Skip to main content

பென்னிக்ஸ் கடை வாசலில் கண்ணீர் விடும் நாய்... ஆறுவருட வளர்ப்பு பாசம்...

Published on 11/09/2020 | Edited on 11/09/2020

 

Six years of pet affection ... a dog that sheds tears at the door of a fennix shop ...

 

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் சம்பவத்தில் உயிரிழந்த பென்னிக்ஸின் வளர்ப்பு நாய் டாமி, அவரைத் தேடி அவரின் கடைக்கு வந்து, கடை வாசலிலேயே காத்திருப்பது பார்க்கும் அனைவரின் மனதையும் உருக்கியுள்ளது.
 

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தில் கடந்த ஜூன் மாதம் 20- ஆம் தேதி இரவில் ஊரடங்கு விதிகளை மீறி கடையைத் திறந்து வைத்துள்ளதாகக் கூறி செல்போன் கடை நடத்தி வந்த மகன் பென்னிக்ஸ் மற்றும் தந்தை ஜெயராஜ் இருவரையும் 5 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்த சாத்தான்குளம் போலீசார், இருவரையும் காவல் நிலையம் அழைத்துச் சென்று இரவு முழுக்க கடுமையாக தாக்கியதில் அடுத்தடுத்த நாட்களில் மகன் பென்னிக்ஸ் மற்றும் தந்தை ஜெயராஜ் ஆகிய இருவரும் உயிரிழந்தனர்.

 

சி.பி.சி.ஐ.டி போலீசார் இந்த வழக்கை கொலை வழக்காக பதிவு செய்து காவல் ஆய்வாளர், உதவி காவல் ஆய்வாளர் உட்பட 10 காவலர்களைக் கைது செய்தனர். இதனைத் தொடர்ந்து சி.பி.ஐ இந்த வழக்கை தற்போது விசாரித்து வருகின்றனர். தந்தை ஜெயராஜ், மகன் பென்னிக்ஸ் இருவரின் மீது போடப்பட்ட FIR பொய்யாக ஜோடிக்கப்பட்டது என நீதிமன்றத்தில் சி.பி.ஐ தெரிவித்துள்ளது.

 

இந்தநிலையில் மூன்று மாதங்களாக திறக்கப்படாமல் இருந்த பென்னிக்ஸின் கடை திறக்கப்பட்டதும், பென்னிக்ஸ் வீட்டில் ஆறு வருடமாக பாசமாக வளர்த்த அவரது நாய் டாமி மொபைல் கடை உள்ளே சென்று அவரை தேடி கடையின் உள்புறம் முழுக்க சுற்றிவிட்டு பின் மீண்டும் வாசலில் வந்து சோகத்துடன் படுத்துக் கொள்கிறது. கடையைவிட்டு நகராமல் பென்னிக்சுக்காக காத்திருக்கிறது. முன்பு பென்னிக்ஸ் கடைக்குச் செல்லும்போதெல்லாம் டாமியும் அவருடன் கடைக்குச் செல்லும் என அங்குள்ளவர்கள் கூறுகிறார்கள். 

 

 

 

சார்ந்த செய்திகள்

 

Next Story

மீண்டும் ஒரு சாத்தன்குளம் சம்பவம்? புதுக்கோட்டையில் பரபரப்பு!

Published on 24/06/2024 | Edited on 24/06/2024
Police beaten a person who was taken for questioning in Pudukkottai

போலிசார் அழைத்துச் சென்ற 18 வயது மகன் தற்போது உடலில் படுகாயங்களுடன் சிறுநீரகம் பாதிக்கப்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார். தன் மகன் உயிரை காப்பாற்றவும் தன் மகனை இப்படி தாக்கிய போலிசார் மீது நடவடிக்கை எடுக்க கோரியும் ஒரு தாய் நீதிமன்ற கதவுகளையும், மாவட்ட ஆட்சியர் அலுவலக கதவுகளையும் தட்ட தயாராகி உள்ளார்.

புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி தாலுகாவில் கடந்த 9 ஆம் தேதி முகமூடி அணிந்த 3 பேர் கொண்ட ஒரு கும்பல் ஒரு பெண்ணை தாக்கி தங்க நகைகளை பறித்துக் கொண்டு செல்ல, அந்தச் சம்பவம் குறித்த புகார் மணமேல்குடி காவல் நிலையம் வந்துள்ளது. புகார் கொடுத்தவர்களே சில சந்தேக நபர்களையும் அடையாளம் சொல்ல போலிசார் விச்சூர் அருகே உள்ள அம்மாபட்டினம் அஞ்சல் ஆதிபட்டினம் கிராமத்தைச் சேர்ந்த ரவி மகன் பாண்டியன் (வயது 18) மற்றும் அவரது 17 வயது கூட்டாளியை விசாரணைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். ஆனால் விசாரனையில் நகைகள் கிடைக்கவில்லை.

சில நாட்கள் வரை விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டவர்கள் வீடும் திரும்பவில்லை. சிறைக்கும் அனுப்பவில்லை என்பதால் பாண்டியனின் தாயார் காளியம்மாள் மணமேல்குடி, மீமிசல் காவல் நிலையங்களுக்கு சென்று விசாரித்துள்ளார். ஆனால் அங்கே இல்லை என்று போலிசார் கூறியுள்ளனர். அதே நேரத்தில் திருட்டு போன நகை பற்றி எந்தத் தகவலும் கிடைக்கவில்லை. போலீசார் அழைத்துச் சென்ற தன் மகனை காணவில்லை என மாவட்ட ஆட்சியருக்கு மனு அனுப்பியதுடன் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுத்தாக்கல் செய்ததுடன் வட்ட சட்டப்பணிகள் குழுவிலும், மாவட்ட ஆட்சியரிடமும் புகார் மனு கொடுத்துள்ளார். 

