Skip to main content

தாயின் இறுதிச் சடங்கிற்கு சங்கு ஊதுபவரை அழைத்து வரச் சென்ற மகன் உயிரிழப்பு! 

Published on 05/05/2023 | Edited on 05/05/2023

 

son also passed away on the same day as the mother

 

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் ராமச்சந்திரன்பேட்டையைச் சேர்ந்த சாமிநாதன் என்பவரது தாய் சின்னபொண்ணு. இவர் நேற்று முன்தினம் நள்ளிரவு 12.30 மணியளவில் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார். இவரது இறுதிச் சடங்கு நிகழ்விற்காக விருத்தாசலம் அடுத்த கார்கூடல் கிராமத்தில் உள்ள சங்கு ஊதும் கலைஞர்களை அழைத்து வர மகன் ஞானவேல்(46), தனது உறவினர் பாபு என்பவருடன் இருசக்கர வாகனத்தில் விருத்தாசலம் – சிதம்பரம் சாலையில் நேற்று காலை சென்று கொண்டிருந்தார்.

 

அப்போது பூதாமூர் துணை மின்நிலையம் அருகே சென்றபோது இருசக்கர வாகனம் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சென்டர் மீடியனில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் பலத்த காயமடைந்த ஞானவேல் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். காயமடைந்த பாபு சிகிச்சைக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

 

சம்பவ இடத்திற்கு வந்த விருத்தாசலம் போலீசார் ஞானவேல் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த விபத்து குறித்து  வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தாயின் இறுதிச்சடங்கு நிகழ்விற்காக சங்கு ஊதும் கலைஞரை அழைத்து வரச் சென்ற மகன் சாலை விபத்தில் பலியாகி உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களை மிகுந்த சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கடலூர் உழவர் சந்தை பகுதியில் தேமுதிக பொருளாளர் சுதீஷ் வாக்கு சேகரிப்பு

Published on 14/04/2024 | Edited on 14/04/2024
DMDK Treasurer Sudish Vote Collection at Cuddalore Farmers Market Area

தேமுதிக பொருளாளர் சுதீஷ், கடலூர் நாடாளுமன்ற  அதிமுக கூட்டணி தேமுதிக வேட்பாளர் சிவக்கொழுந்துக்கு   குள்ளஞ்சாவடி பகுதியில்  வாக்கு கேட்டு பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசியதாவது,  இந்த தொகுதியில் போட்டியிடும் சிவக்கொழுந்து ரசிகர் மன்றத்தில் சேர்ந்து சுமார் 40 ஆண்டுகள் பயணித்து உள்ளார். 2006 ல் விஜயகாந்த் கட்சி ஆரம்பித்த போது பண்ருட்டி தொகுதியில் போட்டியிட்டார். பின்னர் அதிமுக, தேமுதிக கூட்டணி 2011 ம் ஆண்டு பண்ருட்டி தொகுதியில் போட்டியிட்டு எம்எல்ஏ சிறப்பாக பணியாற்றியவர்.

அவருக்கு தொகுதியில் என்னென்ன பிரச்சனை இருக்கிறது என்பது நன்றாக தெரியும் சாதாரண குடும்பத்தை சேர்ந்தவர். ஒரு சாதாரண குடும்பத்தை சேர்ந்தவரும் எம்.பியாக்கி அழகு பார்த்தவர் ஜெயலலிதா. திமுகவில்  ரூ.500 கோடி, ஆயிரம் கோடி இருந்தா தான் எம்பி ஆக முடியும்.  இவர் வெற்றி பெற்றால் உங்கள் கோரிக்கைகள்  ஆறு மாதத்தில் தீர்த்து வைப்பார்.  கடலூர் மாவட்டம் எங்கள் சொந்த மாவட்டம்,எனது சகோதரி இந்த மாவட்டத்தில் வசிக்கிறார்.   வேட்பாளர்  சிவக்கொழுத்துக்கு முரசு சின்னத்தில் வாக்களித்து அவரை பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும்  பேசினார்.

அதிமுக கடலூர் தெற்கு மாவட்ட செயலாளர் சொரத்தூர் ராஜேந்திரன்  உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் உடனிருந்தனர். சனிக்கிழமை  காலை கடலூர் அண்ணா விளையாட்டரங்கில் நடை பயிற்சி மேற்கொண்ட வாரே தேமுதிக பொருளாளர் சுதீஷ், நடைபயிற்சி மேற்கொண்டவர்களிடம் வாக்கு  சேகரிப்பில் ஈடுபட்டார்.

இதனைத் தொடர்ந்து  அவர் கடலூர் உழவர் சந்தை பகுதி சென்று அங்கு உள்ள வியாபாரிகளிடம் காய்,கறி விலைகளை கேட்டறிந்து வாக்கு சேகரித்தார்.  தொடர்ந்து அருகில் இருந்த டீக்கடைக்கு சென்று டீ ஆற்றியபடி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். தேமுதிக வேட்பாளர் சிவக்கொழுந்து, முன்னாள் அதிமுக அமைச்சர் சம்பத், அதிமுக, தேமுதிக நிர்வாகிகள் மற்றும் கூட்டணிக்கட்சி நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

Next Story

உயிரைப் பறித்த பாம்பு; தன்னார்வலருக்கு நேர்ந்த சோகம்!

Published on 13/04/2024 | Edited on 13/04/2024
The snake that took the life; Tragedy befell the volunteer

குடியிருப்பு பகுதிகளில் புகுந்து அச்சத்தை ஏற்படுத்தும் பாம்புகளைப் பிடித்து வந்த தன்னார்வலர்  பாம்பு கடித்து உயிரிழந்த சம்பவம் கடலூரில் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் உமர் அலி. பாம்பு பிடிக்கும் தன்னார்வலராக இருந்த உமர் அலிக்கு 2  குழந்தைகள் உள்ளனர். இதனிடையில் நேற்று இரவு பண்ருட்டி முத்தையா நகரில் வீடு ஒன்றில் பாம்பு புகுந்ததாக அவருக்குத் தகவல் கொடுக்கப்பட்டது. அதே நேரம் தீயணைப்புத் துறைக்கும் தகவல் கொடுக்கப்பட்டது. உமர் அலிக்கு முன்பே அங்கு சென்ற தீயணைப்புத் துறையினர் வீட்டில் புகுந்திருந்த நாகப்பாம்பைப் பிடித்து விட்டனர்.

பின்னர் அங்கு வந்த உமர் அலி, அந்தப் பாம்பைக் காப்புக்காட்டில் தான் விட்டு விடுவதாக வனத்துறையிடம் கேட்டுள்ளார். அப்பொழுது அவர் வைத்திருந்த பாட்டிலுக்குள் பாம்பை மாற்றிய போது உமர் அலியைப் பாம்பு கடித்தது. உடனடியாக கடலூர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சைப் பலனின்றி உமர் அலி உயிரிழந்தார்.

இந்தச் சம்பவத்தால் தேவையான பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாமல் தன்னார்வலர்கள் பாம்புகளைப் பிடிப்பதாகவும், இனி கடலூர் மாவட்டத்தில் தன்னார்வலர்கள் பாம்புகளைப் பிடிக்க அனுமதிக்கக் கூடாது எனக் கோரிக்கைகள் எழுந்துள்ளது.