திருச்சியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில், இன்று முதல் ஜூலை 29 வரை மூன்று நாட்கள் ‘வேளாண் சங்கமம் - 2023’ என்ற பெயரில் வேளாண் கண்காட்சி மற்றும் கருத்தரங்கு நடைபெற உள்ளது. இந்நிலையில் முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று காலை ‘வேளாண் சங்கமம் - 2023’ வேளாண் கண்காட்சியைத் தொடங்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து அங்கு அமைக்கப்பட்டுள்ள அரங்குகளைப் பார்வையிட்டார். இந்தக் கண்காட்சியில் 300 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள் கே.என். நேரு, எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், தங்கம் தென்னரசு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி, டி.ஆர்.பி. ராஜா, திருச்சி மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
அதனைத் தொடர்ந்து முதல்வர் மு.க. ஸ்டாலின் கண்காட்சியில் நடைபெற்ற விழாவில் கலந்துகொண்டு பேசுகையில், “சில தினங்களுக்கு முன்பு சென்னையில் நடைபெற்ற உழவர் உற்பத்தியாளர் கண்காட்சியைப் பார்வையிட்டுச் செல்லுகிற நேரத்தில் இன்றைக்குப் பெற்ற உணர்வை அன்றைக்கே பெற்றேன். பழங்கள், காய்கனிகள் ஆகியவற்றை ஒட்டுமொத்தமாக ஒரே இடத்தில் பார்ப்பது என்பது கண்கொள்ளாக் காட்சியாக அமைந்தது. அந்த உணர்வையும் பெரும் வாய்ப்பையும் ஏற்படுத்தித் தந்திருக்கக் கூடிய உழவர் நலன் மற்றும் வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் அவர்களுக்கு நன்றியைக் காணிக்கையாக்க விரும்புகிறேன். திமுக ஆட்சி அமைந்த பிறகு அனைத்துத் துறைகளும் ஒருசேர வளர வேண்டும் என உழைத்து வருவதை நன்கு அறிவீர். அதில் மிகச் சிறப்பான வளர்ச்சியை வேளாண்துறையும் பெற்றுள்ளது. மற்ற துறையைப் போல வேளாண்துறையை நினைத்தவுடனே வளர்த்து விட முடியாது. மற்ற துறையை வளர்க்க நிதிவளம் இருந்தால் போதும். ஆனால் வேளாண் துறையை வளர்க்க நிதித்துறை மட்டுமல்ல, நீர்வளமும் வேண்டும். தேவையான இடுபொருளும் உரிய காலத்தில் கிடைக்க வேண்டும்.
திமுக ஆட்சி அமைந்ததும் நீர்வளமும் கை கொடுத்தது. பருவ மழையும் முறையாகப் பெய்து உழவர்களுக்கு உதவியாக இருந்தது. வேளாண் பெருமக்களுக்குத் தேவையான இடுபொருட்களை வேளாண்துறை உரிய காலத்தில் தேவையான அளவு வழங்கியது. அதனால் உற்பத்தி பெருகியது. உற்பத்திப் பரப்பும் அதிகமானது. மண்ணும் ஈரமானது, உழவர்களின் உள்ளமும் ஈரமானது. மண்ணும் வளர்ந்தது. மக்களும் மகிழ்ந்தார்கள். அதனால்தான் இது போன்ற வேளாண் சங்கமத்தைப் பெருமையோடு நடத்த முடிகிறது. திமுக அரசு அமைந்தவுடன் வேளாண்துறைக்கு என தனி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. பல்வேறு புதிய திட்டங்களைத் தொடங்கி இருக்கிறோம். வேளாண்மை செய்ய ஏதுவாக கடந்த 2 ஆண்டுகளில் ஒரு லட்சத்து 50 ஆயிரம் புதிய மின் இணைப்புகளை வழங்கிச் சாதனை படைத்துள்ளது. அதன் தொடர்ச்சியாக மேலும் 50 ஆயிரம் புதிய மின் இணைப்புகள் இந்த விழாவில் வழங்கப்பட உள்ளன” எனப் பேசினார்.