ணை போல வேகத்தடை அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் அதில், எந்தவிதமான எச்சரிக்கை அடையாளமும் வைக்கவில்லை, வெள்ளைக் கோடுகள் போடவில்லை. சில மணி நேரங்களுக்குள் திடீர் வேகத்தடையில் பலர் கீழே சாய்ந்தனர்.
அதே போல திருச்சி திருவரம்பூர் 2 காவல் நிலைய ஆய்வாளர் பிரியா தன் குழந்தைகளைப் பார்க்க இரவு பேருந்தில் வந்து இறங்கியுள்ளார். அவரது கணவர் புல்லட்டில் வந்து வீட்டிற்கு அழைத்துச் சென்ற போது பிரதான சாலையில் அடையாளமில்லாமல் அமைக்கப்பட்டுள்ள திடீர் வேகத்தடையில் ஏறி இறங்கும் போது பினனால் இருந்த ஆய்வாளர் பிரியா கீழே சாய பின்பக்கம் தலையில் அடிபட்டு படுகாயமடைந்தார்.
படுகாயமடைந்த ஆய்வாளரை அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளித்து மேல் சிகிச்சைக்காக திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் செவ்வாய் கிழமை (09.04.2024) காலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். பெண் காவல் ஆய்வாளர் படுகாயமடைந்த பிறகு யாரோ கோலமாவு வாங்கி அடையாளமிட்டனர். அதன் பிறகு இரவில் நகராட்சி நிர்வாகம் அடையாள வெள்ளைக் கோடுகள் போட்டுள்ளனர்.
இந்த நிலையில் திருச்சி தனியார் மருத்துவமனையில் உயிரிழந்த ஆய்வாளர் பிரியா உடல் அரசு மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டு மாலையில் அவரது சொந்த ஊரான நெடுவாசல் கிராமத்திற்கு கொண்டுவரப்பட்டது. அப்போது புதுக்கோட்டை மாவட்ட எஸ்.பி வந்திதா பாண்டே, டிஎஸ்பிக்கள் ஆலங்குடி பவுல்ராஜ், புதுக்கோட்டை ராகவி, கோட்டைப்பட்டினம் கெளதம் மற்றும் போலீசார் சல்யூட் அடித்து அஞ்சலி செலுத்தினர்.
அனைவரும் அஞ்சலி செலுத்திய பிறகு நடந்த இறுதி ஊர்வலத்தில் எஸ்.பி வந்திதா பாண்டே, உறவினர்களுடன் சேர்ந்து ஆய்வாளர் பிரியாவின் உடலை மயானத்திற்கு தூக்கிச் சென்றது அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியது. தொடர்ந்து ஆய்வாளர் பிரியாவின் உடல் தகனம் செய்யப்பட்டது.
புதுக்கோட்டை நகராட்சியில் தீடீரென அமைக்கப்பட்ட வேகத்தடையில் எச்சரிக்கை அடையாளப் பதாகை, வெள்ளைக் கோடு போடாமல் அலட்சியமாக இருந்ததால், ஆய்வாளர் உயிர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.