Skip to main content

எச்.ராஜா பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும் - எச். ராஜாவுக்கு சீமான் எச்சரிக்கை

Published on 12/12/2018 | Edited on 12/12/2018
seeman



திருமாவளவனை இழிவுபடுத்திப் பேசிய எச்.ராஜா பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும். அதனைச் செய்யத் தவறும் பட்சத்தில் கடும் எதிர் விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என எச். ராஜாவுக்கு எச்சரிக்கை விடுக்கிறேன் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.

 

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 


 
திருமாவளவன் தொட்டக் கட்சியை மக்கள் தொடமாட்டார்கள் எனப் பாஜகவின் தேசிய செயலாளர் எச்.ராஜா கூறியிருப்பதை வன்மையாகக் கண்டிக்கிறேன். ஆரிய மேலாதிக்க மனநிலையோடு கூறியிருக்கும் இக்கருத்து ஒட்டுமொத்தத் தமிழர்களையே இழிவுசெய்து காயப்படுத்துகிறது. தமிழ்ச்சமூகத்தின் முதன்மைத் தலைவர்களுள் ஒருவராக இருக்கிற அண்ணன் திருமாவளவனைச் சாதிய வட்டத்திற்குள் சுருக்கி அதன்மூலம் தமிழர்களைப் பிரித்தாண்டு வீழ்த்த துடிக்கும் இந்துத்துவத்தையும், அதன் இந்நச்சுப் பரப்புரையையும் வீழ்த்தி முடிக்க வேண்டியது அவசியமாகிறது.

 

தொல்குடிச் சமூகத்திற்கான அரசியலை முன்னெடுத்து ஒடுக்கப்பட்ட மக்களின் விடிவுக்காக அரசியல் களத்தில் அயராது பாடுபட்டுக் கொண்டிருக்கிற விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனை இழிவுப்படுத்த முனையும் எச்.ராஜாவின் பார்ப்பனீயத்திமிரையும், அதிகார மமதையையும் ஒருநாளும் சகித்துக் கொள்ள முடியாது.

 

தமிழர்களுக்கு எதிராகத் தொடர்ச்சியாக நஞ்சை உமிழ்ந்து வரும் எச்.ராஜாவின் அநாகரீக அரசியலும், அவரது அறுவெருக்கத்தக்க விமர்சனங்களும் தமிழக அரசியல் களத்தில் தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்துகின்றன. இவையாவும் தமிழகத்தில் பாஜகவிற்கு இறுதிச் சடங்கை செய்யத்தான் உதவுமே ஒழிய, எவ்வித வளர்ச்சியையும் பெற்றுத் தரப் போவதில்லை என்பதைத் தமிழகப் பாரதிய ஜனதா கட்சியினர் உணர்ந்துகொள்ள வேண்டும்.

 

தமிழகம் முழுவதும் மக்கள் செல்வாக்கினைப் பெற்றிருக்கிற ஒரு அரசியல் பேரியக்கம் விடுதலைச் சிறுத்தைகள். அது அடித்தட்டு விளிம்பு நிலை மக்களுக்காகவும், மண்ணின் உரிமை மீட்புக்காகவும் பாடுபட்டுக் கொண்டிருக்கிறது. அதனைக் குறை சொல்வதற்கோ, விமர்சிப்பதற்கோ பாஜகவிற்கு எவ்விதத் தகுதியும் இல்லை. தமிழகத்தில் ஒரு கட்சி மக்களாலும், பிற கட்சிகளாலும் தீண்டத்தகாதக்கட்சியாக ஒதுக்கித் தள்ளப்பட்டுத் தமிழகத்தில் தனிமைப்படுத்தப்பட்டு இருக்கிறதென்றால் அது பாஜகதான். அக்கட்சியானது, தமிழகம் முழுவதும் கிளைப் பரப்பி மண்ணின் மக்களுக்கான அரசியலை செய்து வரும் விடுதலைச்சிறுத்தைகளைத் தீண்டத் தகாத கட்சியென்று கூறுவது நகைப்புக்குரியது.

 

ஒடுக்கப்பட்ட மக்களின் உயர்வுக்காகப் போராடிக் கொண்டிருக்கிற அண்ணன் திருமாவளவனைப் பற்றிப் பேசுவதற்கு அணுவளவும் உரிமையோ, தகுதியோ அற்றவர் எச்.ராஜா. அண்ணன் திருமாவின் அரசியல் நிலைப்பாடுகளில் எங்களுக்கு முரண்கள் இருக்கலாம்; கருத்தியலில் வேறுபடலாம். ஆனால், இவற்றையெல்லாம் கடந்து திருமாவளவன் எங்கள் மூத்தவர். அவர் மீதான இக்களங்கத்தையும், அருவெறுக்கத்தக்க விமர்சனத்தையும் ஒருநாளும் பொறுத்துக் கொள்ள முடியாது.

 

வடநாட்டில் இருந்து தமிழகத்திற்குப் பிழைக்க வந்து தமிழர்களின் தயவிலும், பெருந்தன்மையிலும் வாழ்ந்துகொண்டு மண்ணின் மக்களை இழித்துரைத்துப் பேசிவிட்டு எச்.ராஜா சர்மா போன்றோர் பாதுகாப்பாக வீடு திரும்ப முடிகிறதென்றால் தமிழர்கள் உயரியச் சனநாயகவாதிகள் என்பது மட்டும்தான் அதற்குக் காரணம். ஆகவே. எச்.ராஜா இதுபோன்ற பேச்சுக்களை இத்தோடு நிறுத்திக் கொள்வதுதான் அவருக்கும், அவரது கட்சிக்கும் பாதுகாப்பாக இருக்கும்.

