மதுரையில் கறி விருந்தின்போது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மதுரை மாவட்டம் திருமங்கலம் அடுத்துள்ள காட்டுப் பத்ரகாளியம்மன் கோவிலில், ரியல் எஸ்டேட் தொழில் செய்து வரும் தனசேகரன் என்பவர் கறி விருந்து நிகழ்ச்சி நடத்தியுள்ளார். இதில் அவரது உறவினர்கள் மற்றும் நண்பர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர். அப்பொழுது வந்திருந்த நண்பர்கள் சிலர் மது அருந்திக் கொண்டிருந்த பொழுது வாக்குவாதம் ஏற்பட்டது. அப்பொழுது மற்றொரு ரியல் எஸ்டேட் தொழிலதிபரான வேதகிரி என்பவர் காரில் இருந்த கைத்துப்பாக்கியை எடுத்து வந்து வானத்தை நோக்கிச் சுட்டுள்ளார். இதனால் அந்த இடமே பரபரப்புக்குள்ளானது.
இதுகுறித்து உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், போலீசார் அங்கு விரைந்து சென்றனர். ஆனால், சம்பந்தப்பட்ட நபரான வேதகிரி அங்கிருந்து தப்பித்துச் சென்றுவிட்டதாகக் கூறப்படுகிறது. அதனைத் தொடர்ந்து வேதகிரியின் அலுவலக உதவியாளர் சக்திவேல் மற்றும் கணபதி என்ற இருவரைப் பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருமங்கலம் கோட்டாட்சியர் மற்றும் வட்டாட்சியர் ஆகியோர் துப்பாக்கிச்சூடு நடைபெற்ற இடத்தில் ஆய்வு செய்தனர். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வசந்தகுமார் தலைமையில் போலீசார் துப்பாக்கிச்சூட்டில் ஈடுபட்ட வேதகிரியைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர். கறி விருந்தின்போது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்ட சம்பவம் மதுரை திருமங்கலத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.