தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியைச் சேர்ந்தவர் கருத்தபாண்டியன். 50 வயதான இவர், தான் வசிக்கும் பகுதியில் கூலி வேலை செய்து வருகிறார். இவரது மனைவி மாரீஸ்வரி. இந்த தம்பதிக்கு புஷ்பராஜ் என்ற மகன் உள்ளார். அவருக்கு 26 வயதாகிறது. மேலும், கருத்தபாண்டியன் தனக்கு கிடைக்கும் வருமானத்தில் தனது குடும்பத்தை பாதுகாத்து வந்தார்.
இந்நிலையில், ஆரம்பத்தில் ஒற்றுமையாக இருந்த இவர்களது குடும்பத்தில் காலப்போக்கில் சிறு சிறு விரிசல்கள் ஏற்பட்டு வந்துள்ளது. அதில், கருத்தப்பாண்டியனுக்கும் மாரீஸ்வரிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. அப்போதெல்லாம் அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள், உறவினர்கள் என கணவன் மனைவியின் சண்டையை தீர்த்து வைப்பது வழக்கம். இந்நிலையில், கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு கருத்தப்பாண்டியனுக்கும் மாரீஸ்வரிக்கும் ஏற்பட்ட தகராறு உச்சகட்டத்தை எட்டியுள்ளது. ஒருகட்டத்தில், விரக்தியடைந்த மாரீஸ்வரி தனது குடும்பத்தை விட்டு பிரிந்து தனியாக வாழ்ந்து வந்துள்ளார். இதனிடையே, தன்னுடைய மனைவி தனியாக வாழ சென்றதால் கோபத்தில் இருந்த கருத்தப்பாண்டியன் தனது மகன் புஷ்பராஜுடன் வசித்து வந்தார்.
இத்தகைய சூழலில், தனது குடும்பத்தை விட்டுப்பிரிந்த மாரீஸ்வரிக்கு கணேசமூர்த்தி என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. ஒருகட்டத்தில், இந்த பழக்கம் திருமணத்தை மீறிய உறவாக மாறி இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து வந்தனர். நாளடைவில் கணேசமூர்த்தியும் மாரீஸ்வரியும் சேர்ந்து வாழலாம் என முடிவெடுத்துவிட்டு திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள குப்புசாமி நாயுடுபுரத்திற்கு சென்று மாரீஸ்வரி, கணேசமூர்த்தி மற்றும் அவரது தம்பி ரமேஷ் ஆகியோர் சேர்ந்து அங்குள்ள ஒரு வாடகை வீட்டில் வசித்து வந்தனர்.
அதனைத் தொடர்ந்து, கே.என்.புரம் லட்சுமி மில்ஸ் பகுதியில் சாலையோரமாக தள்ளுவண்டி கடை ஒன்றை நடத்தி வந்து தங்களுடைய வாழ்வாதாரத்தை பாதுகாத்து வந்தனர். இந்நிலையில், தனது தாய் மாரீஸ்வரி திருப்பூரில் இருப்பதை தெரிந்துகொண்ட மகன் புஷ்பராஜ் கடந்த 18 ஆம் தேதியன்று திருப்பூருக்கு சென்றுள்ளார். அப்போது, அங்கு கடையில் இருந்த தாய் மாரீஸ்வரியை வீட்டுக்கு வருமாறு அழைத்துள்ளார். ஆனால், அதற்கு மாரீஸ்வரி மறுப்பு தெரிவிக்கவே இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது, அங்கு மாரீஸ்வரியின் இரண்டாவது கணவர் கணேசமூர்த்தி மற்றும் அவரது தம்பி ரமேஷ் ஆகியோர் இருந்ததால், இருதரப்புக்கும் கைகலப்பு ஏற்பட்டுள்ளது.
அந்த சமயம் ஒருகட்டத்தில் ஆத்திரமடைந்த மகன் புஷ்பராஜ் தான் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து தன்னுடைய தாய் மாரீஸ்வரி மற்றும் கணேசமூர்த்தி ஆகியோரை கண்மூடித்தனமாக வெட்டியுள்ளார். ஒருகணம், இதை பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர் அங்கிருந்து அலறியடித்துக்கொண்டு ஓட்டம் பிடித்தனர். அந்த நேரத்தில், தள்ளுவண்டி கடை அருகே நின்று கொண்டிருந்த ரமேஷ் திடீரென ஓடிவந்து புஷ்பராஜை தடுத்து அவரிடம் இருந்து அரிவாளை பிடுங்கினார். அப்போது, இருவரும் ஒருவரையொருவர் வெட்டிக்கொண்டனர். கடைசியாக இந்த சம்பவத்தில் தகராறில் ஈடுபட்டுக்கொண்டிருந்த மாரீஸ்வரி, கணேசமூர்த்தி, ரமேஷ் மற்றும் புஷ்பராஜ் ஆகிய 4 பேருக்கும் உடலில் பல இடங்களில் வெட்டு காயங்கள் ஏற்பட்டுள்ளது. பின்னர், இச்சம்பவம் குறித்து பல்லடம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் அவர்களிடம் இருந்த அரிவாளை பறிமுதல் செய்து படுகாயமடைந்த 4 பேரையும் மீட்டு பல்லடம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு முதலுதவி மேற்கொள்ளப்பட்டு மேல் சிகிச்சைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இந்நிலையில், இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் இதுதொடர்பாக விசாரணை மேற்கொண்டு வந்தனர். அதில், மாரீஸ்வரி, கணேசமூர்த்தி என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு பல்லடத்தில் வசிப்பது புஷ்பராஜிக்கு தெரிய வந்துள்ளது. இதனால் ஆத்திரத்தில் இருந்த புஷ்பராஜ் அவர்களை அரிவாளால் வெட்டியுள்ளார். மேலும், இந்த விவகாரத்தில் வேறு ஏதாவது காரணங்கள் இருக்குமா? என போலீசார் விசாரித்து வருகின்றனர். தற்போது, திருமணத்தை மீறிய உறவால் பல்லடத்தில் பதுங்கிய தாயை தேடி வந்து அரிவாளால் வெட்டிய சம்பவம், அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.