Skip to main content

'இபிஎஸ்சிற்கு பயந்துதான் சில முன்னாள் எம்.எல்.ஏக்கள் அப்படி செய்தார்கள்'-டி.டி.வி.தினகரன் ஓபன் டாக்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
NN

தமிழகத்தில் முதல் கட்ட மக்களவைத் தேர்தல் நடந்து முடிந்திருக்கும் நிலையில் வாக்கு எண்ணிக்கை ஜூன் நான்காம் தேதி நடைபெற இருக்கிறது. மற்ற மாநிலங்களில் தேர்தல் பரப்புரைகளில் அரசியல் கட்சிகள் தீவிரமாக இறங்கி வருகின்றன.

இந்தநிலையில் பாஜக கூட்டணியில் அங்கம் வகிக்கும் அமமுகவின் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் தேனியில் போட்டியிட்ட நிலையில், அங்கு நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசுகையில், ''1999 இல் நான் முதன்முதலாக தேர்தலில் நின்றேன். அப்போதெல்லாம் ஓட்டுக்கு பணம் கொடுக்கும் கலாச்சாரம் இல்லை. 2001 சட்டமன்றத் தேர்தலிலும் கிடையாது. உள்ளாட்சித் தேர்தலிலும் கிடையாது. பாராளுமன்றத் தேர்தலிலும் இல்லை. 2006 சட்டமன்றத் தேர்தலிலும் நான் இங்கு நின்றேன் அப்போதும் தேர்தலில் யாரும் ஓட்டுக்கு பணம் கொடுக்கும் கலாச்சாரம் கிடையாது. 2011 க்கு பிறகு ஓட்டுக்கு பணம் கொடுக்கும் கலாச்சாரம் தமிழக முழுவதும் பரவி விட்டது.

ஆர்.கே.நகரில் போட்டியிட்ட போது கூட நான் ஓட்டுக்கெல்லாம் பணம் கொடுக்கவில்லை. என்னைச் சேர்ந்த சில முன்னாள் எம்எல்ஏக்கள் எடப்பாடி பழனிசாமி ஓட்டுக்கு 6 ஆயிரம், 10 ஆயிரம் கொடுத்ததால் அதற்குப் பயந்து போய் பார்த்த இடத்தில் ஒரு பத்திருவது வீடுகளுக்கு டோக்கன் ஏதோ கொடுத்ததாக தகவல் வந்தது. ஆனால் அதை நான் நிறுத்தி விட்டேன். ஆனால் எல்லாரும் டோக்கன் கொடுத்தார் டோக்கன் கொடுத்தார் என்று சொல்கிறார்கள். இங்கே இந்தத் தேர்தலில் யார் டோக்கன் கொடுத்தார்கள் என்று உங்களுக்குத் தெரியும். நான் தேனியில் நிற்பதால் மட்டும் சொல்லவில்லை தேனி மக்களுக்கு என்னை நன்றாகத் தெரியும். ஏற்கெனவே நான் எம்பியாக இருந்த பொழுது மக்கள் கேட்டதெல்லாம் செய்திருக்கிறேன். ஊர் பொதுக் காரியத்திற்கு அரசாங்கத்தின் மூலம் எல்லாம் செய்ய முடியாது. நான் அவர்களுக்கு தனிப்பட்ட முறையில் என்னால் முடிந்த அளவுக்கு செய்துள்ளேன். அதேபோல் தனி நபர்களுக்கு உதவி செய்திருக்கிறேன். கட்சி ஜாதி வித்தியாசம் இல்லாமல் உதவி செய்திருக்கிறேன்''என்றார்.

சார்ந்த செய்திகள்

 

Next Story

“என்கவுண்டர் சம்பவம் பெரும் சந்தேகத்தை ஏற்படுத்துகிறது” - டிடிவி தினகரன்!

Published on 14/07/2024 | Edited on 14/07/2024
TTV Dhinakaran says chennai thiruvenkadam incident raises doubts

தமிழக பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த 05.07.2024 அன்று இரவு பெரம்பூரில் உள்ள அவரது வீட்டின் அருகே 6 பேர் கொண்ட மர்ம கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக 11 பேர் சரணடைந்த நிலையில் 11 பேரும் கைது செய்யப்பட்டு போலீஸ் கஸ்டடி காவலில் விசாரணைக்காக அனுமதிக்கப்பட்டனர். இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட ஆற்காடு சுரேஷின் தம்பி பொன்னை பாலு, ராமு, திருவேங்கடம், திருமலை, செல்வராஜ், மணிவண்ணன், சந்தோஷ், அருள், கோகுல், விஜேஷ், சிவசக்தி ஆகிய 11 நபர்களும் போலீசார் கஸ்டடியில் எடுக்கப்பட்டு விசாரணை நடைபெற்றது. இத்தகைய பரபரப்பான சூழலில் தான் இந்த வழக்கில் தொடர்புடைய முக்கிய குற்றவாளியான பிரபல ரவுடி திருவேங்கடம் போலீசாரால் என்கவுண்டர் செய்யப்பட்டார்.

