திருச்சி மாவட்டத்தில் புதியதாக 136 பேருக்கு கரோனோ தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை திருச்சியில் 3,889 பேருக்கு கரோனோ தொற்று பாதித்துள்ளது.
திருச்சி மாநகர காவல்நிலையங்களில் 1,800 போலிசார் பணியில் உள்ளனர். கரோனோ வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இந்த சூழ்நிலையில் 3 ஷிப்ட் முறையில் பணி செய்து வருகிறார்கள்.
திருச்சி அரியமங்கலம் காவல்நிலையத்தில் சிறப்பு எஸ்.ஐ.யாக இருந்தவர் சன்னியாசி (வயது 57). இவர் தொடர்ச்சியாக பணியில் இருந்த போது கடந்த சில நாட்களுக்கு முன்பு உடல்நிலை பாதிக்கப்பட்ட நிலையிலும் தொடர்ந்து பணியில் இருந்திருக்கிறார்.
கடந்த 15ம் தேதி அதிக சளி பிரச்சனையின் காரணமான சுவாச பிரச்சனை ஏற்பட்டு உடனடியாக அரசு மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டார். தீவிர சிகிச்சைக்கு பிறகு அப்பல்லோ மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டவர் சிகிச்சை பலனின்றி இறந்து போனார்.
30 குண்டுகள் முழங்க மாநகர ஆணையர் லோகநாதன் மலர் அஞ்சலி செலுத்தினார். எஸ்.ஐ. சன்னாசி கரோனோ தாக்குதலில் இறந்தார் என செய்தி பரவிய நிலையில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் சளி அதிகமாகி சுவாச பிரச்சனையில் இறந்தார். கரோனோ தொற்று இல்லை என்று அறிக்கை வெளியிட்டு இருந்தது.
நாம் எஸ்.ஐ. சன்னாசி இறப்பு குறித்து அவருடைய மகன் பாலாஜியிடம் பேசினோம். அவர் நம்மிடம், “சார். எங்க அப்பாவுக்கு குடி, சிகரெட் என எந்த கெட்டபழக்கமும் கிடையாது, அவருக்கு தேவையான தண்ணீர், சாப்பாடு எல்லாமே அவரே எடுத்துகிட்டு போயிடுவார். அவர் பிரஷருக்கு மட்டுமே மருந்து எடுத்துக்கொண்டு கடைசி வரை பணியில் இருந்தார்.
திடீர் என மூச்சு திணறல் ஏற்பட்டு பெட்டவாய்தலை மருத்துமனையில் பார்த்தபோது, கரோனா அறிகுறிபோல் இருப்பதால் அரசு மருத்துமனையில் அனுமதித்தோம். கரோனா டெஸ்ட் எடுத்தாங்க. அவரை கரோனா அறிகுறி வார்டில் வைத்திருந்தார்கள். ஆனால் அங்கு இருந்த 5 நாளில் மூச்சு விட சிரமப்பட்டார். அதற்கான ஊசி, எல்லாம் போட்டு நார்மலில் வைத்திருந்தார்கள். அங்கிருந்த மருத்துவர்கள் எல்லோரும் இது கரோனோ அறிகுறிதான் என்றார்கள். ஆனால் டெஸ்ட் ரிசல்ட் மட்டும் கரோனா நெகட்டிவ் என்று வந்தது.
கரேனோ நெகட்டிவ் என்று சொன்னாலும், தொடர்ச்சியாக சளி பிரச்சனையில் மூச்சுவிட சிரமப்பட்டார், 5 நாட்களுக்கு பிறகு சிகிச்சை ஏதுவும் இல்லாமல் அப்படியே இருந்து விட்டார்கள்.”