 

அண்ணன் திருமாவளவன் குறித்துக் கூறிய கருத்தை எச்.ராஜா உடனே திரும்பப் பெற வேண்டும் எனவும், அக்கருத்துக்குப் பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும் எனவும் வலியுறுத்துகிறேன். அதனைச் செய்யத் தவறும் பட்சத்தில் கடும் எதிர் விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என எச். ராஜாவுக்கு எச்சரிக்கை விடுக்கிறேன். இவ்வாறு கூறியுள்ளார். 
 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பிரகாஷ்ராஜுக்கு அம்பேத்கர் சுடர் விருது!

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
vck president thirumavalavan anoounced 20204 ambedkar sudar award to prakash raj

பிரகாஷ் ராஜ், நடிப்பைத் தாண்டி சமூக நலன் சார்ந்த பணிகள், அரசியல் என மற்ற தளங்களிலும் பயணித்து வருகிறார். மேலும் சமூக வலைத்தளத்தில் பிரதமர் மோடி குறித்தும், மத்தியில் ஆளும் பாஜக அரசு குறித்தும் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகிறார். நாடாளுமன்ற தேர்தல் நடந்து வரும் நிலையில் ஏழு கட்ட வாக்குப்பதிவில், இரண்டு கட்ட வாக்குப்பதிவுகள் நடைபெற்று முடிந்துள்ளது. அந்த வகையில் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவின் போது, பெங்களூருவில் வாக்களித்த பிரகாஷ் ராஜ், மாற்றத்திற்காக மற்றும் வெறுப்பிற்கு எதிராக வாக்களித்ததாக கூறினார். 

இந்த நிலையில் வி.சி.க. சார்பில் பிரகாஷ் ராஜுக்கு விருது அறிவிக்கப்பட்டுள்ளது. வி.சி.க. சார்பில் தமிழகம் மற்றும் இந்திய அளவில் ஆண்டுதோறும் சமூகம், அரசியல், பண்பாடு, கலை-இலக்கியம் போன்ற தளங்களில் சிறப்பாக தொண்டாற்றும் நபர்களுக்கு, ‘அம்பேத்கர் சுடர், பெரியார் ஒளி, காமராசர் கதிர், அயோத்திதாசர் ஆதவன், காயிதேமில்லத் பிறை மற்றும் செம்மொழி ஞாயிறு’ ஆகிய பெயர்களில் விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. 

2007ஆம் ஆண்டு முதல் இந்த விருதுகள் வழங்கப்பட்டு வரும் நிலையில், 2024ஆம் ஆண்டிற்கான ‘அம்பேத்கர் சுடர்’ விருதை பிரகாஷ்ராஜுக்கு வழங்குவதாக வி.சி.க. சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக வி.சி.க. வெளியிட்டுள்ள அறிக்கையில், “மதச்சார்பின்மைக்காக சமரசமில்லாமல் போராடி வருபவர் பிரகாஷ்ராஜ்” என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த விருதுகள் அடுத்த மாதம் 25ஆம் தேதி, (25.05.2024) சென்னையில் நடைபெறுமென அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 26ஆம் தேதி நடந்த இரண்டாம் கட்ட தேர்தல் வாக்குப்பதிவின் போது திருமாவளவனும்,பிரகாஷ் ராஜும் சந்திப்பு மேற்கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த ஆண்டுக்கான அம்பேத்கர் சுடர் விருது சி.பி.ஐ. (எம்.எல்) கட்சியின் பொதுச் செயலாளர் தீபங்கர் பட்டாச்சார்யாவிற்கு வழங்கப்பட்டது நினைவுகூரத்தக்கது.  

Next Story

'வாக்கு செலுத்தினால் லைட் எரியவில்லை' - போராட்டத்தில் ஈடுபட்ட நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கைது

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
Naam Tamilar Party candidate arrested for protesting

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

அந்த வகையில் தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறவுள்ளது.  இந்நிலையில் காலை 7 மணி முதல் வாக்காள பெருமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அதேபோன்று அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் என பலரும் தங்களின் வாக்குகளை வாக்குச்சாவடிகளில் செலுத்தி வருகின்றனர்.

தமிழகத்தில் பிற்பகல் 3 மணி நிலவரப்படி சராசரியாக 50 சதவீதத்திற்கும் மேலாக வாக்குப்பதிவு நடந்துள்ளது. இந்நிலையில் மத்திய சென்னையில் பல்லவன் இல்லத்தின் அருகே உள்ள 165 வது பூத்தில் நாம் தமிழர் கட்சிக்கு வாக்கு செலுத்தினால் லைட் எரியவில்லை என புகார் எழுந்தது. தொடர்ந்து நாம் தமிழர் கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் கார்த்திகேயன் வாக்குச்சாவடியில் பார்வையிட்டார். இது தொடர்பாக புகாரையும் எழுப்பினார். ஆனால் அவர் வாக்குச்சாவடியில் இருந்து வெளியேற்றப்பட்ட நிலையில் நாம் தமிழர் கட்சியினர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். தற்போது தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கார்த்திகேயன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். வாக்குச்சாவடியில் சர்ச்சை நீடித்த  நிலையில் திருவல்லிக்கேணி காவல் உதவி ஆய்வாளர் ஆகியோர் வாக்குச்சாவடிக்கு வருகை தந்துள்ளனர்.