கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை அருகில் உள்ளது செங்குறிச்சி டோல்கேட். இது சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், உளுந்தூர்பேட்டை ரயில் நிலையம் அருகில் அமைந்துள்ளது. இந்த இடத்தில் 24 மணி நேரமும் சுங்கக் கட்டணம் வசூலிப்பதும் அவ்வப்போது காவல்துறை சோதனை மேற்கொள்வதும் தொடர்ந்து நடைபெற்றுவரும்.
இந்த டோல்கேட் பகுதியில் சாலையின் இருபுறங்களிலும் 20க்கும் மேற்பட்ட சைவ, அசைவ ஹோட்டல்கள், ஸ்பெஷல் பிரியாணி ஹோட்டல்கள், இனிப்பு, மிட்டாய் கடைகள் என ஏகப்பட்ட கடைகள் இருக்கின்றன. 24 மணி நேரமும் பரபரப்பாக இயங்கும் அந்த டோல்கேட் பகுதியில் ஸ்பெஷல் பிரியாணி ஹோட்டல் ஒன்று செயல்படுகிறது.
கடந்த 3 நாட்களாக பிரியாணி கடையில் வசூலான மொத்த தொகை 5 லட்சம் ரூபாயை, அந்த ஹோட்டல் கேசியர் அழகு, அவரது உதவியாளர் கார்த்திக் உள்ளிட்ட ஊழியர்கள் இரவு 1 மணி அளவில் கடையிலுள்ள கல்லாப் பெட்டியில் வைத்து பூட்டிவிட்டுச் சென்றுள்ளனர். நேற்று காலை ஹோட்டலைத் திறந்தபோது ஹோட்டலின் பின்பக்கம் உள்ள கதவின் பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்துள்ளது.
இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த ஊழியர்கள், கல்லாப் பெட்டியை திறந்து பார்த்தபோது அதில் இரவு வைத்த ரூ.5 லட்சம் பணம் கொள்ளை அடித்துச் செல்லப்பட்டது தெரியவந்துள்ளது. தகவல் அறிந்த உளுந்தூர்பேட்டை டி.எஸ்.பி. விஜயகுமார், இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன், சப்-இன்ஸ்பெக்டர் செல்வநாயகம் மற்றும் போலீசார் கைரேகை நிபுணர்கள் உள்ளிட்டோர் கொள்ளை நடந்த அந்த ஹோட்டலில் பதிவான கைரேகையை ஆய்வு செய்தனர்.
ஹோட்டல் பகுதிகளில் இருந்த கண்காணிப்பு கேமராவைக் காவல்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அதில் அதிகாலை நேரத்தில் ஹோட்டலுக்குள் புகுந்து ஒரு வாலிபர் கல்லாப் பெட்டியை இரும்புக் கம்பியால் திறந்து, அதில் இருந்த பணத்தை எடுத்துச் சென்று, ஹோட்டலின் பின் பகுதியில் ஒரு இடத்தில் வைத்து கட்டுகளாகக் கட்டி, அதன் பிறகு சாவகாசமாக எடுத்துச் சென்ற காட்சிகள் கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தன.
மேலும், ஹோட்டல் ஊழியர் ஒருவரின் செல்ஃபோனையும் கொள்ளையர்கள் எடுத்துச் சென்றதால் அந்த செல்ஃபோன் டவர் இருக்கும் இடம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். அதன்மூலம் சேலம் மாவட்டம் ஆத்தூர் பகுதியில் அந்த செல்ஃபோன் இருப்பதாக தெரியவந்துள்ளது. இதையடுத்து தனிப்படை போலீசார், கொள்ளையரைப் பிடிக்க அவர் பதுங்கியுள்ள பகுதிக்கு விரைந்து சென்றுள்ளனர்.
சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் 24 மணி நேரமும் நடமாட்டம் உள்ள பரபரப்பான டோல்கேட் பகுதியில் உள்ள ஹோட்டலில் புகுந்து ரூ.5 லட்சம் பணத்தைக் கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.