கோவையில் தாயை இழந்த சோகத்தில் மகன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.
திருநெல்வேலி மாவட்டம் முக்கூடல் பகுதியைச் சேர்ந்தவர் ஜார்ஜ் வில்லியம். இவரது மனைவியின் பெயர் மல்லிகா. இத்தம்பதிக்கு பென்னிஸ் குமார் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் தாய் மல்லிகா கடந்த ஓராண்டுக்கு முன் இறந்துவிட்டார்.
பென்னிஸ் குமார் கோவையில் உள்ள பாரதியார் பல்கலைக்கழகத்தில் முதலாம் ஆண்டு எம்.பி.ஏ படித்து வந்தார். இவர் கல்லூரியில் சேர்ந்த சிறிது காலத்திலேயே தனது தாயை இழந்துள்ளார். தாயினை இழந்த சோகத்தில் மனஉளைச்சலில் இருந்த பென்னிஸ் குமார், வெளியுலகத் தொடர்புகளை குறைத்துக் கொண்டதாக தெரிகிறது.
இந்நிலையில், நேற்று உடல்நிலை சரியில்லை எனக்கூறி வகுப்பிற்கு செல்லாமல் கல்லூரி விடுதியிலேயே இருந்துள்ளார். வகுப்புகள் முடிந்து நண்பர்கள் வந்து பார்த்த பொழுது பென்னிஸ் குமாரின் அறை உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்தது. ஜன்னல் வழியே பார்த்த போது பென்னிஸ் குமார் தூக்கில் தொங்கிய நிலையில் இருந்ததைக் கண்டு அதிர்ந்த நண்பர்கள், கதவை உடைத்து பென்னிஸ் குமாரை மீட்டுள்ளனர். மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது அவரை பரிசோதித்த மருத்துவர்கள் பென்னிஸ் குமார் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.
தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்தனர். காவல்துறையின் விசாரணையில், கடந்த ஓராண்டாகவே பென்னிஸ் யாருடனும் சரியாக பேசாமல் இருந்துள்ளது தெரியவந்தது. மேலும், பென்னிஸ்குமார் எழுதி வைத்த கடிதத்தை காவல்துறையினர் அவரது அறையிலிருந்து கைப்பற்றினர். அதில், ‘எனது தற்கொலைக்கு யாரும் காரணமில்லை. என் வீட்டில் வைத்து உயிரிழக்க விருப்பமில்லை என்பதால், இங்கு தற்கொலை செய்து கொள்கிறேன். என் உயிரிழப்புக்கும், பல்கலைக்கழகத்துக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை’’ என எழுதப்பட்டிருந்தாக போலீஸார் தெரிவித்தனர்.
இதற்கு முன்னரே பென்னிஸ்குமார் ஒருமுறை தற்கொலைக்கு முயற்சித்ததும், பின்னர் குடும்பத்தினர் அவரை மீட்டு மனநல சிகிச்சை அளித்து படிக்க அனுப்பி வைத்துள்ளனர். இருப்பினும், கல்லூரி விடுதியில் மாணவர் மீண்டும் தற்கொலை செய்து கொண்டது நண்பர்கள் மத்தியிலும் உறவினர்களும் மத்தியிலும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.