கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பசுபதிபாளையம், சின்ன ஆண்டாங்கோவில் உள்ளிட்ட இடங்களில் மளிகை கடைகள் மற்றும் தேநீர் கடைகளில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் பான் மசாலா பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரபாகர் திடீர் ஆய்வில் ஈடுபட்டார். இந்த ஆய்வின்போது மாவட்ட எஸ்.பி பிரபாகரன் நேரடியாக மளிகைக் கடைகள் மற்றும் தேநீர் கடைகளுக்குள் சென்று சல்லடை போட்டு, தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் பான் மசாலா பொருட்களை விற்பனை செய்த கடைகளைக் கண்டறிந்து, அவற்றைப் பறிமுதல் செய்தார்.
தடை செய்யப்பட்ட பொருட்களை விற்பனை செய்த கடைகளுக்கு உணவு பாதுகாப்புத் துறை அதிகாரி மூலம் பூட்டு போட்டு மாவட்ட எஸ்.பி பிரபாகர் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டார். சின்ன ஆண்டாங்கோவில் பகுதியில் அமைந்துள்ள மளிகைக் கடை ஒன்றில் நடந்த சோதனையில் ஒரே ஒரு பாக்கெட் மட்டும் கிடைத்த நிலையில், அந்த கடையின் உரிமையாளர் அபிலாசன் என்பவரை எஸ்.பி உத்தரவின் பேரில், கரூர் நகர போலீசார் விசாரணைக்கு அழைத்துச் சென்றனர்.
மாவட்டம் முழுவதும் 8 தாலுகாக்களில் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை விற்பனை செய்யும் கடைகளை ஆய்வு செய்ய 8 கண்காணிப்பு குழுக்களை அமைத்துள்ளதாகவும், அந்த குழு தொடர் ஆய்வில் ஈடுபட்டு தடை செய்யப்பட்ட பொருட்களை விற்பனை செய்யும் நபர்கள் மீது தொடர் கண்காணிப்பில் ஈடுபட உள்ளதாகவும் ஆய்வின் போது எஸ்.பி பிரபாகர் தெரிவித்தார். இந்த அதிரடி ஆய்வின்போது காவல் ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள், இரண்டு அதிவிரைவு படை போலீசார் உட்பட சுமார் 30-க்கும் மேற்பட்ட போலீசார் உடன் இருந்தனர். மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் இந்த அதிரடி ஆய்வின் காரணமாக கரூர் மாநகராட்சி பகுதியில் பரபரப்பான சூழல் நிலவியது.