பாளையங்கோட்டையை ஒட்டியுள்ள சீவலப்பேரியில் கடந்த 10ம் தேதியன்று இரவு கூலித் தொழிலாளியான மாயாண்டி (39) என்பவர் மர்ம கும்பலால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். இந்தக் கொலை காரணமாக சீவலப்பேரியில் கொதிப்பும் கொந்தளிப்பும் கிளம்பியது. இது குறித்து சீவலப்பேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து நடத்திய தீவிர விசாரணையில் ஏப். 18 அன்று சீவலப்பேரியின் சுடலைமாடசாமி கோவில் பூசாரியான சிதம்பரத்தின் கொலை சம்பவத்தின் தொடர்ச்சியாக மாயாண்டி படுகொலை செய்யப்பட்டது தெரியவர, வல்லநாடு, வசவப்பபுரம், சீவலப்பேரியைச் சேர்ந்த 13 பேர் கைது செய்யப்பட்டனர். இதில் மூன்று சிறுவர்களும் அடக்கம். மேலும், சிதம்பரம் கொலையில் குற்றஞ்சாட்டியவர்களின் தரப்பின் சாட்சியான பி.டபிள்யு-1வது நபரைக் குறிவைத்ததில் அவர் சிக்காமல் போகவே அவரது உறவினரான மாயாண்டி கொலை செய்யப்பட்டுள்ளார் என்றும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதனிடையே பாதிக்கப்பட்ட மாயாண்டியின் குடும்பத்தாருக்கு நிவாரணம் மற்றும் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை தரப்பட வேண்டும் என்ற கோரிக்கையோடு உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் உடலை வாங்காமல் சாலை மறியல் என 4 நாட்கள் போராட்டம் நடத்தினர். பாதிக்கப்பட்டவர்களின் சார்பில் பேசிய வள்ளிநாயகம், துரை உள்ளிட்ட பிரதிநிதிகளின் உடனான பேச்சுவார்த்தையில் கலெக்டரான விஷ்ணு முதற்கட்டமாக தற்காலிகப் பணி தருவதாக தெரிவிக்க அதனை அவர்கள் ஏற்கவில்லை. நிரந்தரப்பணி, நிவாரணம் வேண்டும் என்று தொடர் போராட்டம் நடத்த ஏரியாவில் பதற்றம் நீடித்தது.
இதனிடையே கொலையான மாயாண்டியின் உறவினர்கள் மற்றும் சமுதாயத் தலைவர்களிடம் சபாநாயகர் அப்பாவு சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தினார். அதில் சிதம்பரம் மற்றும் மாயாண்டி குடும்பத்தினருக்கு அரசு வேலை, உரிய நிவாரணம் அளிக்கப்படும் என சபாநாயகர் அப்பாவு உறுதியளித்தார். அதை ஏற்றுக்கொண்ட உறவினர்கள் உடலைப் பெற சம்மதித்ததால் 5 நாட்கள் நடந்த போராட்டம் முடிவுக்கு வந்தது. சிதம்பரம் மற்றும் மாயாண்டி இரு குடும்பத்தார்களுக்கு அரசு வேலை வழங்குவது தொடர்பாக முதல்வர் ஸ்டாலினிடம் தெரிவித்து குடும்பத்தினரின் கல்வித்தகுதிக்கேற்ப கிராம உதவியாளர், ரேசன் கடை பணியாளர் அல்லது சத்துணவு பணியாளர் வேலை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் சபாநாயகர் அப்பாவு.