இந்நிலையில் இந்த என்கவுண்டர் சம்பவம் தொடர்பாக அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தனது எக்ஸ் சமூகவலைத்தளப்பதிவில், “பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள விசாரணைக் கைதி திருவேங்கடம் என்பவர், சென்னை மாதவரம் அருகே தப்பியோட முயன்ற போது காவல்துறையினரால் என்கவுண்டரில் சுட்டுக்கொலை செய்யப்பட்டிருப்பதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சரணடைந்தவர்கள் குற்றவாளிகள் அல்ல எனவும், உண்மையான குற்றவாளிகளைக் கண்டறிய வேண்டும் என அவரது குடும்பத்தினர் உட்பட பல்வேறு தரப்பினரும் வலியுறுத்திய நிலையில், தமிழகக் காவல்துறை அரங்கேற்றியிருக்கும் என்கவுண்டர் சம்பவம் பெரும் சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.

கொலை நடந்த அன்றே தாமாக முன்வந்து காவல்துறையினரிடம் சரணடைந்த விசாரணைக் கைதி திருவேங்கடம், தப்பியோட முயன்றதன் காரணமாகவே சுட்டுக்கொலை செய்யப்பட்டதாக காவல்துறை விளக்கம் அளித்திருப்பதாக வெளியாகியிருக்கும் செய்தி முன்பின் முரணாக அமைந்துள்ளது. எனவே, விசாரணைக் கைதி திருவேங்கடம் சுட்டுக்கொலை செய்யப்பட்டது தொடர்பாக விரிவான விசாரணை மேற்கொள்வதோடு, ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு நேர்மையாகவும், நியாயமாகவும் நடைபெறுவதை உறுதி செய்ய வேண்டும் எனத் தமிழக அரசை வலியுறுத்துகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார். 

Next Story

டிரம்ப் மீது துப்பாக்கி சூடு; வலுக்கும் கண்டனங்கள்

Published on 14/07/2024 | Edited on 14/07/2024
Firing on Trump; strong condemnations

அமெரிக்காவில் முன்னாள் அதிபர் டிரம்ப் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இதற்கு பல்வேறு தரப்பினரும் தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

வரும் நவம்பர் மாதம் அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெற இருக்கின்ற நிலையில் அமெரிக்காவில் தேர்தல் பரப்புரை தீவிரம் அடைந்துள்ளது. அமெரிக்காவின் பென்சில்வேனியாவில் பரப்புரையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த முன்னாள் அதிபர் டிரம்ப் மீது திடீரென துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது. உடனடியாக அங்கிருந்த பாதுகாப்பு அதிகாரிகள் முன்னாள் அதிபர் டிரம்பை பாதுகாப்பாக அழைத்துச் சென்றனர். இந்த காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

இந்நிலையில் முன்னாள் அதிபர் டிரம்ப் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து முன்னாள் அதிபர் ஒபாமா 'நமது ஜனநாயகத்தில் அரசியல் சார்ந்த வன்முறைகளுக்கு இடம் இல்லை. ட்ரம்ப் விரைவில் குணமடைய வேண்டுகிறேன்' என தெரிவித்துள்ளார். அதேபோல் பிரபல தொழிலதிபரான எலான் மஸ்க் 'டிரம்பிற்கு தனது முழு ஆதரவை அளிப்பதாகவும் தாக்குதலுக்கு பொறுப்பேற்று உளவுத்துறை தலைமை அதிகாரி பதவி விலக வேண்டும்' என்று வலியுறுத்தியுள்ளார். கூகுள் நிறுவனத்தின் சி.இ.ஒ சுந்தர் பிச்சை, அமெரிக்க அதிபர் பைடன் ஆகியோரும் இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ளார். டிரம்ப் மீது நடத்தப்பட்ட இந்த துப்பாக்கிச் சூட்டின் போது அவருடைய ஆதரவாளர் ஒருவர் உயிரிழந்ததாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. அதேபோல் துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்ட  ஒருவரை போலீசார் சுட்டுக் கொன்றதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.