அதன் பிறகு போலிசார் பாண்டியனை வீட்டிற்கு அழைத்து வந்த போது மயங்கி கீழே விழுந்த பாண்டியன் பின்பக்கத்தில் பலத்த அடி காயம் ஏற்பட்டிருந்தது. அத்தோடு மீண்டும் காவலர்களே அழைத்துச் சென்ற நிலையில்  18 ஆம் தேதி கொள்ளுவயல் ஆற்றுப்பால் அருகே 1.150 கிலோ கிராம் கஞ்சாவுடன் வந்த பாண்டியனை கிராம நிர்வாக அலுவலர் முன்னிலையில் கைது செய்ததாக வழக்கு பதிவு, ரேக்ளா பந்தயம் பார்க்கப் போன இடத்தில் பாண்டியனுக்கு காயமடைந்துள்ளதாக வாக்குமூலம் பதிவு செய்து மருத்துவச் சான்றும் பெற்று நீதிமன்றத்திலும் ஆஜர்படுத்தி உள்ளனர். நீதிமன்ற சிறையில் அடைக்க உத்தரவிட்ட நிலையில் புதுக்கோட்டை சிறை நிர்வாகம் காயத்துடன் உள்ளவரை சிறையில் வைக்க முடியாது என்று புதுக்கோட்டை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவிட்டனர்.

மருத்துவமனையில் சேர்த்த பிறகு மருத்துவர்கள் சோதனையில் பாண்டியனின் பின்புறம் இரு பக்கமும் பலத்த காயம் ஏற்பட்டு இதனால் உப்பின் அளவு அதிகரித்து சிறுநீரகம் பாதிக்கப்பட்டு டயாலிஸ் செய்து வருகின்றனர். இந்த நிலையில்தான் போலீசார் விசாரனை என்ற பெயரில் தன் மகனை உணவு, தண்ணீர் கொடுக்காமல் அடித்ததால் சிறுநீரகம் வரை பாதிக்கப்பட்டுள்ளது. அதனால் என் மகன் உயிரை காப்பாற்ற உயர் சிகிச்சை அளிக்க வேண்டும் என்று நீதிமன்றம் மற்றும் மாவட்ட ஆட்சியரை அணுக தயாராகி வருகின்றார்.

சாத்தன்குளம் போல புதுக்கோட்டை மணமேல்குடி சம்பவம் நடந்துள்ளதாக கூறுகின்றனர்.

Next Story

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு; இன்ஸ்பெக்டர் ஜாமீன் மனு தள்ளுபடி

Published on 01/02/2024 | Edited on 01/02/2024
Satankulam father, son case; Inspector dismisses bail plea

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் பகுதியில் கடந்த 2020 ஆம் ஆண்டு கொரோனா காலத்தில் நேரம் கடந்து கடையைத் திறந்து வைத்ததாக விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட தந்தை ஜெயராஜ், மகன் பென்னிக்ஸ் ஆகிய இருவரும் காவல் நிலையத்தில், காவல்துறையினரால் கடுமையாகத் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கினை சிபிஐ விசாரித்து வருகிறது.

இந்த வழக்கில் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், உதவி ஆய்வாளர்கள் பாலகிருஷ்ணன், ரகு கணேஷ், தலைமைக் காவலர்கள் முருகன், சாமிதுரை, காவலர்கள் முத்துராஜா, செல்லத்துரை மற்றும் தாமஸ் பிரான்சிஸ் உள்ளிட்ட 9 பேரை சிபிஐ போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு மதுரை மாவட்ட முதன்மை அமர்வு முதலாவது நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த சூழலில் சாத்தான்குளம் காவல் நிலையத்தில் தந்தை, மகன் தாக்கப்பட்டு உயிரிழந்த வழக்கில் பணி இடைநீக்கம் செய்யப்பட்ட காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் ஜாமின் கோரி 5 வது முறையாக உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

இந்நிலையில் இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, சிபிஐ தரப்பு வழக்கறிஞர், “சாட்சிகளில் ஒருவரான மாஜிஸ்திரேட் பாரதிதாசனிடம் 28 நாட்கள் குறுக்கு விசாரணை நடத்தப்பட்டுள்ளதால், வழக்கின் விசாரணை தாமதமாகிறது” என வாதிட்டார். இதனைப் பதிவு செய்து கொண்ட நீதிபதி, “மாஜிஸ்திரேட் பாரதிதாசனிடம் 28 நாட்கள் குறுக்கு விசாரணை நடத்தினால், அவர் தன்னுடைய பணிகளை செய்வாரா அல்லது தினசரி நீதிமன்றம் வந்து சாட்சியம் அளிப்பாரா?” என சரமாரியாக கேள்வி எழுப்பினார். இதனையடுத்து காவல் ஆய்வாளர் ஸ்ரீதரின் ஜாமின் மனுவை 5 வது முறையாக தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார். ஏற்கெனவே காவல் ஆய்வாளர் ஸ்ரீதரின் ஜாமீன் மனு 4 முறை உயர் நீதிமன்ற மதுரைக்கிளை தள்ளுபடி செய்து உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.