/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/20yrs-mary.jpg)
அதிகமாக குறும்புத்தனம் செய்ததால் சூடு வைத்தும், அடித்தும் கொடுமைப்படுத்தியதுடன், 5 வயது சிறுவனை சுவரில் தள்ளிக் கொலை செய்த உறவுக்கார இளம்பெண்ணை போலீசார் கைது செய்தனர். செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்குளத்தூர், இரண்டாவது தெருவைச் சேர்ந்தவர்கள் தியாகராஜன் (35) - சூசை மேரி (30) தம்பதி. இவர்களுக்கு நான்கு குழந்தைகள் உள்ளனர். இவர்களது வீட்டில் போதிய இடம் இல்லாததாலும், சூசை மேரி வேலைக்குச் செல்வதாலும் குழந்தைகளைக் கவனித்துக்கொள்ள முடியாததால் இரண்டாவது குழந்தையான மகள் கீர்த்தி (8), மூன்றாவது குழந்தையான மகன் ஆபேல் (5) ஆகியோரை தாம்பரத்தை அடுத்த பீர்க்கன்காரணை காமராஜர் நகர், எம்.ஜி.ஆர். தெருவில் உள்ள சூசைமேரியின் சகோதரி டார்த்தி வீட்டில் தங்க வைத்துள்ளார்.
இந்த நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு டார்த்தி இறந்துவிட்டார். இதனால் டார்த்தியின் மகள் மேரி (20) இந்த இரண்டு குழந்தைகளையும் கவனித்துவந்தார். நேற்று முன்தினம் (16.09.2021) இரவு குழந்தை ஆபேல் வீட்டில் விளையாடிக்கொண்டிருக்கும்போது திடீரென மயங்கி விழுந்துவிட்டதாக கூறி, குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிறுவனைப் பரிசோதித்த மருத்துவர்கள், ஆபேல் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். மேலும்,உயிரிழந்த சிறுவனின் உடலில் தீக்காயங்கள், நகக்கீறல்கள் உள்ளிட்ட காயங்கள் இருந்ததால் பீர்க்கன்காரணை போலீசாருக்கு மருத்துவமனையிலிருந்து தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் போலீசார்வழக்குப் பதிவுசெய்து சிறுமி கீர்த்தியிடம் விசாரித்தனர்.
அப்போது, மேரிஅடிக்கடி தனது தம்பி ஆபேலை அடிப்பதுடன், சூடும் வைப்பார் என கீர்த்தி தெரிவித்தார். இதுபற்றி மேரியிடம் போலீசார் விசாரித்தபோது, சிறுவன் அதிகமாக குறும்புத்தனத்தில் ஈடுபட்டதால் ஆத்திரத்தில் அவனை அடிக்கடி கையால் அடித்தும், சூடு வைத்தும் கொடுமைப்படுத்தியதாக கூறியுள்ளார். சம்பவத்தன்று மேரி, சிறுவனைப் பிடித்து சுவரில் தள்ளியதாகவும், இதனால் சுவரில் மோதி மயங்கிவிழுந்த ஆபேல் இறந்துவிட்டதாகவும் அவர் ஒப்புக்கொண்டதாக போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து போலீசார், மேரியை கைதுசெய்து மேற்கொண்டு விசாரணை நடத்திவருகின்றனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)