வழக்கறிஞர் ஒருவர் கொரோனாவிற்கு பிறகும் இரண்டு வருடங்களுக்கு மேலாக தங்களது குடும்பத்தாரை வீட்டில் அடைத்து வைத்து துன்புறுத்துவதாக வெளியாகியுள்ள தகவல் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் பழைய ஸ்டேட் பேங்க் காலனி தெருவில் வசித்து வருபவர் பேசியஸ் அலெக்சாண்டர்-மாலதி தம்பதியினர். இவர்களுக்கு பட்டப்படிப்பு முடித்த இரண்டு மகள்கள் உள்ளனர். கடந்த இரண்டு ஆண்டுகளாக இவர்களது குடும்பத்தைச் சேர்ந்த யாரும் வீட்டை விட்டு வெளியே வராத நிலையில் தந்தையான அலெக்சாண்டர் குடும்பத்தாரை வீட்டுக்குள்ளேயே பூட்டி வைத்து கொடுமைப்படுத்துவதாக புகார் எழுந்தது.
புகாரை அடுத்து சமூக நலத்துறை அதிகாரி சரோஜினி தலைமையில் தீயணைப்புத் துறை அதிகாரிகள் மற்றும் போலீசார் அங்கு சென்றனர். வீட்டின் வெளிப்பக்க கேட் உள்பக்கமாக பூட்டிய நிலையில் அதை திறக்க வலியுறுத்தியும் யாரும் திறக்கவில்லை. இதனால் எகிறி குதித்து உள்ளே புகுந்த தீயணைப்பு வீரர்கள் பூட்டிய வீட்டிற்குள் நின்று கொண்டிருந்த வழக்கறிஞரான பெர்சியஸ் அலெக்சாண்டரிடம் பேச்சு கொடுத்தனர். அப்பொழுது பெர்சியஸ் அலெக்சாண்டரின் மனைவி மாலதி 'எங்க எல்லோருக்கும் கொரோனா வந்து இருக்குன்னு கொண்டு போகணும் அவ்வளவு தானே உங்களது திட்டம்' என்று கேள்வி எழுப்பினார். பின்னர் பேசிய மாலதி தங்களுக்கு சொந்தமான கடையில் இருந்து கொண்டு வாடகை தராமல் ஒரு நபர் தங்களை கொல்ல முயற்சிப்பதாகவும், அவரால் தங்களது உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும், இதனால் தங்களை தாக்குவதற்கு சிலர் மறைந்திருப்பதாகவும் அதனால் தாங்கள் வீட்டுக்குள்ளே இருப்பதாகவும் தெரிவித்தார்.
அப்பொழுது தீயணைப்பு அதிகாரி ஒருவர் பெர்சியஸ் அலெக்சாண்டரிடம் 'இரண்டு வருடங்களுக்கு முன்பு கடைக்கு முன்பாக பிரார்த்தனை எல்லாம் செய்து கொண்டிருக்கிறீர்களே' என கேட்டதற்கு 'ஆமாம் அதைத்தான் இங்கே செய்து கொண்டிருக்கிறோம்' என்றார் பெர்சியஸ். இப்படி எந்தவிதத்திலும் பிடிகொடுக்காமலும் சரியான காரணத்தை சொல்லாமலும் குடும்பத்தினர் வீட்டை விட்டு வெளியே வராமல் அடம்பிடிக்கும் இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.