அப்பா இருந்த வார்டில் எல்லோருக்கும் இதே பிரச்சனைதான், அனைவருக்கும் கரோனோ நெகட்டிவ், ஆனால் அவர்களில் ஒவ்வொருவராக தினமும் இறந்து கொண்டே இருந்தார்கள், அதனால் எங்களுக்கு பயமாகி விட்டது, அதனால் அப்பாவின் சிடி ஸ்கேன் ரிப்போர்ட் எடுத்துக்கொண்டு, திருச்சியில் உள்ள கே.எம்.சி. அப்பல்லோ, சுந்தரம் மருத்துமனை மருத்துவர்களிடம் பேசினோம், இந்த சிடி ஸ்கேன் ரிப்போட் அடிப்படையில் கரோனோ தொற்றுதான், என்று அனைத்து மருத்துவர்களும் சொன்னார்கள், ஆனால் ரிசல்ட்டில் நெகட்டிவ் என்று வருகிறதே என்று சொல்லி மருத்துவர்கள் எங்களை குழப்பினார்கள்.
இந்த குழப்பத்திலே தொடர்ச்சியாக 4 நாட்கள் தனியார் மருத்துமனைக்கு மாற்றுவதற்கு பெரும் முயற்சி செய்தோம், எல்லா மருத்துமனைகளும் இடமே இல்லை என கை விரித்தார்கள், கடைசியில் பெரும் முயற்சிக்கு பிறகு அப்பல்லோவில் இடம் கிடைத்தது.
அரசு மருத்துமனையில் இருந்து ஆம்பலன்ஸில் கொண்டு செல்ல அரசு மருத்துமனையில் சிலிண்டரே இல்லை என்பதுதான் கொடுமை. அதனால் வேற வழியில்லாமல் வெளியில் இருந்து சிலிண்டரை ரெடி பண்ணி, அப்பல்லோ ஆம்பலன்ஸில் கொண்டு வந்து சேர்த்தோம். அப்பல்லோவில் கரோனா வார்ட்டில் கொண்டு போய் சேர்த்தார்கள். ஒரு நாள் சிகிச்சைக்கு பிறகு இறந்து போனார் என்று அறிவித்தார்கள். அதன்பிறகு கரோனா டெஸ்ட் எடுத்தார்கள் முடிவு கரோனா நெகட்டிவ் என்று வந்தது. ஆனாலும் கரோனா பாதிப்பு ஏற்பட்டால் இறந்தால் எப்படி உடலை பாதுகாப்புடன் கொடுப்பார்களோ அப்படி கவர் செய்யப்பட்ட உடையில் சுருட்டி கொடுத்தார்கள், கடைசியில் ஊருக்கு கொண்டு செல்லாமல் ஓயாமரி சுடுகாட்டிலே இறுதி அஞ்சலி செய்தோம். இப்போது வரை எங்களுக்கு குழப்பமாகவே இருக்கிறது என்றார்.
இதற்கு இடையில் திருச்சி மாநகரில் பணியாற்றி வரும் போலிசார் கரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து தங்களை பாதுகாத்து கொள்ளும் வகையில், கவனமாக பணியாற்ற வேண்டும் என்று திருச்சி மாநகர காவல்துறை ஆணையர் அறிவுறுத்தியுள்ளார்.
இந்த நிலையில் திருச்சி மாநகரில் 2 இன்ஸ்பெக்டர், ஒரு பெண் எஸ்.ஐ., போக்குவரத்து சிறப்பு பிரிவு எஸ்.ஐ., உள்ளிட்ட 8 போலிஸாருக்கு கரோனோ தொற்று ஏற்பட்டுள்ளது. இவர்களில் 5 பேர் அரசு மருத்துமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். மற்ற 2 பேர் வீடுகளிலும், ஒருவர் முகாமிலும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.
திருச்சி மாநகரில் ஏற்கனவே 40 பேர் கரோனா பாதிப்பில் இருந்து மீண்ட நிலையில் தற்போது மீண்டும் போலிஸாருக்கு கரோனா தொற்று அதிகரித்து வருவது போலிஸார் மத்தியில் பெரிய அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.