புதுக்கோட்டை மாவட்டத்தில் அதிக மக்கள் தொகை கொண்ட பெரிய கிராமம் கொத்தமங்கலம். சுற்றியுள்ள பல கிராம மக்களும் வெளியூர்களுக்கு செல்ல தினசரி ஆயிரக்கணக்கான மக்கள் வந்து பஸ் ஏறும் கிராமம். இங்குள்ள கடைவீதியில் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு 2 டாஸ்மாக் செயல்பட்டு வந்தது. இந்த கடைகளால் பெண்கள், மாணவ, மாணவிகளுக்கு பாதிப்பு ஏற்படுவதாக கூறி 2 டாஸ்மாக் கடைகளையும் மூடக்கோரி பொதுமக்கள் அதிகாரிகளுக்கு பல முறை மனு கொடுத்தும் நடவடிக்கை இல்லாத நிலையில் மதுப்பாட்டில்களை மாலையாக அணிந்து வந்து கிராமசபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றினர். அதன் பிறகும் அதிகாரிகள் மெத்தனம் காட்டியதால் கடந்த 2017 ம் ஆண்டு மே 20 ந் தேதி டாஸ்மாக் கடைகளை மூடும் வரை காத்திருப்பு போராட்டம் நடத்துவதாக அறிவித்து பந்தல் அமைத்து பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பெண்களின் போராட்டத்தையடுத்து அங்கு வந்த டாஸ்மாக், கலால், வருவாய்த்துறை அதிகாரிகள் அருகில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் மக்கள் பிரதிநிகள், போராட்டக் குழுவினருடன் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தியதில் அதிகாரிகள் சில வாரங்களில் கடையை மூடுவதாக உறுதி அளித்தனர். அதனை எழுதி கையெழுத்திடச் சொன்ன போது அதிகாரிகள் கையெழுத்திடாமல் அங்கிருந்து வெளியேற முயன்ற போது அங்கு திரண்டிருந்த பெண்கள் அதிகாரிகள் காலில் விழுந்து கதறி அழுது கையெழுத்திடச் சொன்னதையும் மதிக்காமல் வெளியேற முயன்றதால் தகவல் வெளியே தெரிந்து போராட்டப் பெண்கள் மண்டபத்தை முற்றுகையிட்டு அதிகாரிகளை வெளியேறவிடாமல் தடுத்ததுடன் இனியும் அதிகாரிகள் ஏமாற்றத் தான் நினைக்கிறார்கள் என்று சிலர் சொன்ன போது.. கூட்டத்தில் நின்ற ஆயிரக்கணக்கான பெண்கள் திரண்டு சென்று 2 டாஸ்மாக் கடைகளையும், பார்களையும் அடித்து உடைத்தனர். அதன் பிறகு இரு கடைகளும் மூடப்படுவதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்தது. அதன் பிறகும் டாஸ்மாக் கடைகள் வந்துவிடக் கூடாது என்று கிராம சபைக் கூட்டம், ஊராட்சி மன்ற சாதாரணக் கூட்டங்களில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
ஆனால், கடந்த ஆண்டு மீண்டும் டாஸ்மாக் கடை திறக்கப்பட்ட போது பொதுமக்கள் மீண்டும் போராட்டம் செய்ததால் மீண்டும் டாஸ்மாக் கடை மூடப்பட்டது. இந்த நிலையில் தான் கடந்த சில வாரங்களுக்கு முன்பு மீண்டும் டாஸ்மாக் கடை திறக்கப்பட்டதால் கடந்த வாரம் வெள்ளிக்கிழமை பொதுமக்கள் கடையை முற்றுகையிட்டு போராட்டம் செய்தனர். அதே நேரத்தில் எங்களுக்கு டாஸ்மாக் கடை வேண்டும். டாஸ்மாக் கடை இல்லாமல் வர்த்தகம் பாதிப்பதாக கூறி டாஸ்மாக் கடையை திறக்க கோரி பலர் திரண்டு முழக்கமிட்டனர். இரு தரப்பாக பிரிந்து இரு வேறு கோரிக்கைகளை முன்வைப்பதால் ஆலங்குடி வட்டாட்சியர் விசுவநாதன், டிஎஸ்பி தீபக் ரஜினி ஆகியோர் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தும் வரை டாஸ்மாக் கடை திறப்பதில்லை என்று அதிகாரிகள் உறுதி அளித்தனர்.
இந்த நிலையில் அக்டோபர் 2 நடந்த கிராமசபைக் கூட்டத்திலும் மீண்டும் டாஸ்மாக் கடை வேண்டாம் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்ட நிலையில் டாஸ்மாக் கடையை திறக்க வேண்டும் என்று மற்றொரு தரப்பு கையெழுத்து இயக்கம் நடத்தினர். இந்த நிலையில் வெள்ளிக்கிழமை மாலை ஆலங்குடி வட்டாட்சியர் அலுவலகத்தில் சமாதான கூட்டம் என்று அழைப்புக் கொடுத்திருந்த நிலையில் சமாதானக் கூட்ட நாளிலேயே டாஸ்மாக் கடையை திறக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்து கொத்தமங்கலத்தில் கடையடைப்பு போராட்டம் அறிவித்து கடைகளையும் அடைத்திருந்தனர். ஏராளமான கடைகள் மூடப்பட்டிருந்த நிலையில் ஆங்காங்கே கடைகள் திறந்திருந்தது.
இந்த நிலையில் ஆலங்குடி வட்டாட்சியர் அலுவலகத்தில் நடந்த பேச்சுவார்த்தையில், சட்டம் ஒழுங்கு பிரச்சனையை பாதுகாக்கும் பொருட்டு மேலும் 15 நாட்களுக்கு டாஸ்மாக் கடையை திறப்பதில்லை. அதற்குள் நீதிமன்றம் மூலம் தீர்வு பெற்று வர வேண்டும் என்று கூட்டத்தில் முடிவானது. இந்த முடிவையடுத்து டாஸ்மாக் வேண்டாம் என்ற தரப்பினர் திங்கள் கிழமை சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பொதுமக்கள், பெண்கள், மாணவ, மணவிகள், விளைநிலங்களுக்கு பாதிப்ப ஏற்படுத்தும் டாஸ்மாக் கடை வேண்டாம் என்று வழக்கு தொடுக்க தயாராகி வருகின்றனர். பல ஊர்களில் டாஸ்மாக்கை மூடக்கோரி பொதுமக்கள் கடை வியாபாரிகள் கடையடைப்பு, போராட்டங்கள் செய்து வரும் நிலையில் கொத்தமங்கலத்தில் மட்டு மாற்றி யோசித்து வர்த்தகம் பாதிக்காமல் இருக்க டாஸ்மாக்கை திற என்று கோரிக்கை வைத்து கடையடைப்பு செய்திருந்தது பரபரப்பாக பேசப்பட்டுள்ளதுடன், பல்வேறு விமர்சனங்களையும் எழுப்பியுள்ளது.