
திருச்சி மாவட்டம் பனையக்குறிச்சியில் நபர் ஒருவர் பட்டப்பகலில் ஓட ஓட விரட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பான பதறவைக்கும் சிசிடிவி காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் பனையக்குறிச்சி பகுதியை சேர்ந்தவர் ஜெயபால். கொத்தனார் வேலை பார்த்து வந்த ஜெயபால் போதைக்கு அடிமையானவர் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் ஜெயபாலுக்கும் அதேபகுதியைச் சேர்ந்த சில நபர்களுக்கும் முன்விரோதம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் இன்று வழக்கம்போல் மதுபோதையில் நின்று கொண்டிருந்த ஜெயபால் அரிவாளுடன் முன்விரோத கும்பலிடம் மிரட்டும் தொனியில் பேசினார். அதனைத் தொடர்ந்து விரட்டி வந்த கும்பல் ஜெயபாலை வெட்ட முயன்றது. அதனைத் தொடர்ந்து ஓட்டம் பிடித்த ஜெயபாலை ஓட ஓட விரட்டிய அந்த கும்பல் அவரை வெட்டியது. இடுப்பு மற்றும் கழுத்து பகுதியில் பயங்கரமாக வெட்டப்பட்டதால் சம்பவ இடத்திலேயே ஜெயபால் உயிரிழந்தார். இது தொடர்பான பதறவைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி சமூக வலைத்தளங்களில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இக்கொலை சம்பவம் குறித்து தகவலறிந்த திருச்சி மாவட்ட எஸ்.பி சுஜித்குமார் சம்பவத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.